Published:Updated:

`நெற்றிப் பொட்ட துடைக்க மறந்துட்டாங்களே!'- தம்பதிகளுக்கு மீண்டும் திருமணம் செய்துவைத்த அமைச்சர்கள்

`நெற்றிப் பொட்ட துடைக்க மறந்துட்டாங்களே!'- தம்பதிகளுக்கு மீண்டும் திருமணம் செய்துவைத்த அமைச்சர்கள்
`நெற்றிப் பொட்ட துடைக்க மறந்துட்டாங்களே!'- தம்பதிகளுக்கு மீண்டும் திருமணம் செய்துவைத்த அமைச்சர்கள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் 120 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், திருமணமான தம்பதிகளுக்கு மீண்டும் திருமணம் நடத்தி வைத்ததுதான் ஹைலைட்.

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் நகரப் பகுதிக்கு உட்பட்ட வன்மீகிபுரத்தில் 120 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க ஒருவார காலமாக பந்தல் அமைப்பது, பேனர் வைப்பது எனப் பல்வேறு வேலைகள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் இன்று காலை 120 ஜோடிகளுக்கும் கே.பி.முனுசாமி தலைமையில் பல்வேறு துறை அமைச்சர்கள் கலந்துகொண்டு இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்தத் திருமணத்துக்கு ஜோடிகளாக வருகை தந்தவர்களில் பத்துக்கும் மேற்பட்ட ஜோடிகள் ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள். அவர்களுக்கும் இங்கே மீண்டும் இரண்டாவது முறை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இதுபற்றி அ.தி.மு.க தொண்டர்களிடம் விசாரித்தபோது, ``ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் இத்தனை பேர் என ஒன்றிய தலைவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. அதன் அடிப்படையில் அ.தி.மு.க தொண்டர்களின் குடும்பங்களில் உள்ளவர்கள் ஜோடிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், 120 ஜோடிகள் கிடைக்காததால் ஏற்கெனவே திருமணமாகிய சிலரையும் இங்கே அழைத்து வந்து திருமணம் செய்து வைக்கின்றனர். அவர்கள் திருமணமானதை மறைத்து உள்ளனர். ஆனால், அவர்கள் தினமும் வைக்கும் நெற்றித் திலகத்தை துடைக்க மறந்துவிட்டனர்" எனக் கூறி புலம்பினார்.

திருமணமானவர்கள் என்பதைக்கூட பொருட்படுத்தாமல் மற்ற ஜோடிகளோடு ஜோடியாக ஏற்கெனவே திருமணமானவர்களையும் அமரவைத்து அதற்கான யாக பூஜைகள் நேரங்கள் பார்த்து இரண்டாவது முறையாக திருமணம் செய்து வைத்தனர் அமைச்சர்கள். பின்னர் அவர்களை ஒவ்வொரு அமைச்சரும் வாழ்த்திப் பேசினர். அதைத்தொடர்ந்து திருமணமான ஜோடிகளுக்கு சீர் வரிசைகளை வழங்கினார்கள்.