Published:Updated:

`தமிழகத்தின் நலன் கருதியே பா.ஜ.க-வுடன் கூட்டணி!’ - தம்பிதுரை

தினேஷ் ராமையா
`தமிழகத்தின் நலன் கருதியே பா.ஜ.க-வுடன் கூட்டணி!’ - தம்பிதுரை
`தமிழகத்தின் நலன் கருதியே பா.ஜ.க-வுடன் கூட்டணி!’ - தம்பிதுரை

''பா.ஜ.க-விடம் சரணாகதி அடையவோ, கொள்கைரீதியாக சமரசம் செய்துகொள்ளவோ அக்கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை. தமிழகத்தின் நலனுக்காகவே இந்க்த கூட்டணி'' என மக்களவை துணை சபாநாயகரும் அ.தி.மு.க எம்.பி-யுமான தம்பிதுரை தெரிவித்தார். 

பா.ஜ.க-வுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து கூறிவந்த தம்பிதுரை, சமீபகாலமாக விமர்சனங்களை நிறுத்திக்கொண்டார். அ.தி.மு.க - பா.ஜ.க - பா.ம.க கூட்டணி உறுதிசெய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடும் இறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் திருப்பதி கோயிலில் தம்பிதுரை சுவாமி தரிசனம்செய்தார். பின்னர், விமானம் மூலம் தம்பிதுரை சென்னை வந்தார். 

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, `தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி மத்தியில் வெற்றிபெறக் கூடாது என்பதுதான் அ.தி.மு.க-வின் கொள்கை. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் கட்சியில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் வெற்றிபெற வேண்டும்  என்பதுகுறித்து அந்தக் குழுக்கள் வியூகம் அமைத்துவருகின்றன. எப்படி வியூகம் வகுத்தால் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த முடியும் என்ற அடிப்படையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். அந்தக் கூட்டணியை வீழ்த்தவே பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்துள்ளது’’ என்றார். 

பா.ஜ.க-விடம் சரணாகதி அடையவோ, கொள்கைரீதியாக சமரசம் செய்துகொள்ளவோ அக்கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்கவில்லை என்று கூறிய அவர், தமிழகத்தின் நலனுக்காகவே கூட்டணி அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், அ.தி.மு.க ஒருபோதும் கொள்கையை விட்டுக்கொடுக்காது என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.