Published:Updated:

கமலுடன் சந்திப்பு! - பா.ம.க -வில் இருந்து விலகிய ராஜேஷ்வரி மக்கள் நீதி மய்யத்தில் இணைகிறாரா?

கமலுடன் சந்திப்பு! - பா.ம.க -வில் இருந்து விலகிய ராஜேஷ்வரி மக்கள் நீதி மய்யத்தில் இணைகிறாரா?
கமலுடன் சந்திப்பு! - பா.ம.க -வில் இருந்து விலகிய ராஜேஷ்வரி மக்கள் நீதி மய்யத்தில் இணைகிறாரா?

பா.ம.க,  திராவிட கட்சிகளோடு இனி கூட்டணி இல்லை எனக்கூறி வந்தது. இந்நிலையில், திடீரென 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை அ.தி.மு.க-வோடு சேர்ந்து கூட்டணி அமைத்ததில், பா.ம.க-வில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள பலரிடையே பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பா.ம.க இளைஞர் அணி மாநிலச் செயலாளராகப் பதவி வகித்துவந்த  ராஜேஷ்வரி,‘ பா.ம.க இதுவரை எதிர்த்துப் பேசிவந்த அதே திராவிட கட்சிகளோடு கூட்டணி வைத்திருப்பது, என்னைப் போன்ற தொண்டர்களுக்கு  பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வெற்றிக்காக இதுமாதிரி கூட்டணியை சாணக்கியத் தனம் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது’ எனக்கூறி, அவர் வகித்துவந்த பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் வெளியேறினார். இந்நிலையில், கமல் தி.மு.க, அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், ராஜேஷ்வரி தற்போது  கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தில் சேர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ராஜேஷ்வரியிடம் பேசுகையில், “ என்னுடைய இந்த தைரியமான முடிவைப் பல கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அண்ணன் சீமான் இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து மெசேஜ் அனுப்பியிருந்தார். தினகரன் தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் வந்தன. அதேபோல்தான் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கமல்ஹாசன் என்னுடைய இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து, நேரில் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். அதற்காகத்தான் இன்று அவரை நேரில் சந்திக்க உள்ளேன். அதைத் தவிர  மற்றபடி கட்சியில் சேருவது பற்றி எல்லாம் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை” என்றார்.