Published:Updated:

`காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி கள்ளத்திருமணம் போன்றது' - பொன்னார் சாடல்!

`காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி கள்ளத்திருமணம் போன்றது' - பொன்னார் சாடல்!
`காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி கள்ளத்திருமணம் போன்றது' - பொன்னார் சாடல்!

காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி ஓடிப் போய் செய்துகொள்ளும் கள்ளத் திருமணம் போன்றது என ராமநாதபுரத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காட்டமாகத் தெரிவித்தார்.

பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா நாளை (22-ம் தேதி) மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் வருகிறார். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக ஹெலிபேட் தளத்திலிருந்து பட்டணம்காத்தான் ஆத்மநாதசாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் காலை 11.30 மணிக்கு, நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணிகளை மத்திய சாலை, கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை பார்வையிட்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் ``வரும் 22-ம் தேதி ராமநாதபுரத்துக்கு வருகைதரும் தேசியத் தலைவர் அமித் ஷா, கிழக்கு மாவட்ட நாடாளுமன்றத் தொகுதிகளின் பா.ஜ.க பொறுப்பாளர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக மதுரையில் அப்பகுதி நாடாளுமன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.

மத்திய அரசு இந்த முறை தமிழக அரசுக்கு உள்ளாட்சிமன்ற நிர்வாகங்களுக்காக ரூ.876 கோடியும், நகர்ப்புற நிர்வாகங்களுக்காக 831 கோடியும் வழங்கியுள்ளது. அதற்கு முன்னதாக ரூ.1,500 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க - பா.ஜ.க இடையே அமைந்துள்ள கூட்டணி கட்டாய திருமணம் என எதிர்க்கட்சித் தலைவர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது. பெற்றோருக்கு எதிராக, உறவினர்களுக்கு எதிராக, சொந்த பந்தங்களுக்கு எதிராக, நண்பர்களுக்கு எதிராக  ஓடிப்போய் கள்ளத் திருமணம் செய்துகொள்வதை போன்று  தி.மு.க, டெல்லிக்கு ஓடிப்போய் காங்கிரஸுடன் கூட்டணி பேசியுள்ளது. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி பற்றி பேச அத்தகைய தி.மு.க-வுக்கு அருகதை இல்லை. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறைப்படி நடந்துள்ளது. கூடா நட்பு கேடில் முடியும் எனக் கருணாநிதியே கூறியுள்ளார். இதுதான் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி. பிரதமர் நரேந்திர மோடி அரசு வர வேண்டும் என விரும்பும் கட்சிகள் யாராக இருந்தாலும் பா.ஜ.க கூட்டணியில் இணைந்துகொள்ளலாம் என்றார்.
 பேட்டியின்போது மாநில பா.ஜ.க துணைத் தலைவர்கள் குப்புராமு, பி.டி.அரசகுமார், சுப.நாகராஜன், கருப்பு முருகானந்தம், மாவட்டச் செயலாளர் ஆத்ம கார்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.