Published:Updated:

கூடாத கூட்டணிகள்... இழுக்கும் தொகுதிப் பங்கீடு! தெற்கில் திணறும் காங்கிரஸ்?

``எப்படியும் இம்மாத இறுதிக்குள் அனைத்தையும் அறிவித்துவிடுவோம்” என்று சொல்லிவருகிறார்கள் அங்கிருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள். 

கூடாத கூட்டணிகள்... இழுக்கும் தொகுதிப் பங்கீடு! தெற்கில் திணறும் காங்கிரஸ்?
கூடாத கூட்டணிகள்... இழுக்கும் தொகுதிப் பங்கீடு! தெற்கில் திணறும் காங்கிரஸ்?

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஆரம்பித்துவிட்டது தேர்தல் ஆணையம். அநேகமாக, மார்ச் முதல்வாரத்தில் தேதி அறிவிப்பு இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ், பி.ஜே.பி உள்ளிட்ட தேசியக் கட்சிகளும் மாநிலக் கூட்டணிக் கட்சிகளும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

தேர்தல் பணிகளில், ஆரம்பத்தில் சுணக்கம் காட்டிய பி.ஜே.பி, இப்போது அதிரடி காட்ட ஆரம்பித்திருக்கிறது. மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டைச் சுமுகமாக முடித்துள்ளனர். ஆனால், ‘வாழ்வா சாவா’ நிலையில் களமிறங்கும் காங்கிரஸ், சில மாநிலங்களில் தொடர்ந்து இழுபறியைச் சந்தித்து வருகிறது. அதில், கர்நாடகா, கேரளா, தெலங்கானா போன்ற தென்னிந்திய மாநிலங்கள் முக்கியமானவை.

ஒருவழியாக, தமிழ்நாட்டில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியின் தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டது. மொத்தம் 10  தொகுதிகள் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட, இரண்டு மாதத்துக்கும் மேலாக இழுஇழு என்று இழுத்து தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். அதற்குள் குளிர்காலம் மறைந்து கோடைக்காலமே வந்துவிட்டது. அரசர் சென்று அழகிரியும் வந்துவிட்டார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் மீது செம கடுப்பில் இருக்கிறார் முதல்வர் குமாரசாமி. இதுவரை பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. இருக்கும் 28 இடங்களில், 10 இடங்களுக்கு குறிவைக்கிறார் குமாரசாமி. ஆனால், “நான்கு அல்லது ஐந்துதான் முடியும்” என்று கறார் காட்டுகிறது காங்கிரஸ். “நான்கைந்து இடங்களைப் பெற்றுக்கொள்ள நாங்களொன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல” என்று கொதித்திருக்கிறார் குமாரசாமி. பதிலுக்கு சித்தராமையா, “நாங்களும் பிச்சைக்காரர்கள் அல்ல என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்” என்று திருப்பியடித்திருக்கிறார். இதுவும் குமாரசாமி கடுப்புக்குக் காரணம்.

காங்கிரஸ் கொஞ்சம் அசந்தால், தனிக்கடை விரிக்கவும் தயங்காத கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம். அதன் வரலாறு அப்படி! அப்படியொரு தருணம் வாய்க்குமென்று வாசலைத் திறந்து காத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா. ``இங்கே வாங்க” என்று இரவுபகலாகத் தூது அனுப்பிக்கொண்டு இருக்கிறார் அவர். ஆனாலும், நெருக்கிப்பிடித்து முடித்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. என்னவொன்று... பேரம் முடியும்வரை சித்தராமையா பேசாமல் இருக்க வேண்டும்!

கேரளத்திலும் இழுபறி நீடிக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிமும் கே.எம்.மணி தோற்றுவித்த கேரளா காங்கிரஸும் இந்த முறை அதிக இடங்கள் கேட்கின்றன. ஆனால், காங்கிரஸ் அதற்குத் தயாராக இல்லை. ஏனென்றால், காங்கிரஸுக்குச் சாதகமான சூழல் அங்கே நிலவுகிறது. அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளும் அதையே சொல்கின்றன. அதனால், இருவருக்கும் சேர்த்து இரண்டு இடங்களை ஒதுக்கிவிட்டு, மீதித் தொகுதிகளில் போட்டியிடத் தயாராகி வருகிறது காங்கிரஸ். 

இன்னொருபுறம், `கேரளாவில் இம்முறை காலூன்றியே ஆக வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்கிறது பி.ஜே.பி. தெற்குக் கேரளத்தில் சில தொகுதிகளைக் குறிவைத்து காய்நகர்த்தி வருகிறார்கள். இதை உணர்ந்து, “பாசிச கட்சியை நுழையவிடாமல் தடுப்பதே எங்கள் நோக்கம். அதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்படவும் தயார்” என்று அறிவித்தது காங்கிரஸ். அதை வரவேற்றது ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட். ஆனால், காசர்கோட்டில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட, நிலைமை மோசமாகியிருக்கிறது.

ஆந்திரத்தில், காங்கிரஸை ஏற்கெனவே கழட்டி விட்டுவிட்டார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. “தேசிய அளவில் மட்டுமே கூட்டணி” என்று தெளிவாகவே சொல்லிவிட்டார். சந்திராபாபுவை ஆதரிப்பதால், ஜெகன்மோகனுடனும் சேர முடியாத சூழ்நிலை அவர்களுக்கு. புதிய அரசியல் சக்தியான பவன் கல்யாணும் காங்கிரஸைக் கணக்கில் சேர்க்கவில்லை. அதனால், இருக்கும் 25 தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். அதை அறிவிப்பாகவும் வெளியிட்டுவிட்டார், ஆந்திர காங்கிரஸ் பொறுப்பாளர் உம்மன் சாண்டி. 

தெலங்கானாவில் நிலைமையே வேறாக இருக்கிறது. அங்கே, வேட்பாளர் தேர்வில் வெட்டுக்குத்தே நடந்துவிடும் போலிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் தோற்ற மூத்த தலைவர்கள் பலர், நாடாளுமன்றத் தேர்தலிலும் சீட் கேட்கிறார்கள். இதனால், கடந்த சில நாள்களாகக் கலவர சூழலில் தகிக்கிறது காந்திபவன் அலுவலகம். கூட்டணியிலும் ஏகப்பட்ட சிக்கல்கள், அங்கே. `சந்திரபாபு நாயுடுவை சேர்க்கலாமா வேண்டாமா’ என்று பெரிய விவாதமே நடந்துகொண்டிருக்கிறது. “சந்திரபாபுவுடன் கூட்டணி வைத்ததால்தான் சட்டமன்றத் தேர்தலில் மரண அடி வாங்கினோம்” என்று அழுத்திச் சொல்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள். ஆனால், காங்கிரஸ் மேலிடம் அதைக் கண்டுகொள்ளும் அறிகுறிகள் தென்படவில்லை. இதற்கிடையில், “எங்களுக்குத் தர வேண்டிய இரண்டு இடத்தை மறந்துவிடாதீர்கள்” என்று கடிதம் அனுப்பியிருக்கிறது, இந்திய கம்யூனிஸ்ட். கம்மம், போங்கீர் ஆகிய தொகுதிகள் அவர்களின் இலக்கு. ``எப்படியும் இம்மாத இறுதிக்குள் அனைத்தையும் அறிவித்துவிடுவோம்” என்று சொல்லிவருகிறார்கள், அங்கிருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள். 

`அலட்சியம் ஆபத்தில் முடியும்’ என்றொரு பழமொழி இருக்கிறது!