Published:Updated:

`40 தாெகுதியிலும் போட்டியிட விருப்ப மனு பெறலாம்; மார்ச் 6-ம் தேதி கடைசி நாள்!'- விஜயகாந்த் அறிவிப்பு

`40 தாெகுதியிலும் போட்டியிட விருப்ப மனு பெறலாம்; மார்ச் 6-ம் தேதி கடைசி நாள்!'- விஜயகாந்த் அறிவிப்பு
`40 தாெகுதியிலும் போட்டியிட விருப்ப மனு பெறலாம்; மார்ச் 6-ம் தேதி கடைசி நாள்!'- விஜயகாந்த் அறிவிப்பு

``நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியினர் பெற்றுக்கொள்ளலாம்" என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இருபெரும் மாநிலக்கட்சிகள் இரண்டு தேசியக்கட்சிகளுடன் இணைந்து தங்கள் கூட்டணியை உறுதிசெய்துள்ளன. இதில் அ.தி.மு.க தேசியக்கட்சியுடன் பா.ம.கவும் தன் கூட்டணியில் இருப்பதாக, அக்கட்சிக்கு 7 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. தி.மு.க சார்பில் காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தே.மு.தி.கவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று அ.தி.மு.க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் கூட்டணி உறுதியாகவில்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாட்டை வெளியிட உள்ளதாக தெரிவித்திருக்கிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் தனித்துப்போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருப்பமனு விநியோகம் நாளை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தே.மு.தி.க சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள், 24-ம் தேதியிலிருந்து 6-ம் தேதி வரை தலைமைக் கழகத்தில் விருப்பமனுவை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

விருப்ப மனு கட்டணம் 20,000 மற்றும் தனித்தொகுதிக்கு 10,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்தை, காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சந்தித்துப் பேசினார். இதில் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசுகிறார்.