Published:Updated:

தி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க!

தி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க!
தி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க!

திராவிடக் கட்சிகளோடு இனி எப்போதும் கூட்டணி இல்லை எனக்  கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க கடுமையான பிரசாரங்களை மேற்கொண்டது. இந்நிலையில் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே  உள்ள நிலையில் பா.ம.க தாங்கள் முன்வைத்த விமர்சனங்களை மீறி தற்போது  அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்துள்ளது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.  `இந்தக்  கூட்டணி மக்கள் நலக் கூட்டணி இல்லை; பணத்துக்கான  கூட்டணி" என தி.மு.க  தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அதே வேளையில் பா.ம.க-வின் இந்தக் கூட்டணி உறுதி செய்வதற்கு முன்னாள் தி.மு.க உடன் சேர்ந்து தேர்தலைச் சந்திப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் பா.ம.க ஈடுபட்டதாகச் செய்திகளும் வெளியாகின.

பா.ம.க வட்டாரங்களில் தி.மு.க உடன் கூட்டணி அமையாமல் போனது குறித்துப் பேசியவர்கள், `` பா.ம.க, தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்கான நிறைய சந்தர்ப்பங்கள் இருந்தன. அந்த வாய்ப்புகளை நழுவ விட்டவர் தற்போதைய தி.மு.க தலைவர் ஸ்டாலின்தான். இதுவே கருணாநிதி இருந்திருந்தால் இப்படி நடந்துகொண்டிருந்திருக்கமாட்டார். தி.மு.கவுடன் சேர முடியாமல் போனதற்கு ஸ்டாலினின் மூன்று நடவடிக்கைகள் தான் முக்கியமான காரணம்.

முதலாவது, கருணாநிதி இறந்தபோது அவருடைய உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்காக நாங்கள் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கை திரும்பப் பெற்றோம். ஆனால், அதற்கு முறையான பதில் மரியாதையை ஸ்டாலின், ராமதாஸுக்குச் செய்யவில்லை. அதேபோல் ஸ்டாலின் தி.மு.க-வின் தலைவர் ஆன பிறகு நல்லகண்ணு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ஆனால், மரியாதை நிமித்தமாகக் கூட ராமதாஸை சந்திக்கவில்லை.

குறிப்பாக அறிவாலயத்தில் நடந்த கருணாநிதி சிலைத் திறப்பு விழாவிலும் அவமதிப்புகளே தொடர்ந்தன. பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோரை நேரில் சென்று  அழைப்பு விடுத்த ஸ்டாலின், கருணாநிதியோடு நெருக்கமாக இருந்து அரசியல் செய்த எங்கள் கட்சி நிறுவனருக்கு முறைப்படி நேரில் அழைப்பு விடுக்கவில்லை. முக்கியமாக இப்போது தி.மு.க-வில்  கூட்டணி குறித்து எடுக்கப்படும்  முடிவுகளில்கூட துரைமுருகன், வேலு போன்ற முக்கிய தலைவர்களுக்கு இடமளிக்காமல் அரசியல் தெரியாத புதியவர்கள் தான் இப்போது தி.மு.க-வின் கூட்டணிக் குறித்த முடிவுகளை  எடுத்து வருகின்றனர்” என்றனர்.