பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

@சி. கார்த்திகேயன், சாத்தூர்.
வயநாடா... அமேதியா?


இரண்டுமேதான்.

ஆர்.துரைசாமி, கோயம்புத்தூர்.
விகிதாசார தேர்தல் முறை இருந்திருந்தால், காலியாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்குத் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்குமா?


விகிதாசார தேர்தல் முறையைப் பயன்பாட்டில் வைத்திருக்கும் நாடுகளில் ஒரே மாதிரியான நடைமுறை இல்லை. காலியாகும் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது, அடுத்த இடத்தைப் பிடித்தவருக்கு வாய்ப்புக் கொடுப்பது, அடுத்த பொதுத்தேர்தல் வரையிலும் காலியாகவே வைத்திருப்பது என்று நாட்டுக்கு நாடு வித்தியாசம் இருக்கிறது. இந்தியாவில் இந்தத் தேர்தல் முறை அமலுக்கு வந்தால், இதில் ஏதாவது ஒன்றைத்தான் நாம் கடைப்பிடிப்போம்.

@கோவி. தஞ்சாவூர்.
‘ஓட்டுக்காகப் பணம் வாங்கும் அனைவரும் நேர்மையாக, மனசாட்சிப்படி பணம் கொடுத்த கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்’ என கழுகார் நம்புகிறாரா?


ஹலோ... கோவி, என்ன இது? என்னை எதற்காக இதில் கோத்துவிடுகிறீர்கள்? சம்பந்தப்பட்டவர்கள் அல்லவா நம்பவேண்டும்.

கழுகார் பதில்கள்!

மு.ரா. பாலாஜி, கோலார் தங்கவயல்.
அடுத்த பிரதமர் ஆணா, பெண்ணா?


யாராக இருந்தாலும் மனிதர்கள்தானே? ஆனால், அனைத்து உயிர்களின் உரிமைகளை நிலைநாட்டுபவராக அவர் இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம்.

உ.குமரவேல் ஆசான், சென்னை- 116.
காங்கிரஸில் மூத்த தலைவராகயிருந்தவர் ஜி.கே.மூப்பனார். அவரது வாரிசான ஜி.கே.வாசன் ‘மோடிதான் இந்தியாவிலிருக்கும் சிறுபான்மை யினரின் பாதுகாவலர்’ என்று பி.ஜே.பி-க்கு பிரசாரம்செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?


ஏன், மூப்பனார்கூடத்தான், காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாடுடைய எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியில் இடம்பிடித்தாரே. ‘வாஜ்பாய், இந்திய தேசத்தை வாழவைக்க வந்த பிதா’ என்கிற ரேஞ்சுக்குப் பிரசாரம் செய்து, பெட்ரோலிய அமைச்சரானார் மற்றொரு காங்கிரஸ் பாரம்பர்ய பெரும்புள்ளியான ‘வாழப்பாடி’ ராமமூர்த்தி. ‘கொள்கையா... பதவியா?’ என்கிற போராட்டத்தில் இதெல்லாம் சகஜம் ஆசானே!

பா.சத்ரியன், பாகாநத்தம்.
‘வாழவைத்த தெய்வம்’ என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் இப்போது யாரை நினைப்பார்கள்?

‘பர்சன்டேஜ்’ என்கிற பெயரில் படியளக்கும் ‘ஒப்பந்தப் புள்ளி’களைத்தான் எப்போதுமே அப்படி நினைப்பார்கள்.

பி.பழனிச்சாமி, கடலூர்.
மலைக்காடுகள் எரிவது காட்டுத்தீயாலா அல்லது காட்டிய தீயாலா?


இரண்டுமே உண்டு. பெரும்பாலும் காரணமாக இருப்பது, காட்டிய தீ. பொதுநலம் கிஞ்சிற்றும் அற்றுப்போன, பேராசைத் தீ பற்றியெரியும் தீய நெஞ்சங்கள் காட்டும் தீ அது.

என்.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.
சமீபத்தில் நெஞ்சை இளக வைத்த நிகழ்ச்சி?


ராமநாதபுரத்தைச் சேர்ந்த அந்த மூதாட்டிக்கு 102 வயது. உற்றார், உறவினர்களின் ஆதரவு ஏதும் இல்லாத அவருக்கு, சென்னையின் பெரவள்ளூர் சாலையொன்றில்தான் சில ஆண்டுகளாக வாழ்க்கை. அங்கே கிடைக்கும் ஏதாவது உணவுகளை உண்டு உயிரைப் பிடித்துக் கொண்டிருந்தவர்,  உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பெரவள்ளூர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். இப்படி வருபவர்களை விரட்டி அடிப்பது அல்லது ஏதாவது ஒருவகையில் கழற்றிவிடுவது என்பதைத்தான் பெரும்பாலும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அந்த மூதாட்டிக்கு முதலுதவி செய்த காக்கிகள், உணவு மற்றும் துணிமணிகள் வாங்கிக் கொடுத்து முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர். காக்கிக்குள் ஈரம்!

எஸ். ராமதாஸ், சேலம்-30.
என்றாவது அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தவறுகளை உணர்ந்து ஒன்றிணைந்து, நம் நாட்டின் முன்னேற்றத்துக்காகவே பாடுபடுமா?


குதிரைக்குக் கொம்புகூட முளைக்கும்.

@ ‘துடுப்பதி’ வெங்கண்ணா, பெருந்துறை.
‘காங்கிரஸ் இல்லாத பாரதம், கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்று முழங்கிய பி.ஜே.பி-யுடன் கூட்டுசேர்ந்த அ.தி.மு.க எப்படித் தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டது?


அதுதான் அமித் ஷா, மோடி உள்பட அனைவருமே ‘தி.மு.க தொடங்கி இன்னபிற கழகங்களைத்தான் நாங்கள் சொன்னோம். அ.தி.மு.க-வை அல்ல’ என்று மேடைகளிலேயே சமாதானப் படுத்திவிட்டார்களே!

@ இ.முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.
பொதுப்புத்தியிலிருந்து எப்படி விலகிச் சிந்திப்பது?

இயற்கையை நேசியுங்கள்... இயற்கையாக யோசியுங்கள்!

@ஆர். ஹரிகோபி, புதுடெல்லி.
‘மக்களவைத் தேர்தலில், எனக்கு வாக்களிக்காதவர்களுக்குப் பாவம் வந்து சேரும்’ என பி.ஜே.பி. வேட்பாளர் சாக்‌ஷி மகாராஜ் கூறியிருப்பது பற்றி?


‘ஏற்கெனவே அவருக்கு வாக்களித்த பாவத்தைப் போக்கவே வழியில்லை’ என்று அவருடைய தொகுதி வாக்காளர்கள் புலம்புவதாகக் கேள்வி.

@மணிசோமு.
இனி, ‘நீட்’ தேர்வையும் சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தையும் முன்வைத்து பா.ம.க அரசியல்பிழைப்பு நடத்தமுடியுமா?


இப்போதே நடத்திக்கொண்டுதானே இருக்கிறார்கள். அதுவும் இருக்கின்ற கூட்டணியிலேயே, இருக்கின்ற மேடையிலேயே ‘கொண்டு வருவோம்’ என்கிறது பி.ஜே.பி. ‘வரவிட மாட்டோம்’ என்கிறது பா.ம.க. இரண்டுக்கும் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்கிறது அ.தி.மு.க. எல்லோருடைய பிழைப்பும் ஓடிக்கொண்டுதானே இருக்கிறது? ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் போன்ற திட்டங்களுக்கு அனுமதி தந்த தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளும்தான் பிழைப்பை ஓட்டிக்கொண்டுள்ளன.

@மா.ஜெகதீசன், சீர்காழி.
‘தலைக்கு மேலேயும் ஒன்றும் இல்லை. தலைக்கு உள்ளேயும் ஒன்றும் இல்லை’ என ரஜினியை அநாகரிகமாக விமர்சிக்கிறார் சீமான். இதுசரியா?

சரியில்லைதான்.

கழுகார் பதில்கள்!

@கே.ஆர்.உதயகுமார், சென்னை-1.
தேர்தல் கமிஷன் போடும் வழக்குகளின் நிலைமை, தேர்தலுக்குப் பின் என்னவாகிறது?

தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வரும் கட்சிகளின் மனநிலையைப் பொறுத்து குப்பைக்கூடைக்கோ... அல்லது கோர்ட்டுக்கோ போகும். பெரும்பாலும் குப்பைக்கூடைதான். இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சிகளுக்குள்ளும் எழுதப்படாத ஓர் ஒப்பந்தமே இருக்கிறது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் தொடர்பான வழக்குகளில் 99 சதவிகிதம் நடவடிக்கையே எடுப்பதில்லை. ‘எங்களுக்கு அதிகாரம் ஏதுமில்லை’ என்று தேர்தல் ஆணையமும் அமைதியாகிவிடுகிறது.

@பிரதீப்குமார் பி.டி., மதுரை.
நோட்டாவுக்கு அதிக சதவிகித வாக்குகள் கிடைக்கும் நிலையில், ஆட்சிப் பொறுப்பை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவார் குடியரசுத் தலைவர் என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய சூழலில், அவர் சுயமாகச் சிந்தித்து மக்களுக்குச் சேவை செய்வாரா அல்லது அனைத்துக் கட்சி மூத்த தலைவர்களது ஆலோசனையின்படி செயல்படுவாரா?

உலக அளவில் இப்படியொரு சூழல் வரவில்லை. அத்தகைய சூழல் வரும்போது, குடியரசுத் தலைவர் நம்மையும் அழைத்து ஆலோசனை கேட்பார் என நம்புவோம்.

@அர்ஜுனன் ஜி.,  அவினாசி.
செல்ஃபி... அடுத்தவரின் சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கிறதா?


நிச்சயமாக. செல்ஃபி எடுத்தவரின் போனை நடிகர் சிவகுமார் தட்டிவிட்டார் என்பதற்காகப் பொங்கி எழுந்த யாரும், அவருடைய தனிப்பட்ட விருப்பத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. சமீபத்தில் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் ஓட்டுப்போடுவதற்காக வரிசையில் நின்றபோதுகூட, இங்கிதமில்லாமல் பலரும் செல்ஃபி எடுத்துக்கொண்டதைக் காணமுடிந்தது. வியர்வை வழியும் உடம்புடன், ரசிகர்களின் மனதைப் புண்படுத்திவிடக்கூடாதே என்று சில நட்சத்திரங்களும் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தனர். ரயில் நிலையம், திரையரங்கம், கோயில் போன்ற பொது இடங்களில் பலதரப்பட்டவர்களும் வந்து செல்கிறார்கள். இங்கேயெல்லாம் செல்ஃபி என்கிற பெயரில் யார்... யாரைப் படம்பிடிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சந்தடி சாக்கில் சம்பந்தமே இல்லாத பெண்களையும் ஃபோகஸ் செய்கிறார்கள். அதையெல்லாம் பிறகு தாறுமாறாகப் பயன்படுத்தமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். சந்தேகப் பட்டால், செல்ஃபி பார்ட்டிகள் மீது காவல்துறையில் புகார் அளித்தால்கூடத் தவறில்லை.

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு