Published:Updated:

``நீர்நிலைகளை டெண்டர் விடுவதில் ஊழல்கள்தான் நடந்தேறுகின்றன!’’ - அறப்போர் இயக்கம்

``நீர்நிலைகளை டெண்டர் விடுவதில் ஊழல்கள்தான் நடந்தேறுகின்றன!’’ - அறப்போர் இயக்கம்
``நீர்நிலைகளை டெண்டர் விடுவதில் ஊழல்கள்தான் நடந்தேறுகின்றன!’’ - அறப்போர் இயக்கம்

சென்னையில் உள்ள நீர்நிலைகளை மாநில அரசு முறையாகப் பராமரிக்கத் தவறியதால், தமிழகப் பொதுப்பணித்துறைக்குப் பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தைச் சார்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பவர் வழக்கு ஒன்றை சென்னைப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார். அவற்றுக்கான விசாரணையானது, பல ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், கடந்த 13-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையில், “தமிழக அரசு முறையாக நீர்நிலைகளைப் பராமரிக்காததால் நீராதாரமும் சுற்றுச்சூழலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகப் பொதுப்பணித்துறை 100 கோடி ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும்” எனப் பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஏற்கனவே பெருநகரச் சென்னை உள்கட்டமைப்புப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டதில் உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் பல அமைப்புகளைச் சார்ந்தவர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதேபோல் தி.மு.க சார்பாக, ``இதுகுறித்து சிறப்புப் புலனாய்வு விசாரணை அமைக்க வேண்டும்’’ என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அதேபோல், ``கடந்த டிசம்பர் மாதத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் ‘பேக்கேஜ் டெண்டர்' என்ற புதிய முறையைக் கொண்டுவந்து அதன்மூலம் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் அரசியல் பின்புலங்கள் இல்லாமல் இந்த முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை’’ என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் வேறுசில ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சி ஆணையாளரைச் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இந்நிலையில், தமிழக அரசின் நீர்நிலைகளைப் பராமரிப்பதில் கொண்டுள்ள அலட்சியப் போக்கைக் கண்டித்து மத்திய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கியுள்ள 100 கோடி ரூபாய் அபராதம் ஒருபுறம் இருக்க... மறுபுறம், சென்னையின் நீர்நிலையங்களைப் பராமரிக்க, குளங்களுக்கு 25 லட்சம் ரூபாய் என நிதி ஒதுக்கப்பட்டு அவற்றுக்காக டெண்டர்களும் விடப்பட்டுள்ளன. ஆனால், எந்த டெண்டர்களும் முறைப்படி செயல்படுத்தப்படாததால் குளங்கள் மோசமான நிலையில்தான் உள்ளன என்ற குற்றச்சாட்டுகளும் சமீபத்தில் எழுந்தன. அதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் மக்கள் வரிப் பணத்தில் டெண்டர் எடுப்பவர்களும் தங்களின் கடமையில் இருந்து விலகும்போது  நீர்ப் பற்றாக்குறையாலும் சுற்றுச்சூழல் மாசடைவதாலும் தமிழகத்தின் நீர் மேலாண்மைதான் கேள்விக்குள்ளாகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தமிழக அரசுக்குப் பசுமைத் தீர்ப்பாயம் விதித்துள்ள 100 கோடி அபராதம் குறித்து அறப்போர் இயக்கத்தைச் சார்ந்த ஹாரிஸ் சுல்தான், “2012-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம், கூவம் நதியை இறந்த நதியாக அறிவித்தது. ஆனால், 1950-களில் இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் நதி இப்போது கூவம் இருப்பதைவிட மோசமான நிலையில் இருந்தது. அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் எடுத்த கொள்கை முடிவுகளாலும், நாட்டு மக்களின் ஒத்துழைப்பாலும் நதி மீட்கப்பட்டது. ஆனால், தமிழக நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கு முறையான செயல் திட்டங்கள் இல்லாமல் வெறும் நிதியை மட்டும் ஒதுக்கி டெண்டர் விடுவதால் எந்தப் பயனும் இல்லை. டெண்டர் விடுவதில் ஊழல்கள்தான் நடந்தேறுகின்றன. ஒப்பந்ததாரர்களும் வெறும் பணத்தைச் செலவுசெய்தோம் எனக் கணக்குக் காட்டுவதற்காக, கடமைக்குத்  தேவையில்லாமல் தூர்வாருகின்றனர். அதேபோலத்தான் சென்னையில் உள்ள குளங்களைப் பராமரிக்க 7 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஒரு குளம்கூட முறையாகப் பராமரிக்கப்படவில்லை. அரசு திட்டங்களைக் கொண்டுவரும்போது அந்தத் திட்டங்களை மக்கள் முன்னிலையில் வைத்து அவர்களின் கருத்துகளைப் பெறுதல் அவசியம். ஏற்கெனவே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் முறையாகச் செயல்படுத்தாத நிலையில் இப்போது விதிக்கப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் அபராதத்துக்கும் மக்களின் வரிப்பணம்தான் வீணடிக்கப்படுகிறது” என்றார்.

நீரின்றி அமையாது உலகு!