Published:Updated:

``விஜயகாந்தைச் சந்தித்தார் திருநாவுக்கரசர்... ஆனால், அதற்கு முன்....!?" - கொதிக்கும் கே.எஸ்.அழகிரி

தனிப்பட்ட நட்பின் அடிப்படையில் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசியவர், எதற்காக `அரசியல் பேச்சு' என்று செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்?

``விஜயகாந்தைச் சந்தித்தார் திருநாவுக்கரசர்... ஆனால், அதற்கு முன்....!?" - கொதிக்கும் கே.எஸ்.அழகிரி
``விஜயகாந்தைச் சந்தித்தார் திருநாவுக்கரசர்... ஆனால், அதற்கு முன்....!?" - கொதிக்கும் கே.எஸ்.அழகிரி

தேர்தல் களத்தில், `மதில் மேல் பூனை'யாக அமர்ந்திருக்கும் தே.மு.தி.க எந்தக் கூட்டணியில் இணையப்போகிறது... என்பதுதான் தமிழகத்தின் ஹாட் டாபிக்! இந்நிலையில், விஜயகாந்தின் உடல்நலம் விசாரிக்கச் சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், ``இரண்டு கட்சிகளின் தலைவர்களும் சந்திக்கும்போது, அரசியல் பேசாமல் இருக்க முடியுமா?'' என்று நிருபர்களிடையே போட்டுடைக்க.... `அ.தி.மு.க-வுக்கு டாட்டா காட்டிவிட்டதா தே.மு.தி.க...' என்ற அதிருப்தி குரல்களும் `தி.மு.க கூட்டணிக்குள் வருகிறது தே.மு.தி.க...' என்ற உற்சாகக் குரல்களும் ஒருசேரக் கிளம்பியிருக்கின்றன.

இதற்கிடையில், திருநாவுக்கரசரின் விஜயம் குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள் சிலர், ``விஜயகாந்திடம் அரசியல் பேசியதாக திருநாவுக்கரசர் பேசியிருப்பது, தி.மு.க கூட்டணிக்குள் சலசலப்பை உண்டுபண்ணியிருக்கிறது. டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க-வுடன் நெருக்கம் காட்டிவரும் திருநாவுக்கரசரின் தற்போதைய செயல்பாடுகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. 

தனிப்பட்ட நட்பின் அடிப்படையில் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசியவர், எதற்காக `அரசியல் பேச்சு' என்று செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்? ஏற்கெனவே, அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க உறுதியாகாத சூழ்நிலையில் இருக்கும்போது, வலியச் சென்று விஜயகாந்தை தி.மு.க கூட்டணிக்குள் வரச்சொல்லி திருநாவுக்கரசர் அழைப்புவிடுப்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது! '' என்று சந்தேகம் எழுப்புகின்றனர். 

அரசியல் விமர்சகர்களின் சந்தேகத்துக்கு விளக்கம் கேட்டு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் பேசினோம்...

``விஜயகாந்த் உடல்நிலை குறித்து நலம் விசாரிப்பதற்காகத்தான் திருநாவுக்கரசர் சென்றிருந்தார். அப்படிச் செல்வதற்கு முன்னால் என்னிடம் அவர் அனுமதி வாங்கவில்லை என்றாலும்கூட, போய்விட்டு வந்தபிறகு `என்னுடைய நெருங்கிய நண்பர் விஜயகாந்த். அதனால் அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரிப்பதற்காகத்தான் சென்றுவந்தேன்' என்று சந்திப்பு குறித்த முழு விவரத்தையும் என்னிடம் விரிவாகத் தெரிவித்துவிட்டார். 

பொதுவாக, இரண்டு பேர் சந்தித்துப் பேச ஆரம்பித்தாலே அதில் அரசியலும் வெளிப்படும். அப்படித்தான் இந்தச் சம்பவத்திலும் பேசப்பட்டிருக்கிறதே தவிர... இந்தப் பேச்சின் பின்னணியில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர், இன்னொரு கட்சிக் கூட்டணியில் சேரச்சொல்லி விஜயகாந்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று சொல்வதெல்லாம், அப்பட்டமான கற்பனை; அனுமான செய்தி! 

நானும்கூட விமான நிலையத்தில், பொன்.ராதாகிருஷ்ணனைப் பார்த்தால், நன்றாகத்தான் பேசுவேன். எனக்கு ரொம்பவும் வேண்டியவர்தான் அவர். தமிழ்நாட்டில் மட்டும்தான் இதுபோல் எதிரெதிர் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டால், உடனே அதற்கோர் அரசியல் சாயம் பூசப்படுகிறது. 

பாராளுமன்றத்தில், அத்வானி அறையைக் கடந்துபோகும்போது காங்கிரஸ் கட்சித் தலைவர்களைக்கூட அவர், தேநீர் அருந்த அழைப்பதுண்டு. அப்படி விரும்பி அழைக்கிறபோது காங்கிரஸ் தலைவர்களும் அத்வானியின் அறைக்கே சென்று டீ சாப்பிட்டு வருவார்கள். இதெல்லாம் அங்கே இயல்பான விஷயங்கள்தாம். 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், கூட்டணியின் தலைமை தி.மு.க-தான். கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின்தான். எனவே, கூட்டணியில் யாரைச் சேர்க்கலாம், யாரைச் சேர்க்கக் கூடாது என்றெல்லாம் முடிவெடுப்பதென்பது அவர் மட்டுமே. இதில், இன்னொருவர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணிக்குள் ஒருவரை அழைத்துவந்துவிடவும் முடியாது; அல்லது கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிடவும் முடியாது. 

இந்திய அளவில், காங்கிரஸ் கட்சி எப்படிக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறதோ, அதேபோல், தமிழக அளவில் தி.மு.க-தான் கூட்டணிக்குத் தலைமை! இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை!'' என அழுத்தந்திருத்தமாகச் சொல்லி முடித்தார் கே.எஸ்.அழகிரி!