`அதுபத்தி பேசலன்னு சொன்னா பொய்யா இருக்காது!'- விஜயகாந்த்தை சந்தித்த திருநாவுக்கரசர் ஓப்பன் டாக்

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளன.

தமிழகத்தில் முதல் ஆளாக அ.தி.மு.க தான் தங்களது கூட்டணியை தீர்மானித்தது. பா.ஜ.க-வுக்கு 5 தொகுதிகளும், பா.ம.கவுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தி.மு.க-வுடன் கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள இரு பெரிய கட்சிகளும் தங்களின் தேசிய கூட்டணியை முடிவு செய்த பிறகு தற்போது அடுத்தகட்டமாக தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

முன்னதாக தே.மு.தி.க, அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகக் கூறப்பட்டு அதற்காக அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், அ.தி.மு.க ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை ஏற்க தே.மு.தி.க தயாராக இல்லை. இதனால் அவர்கள் கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையில் தே.மு.தி.கவை தங்கள் கூட்டணிக்குள் இணைக்க காங்கிரஸும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே இன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை, தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இவர்களின் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது.

இவர்களின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், `நானும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தும் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக உள்ளோம். அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று இரு தினங்களுக்கு முன்னர் தான் சென்னை வந்தார். அந்த நேரத்தில் நான் டெல்லியில் இருந்தேன். நேற்று இரவுதான் சென்னை திரும்பினேன். அதனால் இன்று காலை விஜயகாந்த்தை சந்தித்து நலம் விசாரிக்க வந்தேன். அங்கே அவரின் மைத்துனர் சுதீஸ் மற்றும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா ஆகியோரைச் சந்தித்துப் பேசினேன். சிகிச்சைக்குப் பிறகு விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அவர் உடல் நலம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வரும் காலங்களிலும் அவர் சீரான உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்'' என்றார்.
பின்னர் செய்தியாளர்கள், அரசியல் சம்பந்தமாக ஏதாவது பேசினீர்களா என்று கேட்டனர். இதற்குப் பதில் அளித்த திருநாவுக்கரசர், `` நானும் அரசியல் தலைவர், விஜயகாந்தும் ஒரு அரசியல் கட்சித் தலைவர். தேர்தல் நடக்கவுள்ள இந்த நேரத்தில் தமிழக அரசியல், நாட்டு நடப்புகள், தேர்தல் போன்றவை குறித்து நாங்கள் பேசவில்லை என்றால் அது பொய்யா இருக்காது'' என்றவுடன் அனைவரும் சிரித்துவிட்டனர். மேலும் அவர் கூறுகையில், ``நாங்கள் இருவரும் பொதுவான நாட்டு நடப்பு மற்றும் தேர்தல் குறித்துப் பேசினோம். கடந்த நான்கு வருடங்களாக தமிழக அரசியலில் என்ன நடக்கிறது என்பது விஜயகாந்துக்கு நன்றாகத் தெரியும். அதனால் மக்கள் நலன் கருதி அவர்களுக்காக ஒரு நல்ல முடிவை எடுத்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் கேட்டுள்ளேன். மற்ற விஷயங்களை இப்போது கூற முடியாது” எனச் சொல்லிவிட்டு புறப்பட்டார்.