Published:Updated:

பிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு!

`நீங்க வாங்க பாத்துக்கலாம். வண்டில ஏறுங்க மொத' என்றபடி அவரை அழைத்து வண்டியில் ஏற்றினார் முதல்வர். `தயக்கத்துடன் வண்டியில் ஏறியுள்ளார் சி.வி.சண்முகம். எடப்பாடியும் அவரும் ஒரே வண்டியில் பயணிக்க, வண்டி தைலாபுரத்தை நோக்கி வேகமெடுத்தது.

பிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு!
பிரமாண்ட வரவேற்பு; 50 வகை உணவு; முடிவுக்கு வந்த 13 ஆண்டு பகை - தைலாபுர விருந்தில் ராமதாஸின் `ஸ்பெஷல்' கவனிப்பு!

தமிழக அரசியல் களம் நாடாளுமன்றத் தேர்தலால் சூடுபிடித்துள்ளது. காட்சிகள் மாறிக்கொண்டிருக்கின்றன. யாருக்கு எவ்வளவு? யார் பக்கம் யார்? என்ற எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் கட்சிகளிடையே நடந்துகொண்டிருந்தாலும், முதன்முதலில் கூட்டணி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது என்னமோ அ.தி.மு.க தான். கடந்த 19-ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இருகட்சிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டனர்.

அறிவிப்பைத் தொடர்ந்து தன் வீட்டுக்கு அழைத்து ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு தேநீர் விருந்து கொடுத்தார் முதல்வர். பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை விருந்துக்கு வருமாறு தைலாபுரத்துக்கு அழைப்பு விடுத்தார் ராமதாஸ். அதன்படி நேற்று மாலை 6-மணிக்குச் சென்னையிலிருந்து தைலாபுர தோட்டத்துக்குப் புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மதுரையிலிருந்து வரவே, மேல்மருவத்தூர் அருகே இருவரும் இணைந்துகொண்டனர். அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அவர்களுக்கு திண்டிவனம் சிக்னல் அருகே வரவேற்பு கொடுத்தார் அமைச்சர் சி.வி.சண்முகம். பின் அங்கிருந்து புறப்பட தயாரான அமைச்சரிடம் . `நீங்க வாங்க பாத்துக்கலாம். வண்டில ஏறுங்க மொத' என்றபடி அவரை அழைத்து வண்டியில் ஏற்றினார் முதல்வர். `தயக்கத்துடன் வண்டியில் ஏறியுள்ளார் சி.வி.சண்முகம்.  எடப்பாடியும் அவரும் ஒரே வண்டியில் பயணிக்க, வண்டி தைலாபுரத்தை நோக்கி வேகமெடுத்தது.

சரியாக 9:05 மணி அளவில் தைலாபுரத்துக்குள் ஜே.சி.டி பிரபாகரன் கார் உள்ளே நுழைந்தது. தொடர்ந்து ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் கார்கள் வரிசையாக உள்ளே வந்தன. அப்போது ராமதாஸ் குடும்பத்துக்கு கோகுலா இந்திரா உறவினர் என்பதால் முன்னதாகவே அவர் வீட்டில் இருந்தார். ராமதாஸும் அவரும் சேர்ந்து எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை வரவேற்றனர். உள்ளே சென்றதும் ஓ.பி.எஸ், `பாரம்பர்யமான வீடு மாதிரி நல்ல கலைநயத்தோட இருக்கு'' என்று பாராட்டினார். இதையடுத்து, அன்புமணி ராமதாஸ், சி.வி.சண்முகத்துக்குப் பொன்னாடை போர்த்தினார். சி.வி.சண்முகத்துக்கும் பா.ம.கவுக்கும் ஏழாம் பொருத்தம்தான். காரணம் 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, அ.தி.மு.க வேட்பாளர் சி.வி.சண்முகத்தை எதிர்த்து பா.ம.க சார்பில் போட்டியிட்டவர் கருணாநிதி.

பா.ம.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக சி.வி சண்முகத்தின் வீட்டுக்குள் புகுந்த சிலர், அவர் மீது தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது சி.வி.சண்முகம் எதிர்பாராதவிதமாகத் தப்பித்துவிட, அவரது உறவினர் முருகானந்தம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டது பா.ம.க தான் எனச் சாடியிருந்தார் சண்முகம். இதனால் இருவருக்கும் 13 ஆண்டுகளாகப் பகை இருந்து வந்தது. இப்படியிருந்த சூழலில் நேற்றைக்கு சி.வி.சண்முகம் விருந்துக்குச் சென்றதும், அவருக்கு அன்புமணி பொன்னாடை போர்த்தியதும் வியப்பாகவே பார்க்கப்படுகிறது. பொன்னாடை போர்த்தியபின், வீட்டின் அருமை, பெருமைகளை ராமதாஸ் விளக்கினார். வீட்டிலிருந்த தன் குடும்பத்தாரை அறிமுகப்படுத்தினார்.

முன்னதாக அன்புமணியும், ராமதாஸும் முதல்வர் வீட்டுக்குத் தேநீர் விருந்துக்காகச் சென்றபோது முதல்வர் தன் மனைவி மற்றும் மகனை அறிமுகப்படுத்தியிருந்தது நினைவிருக்கும். தொடர்ந்து சைவம், அசைவம் உள்ளிட்ட 50 வகையான உணவு வகைகள் விருந்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோவா மால்குவா, லிட்ஜி ஸ்வீட்  உள்ளிட்ட  இனிப்பு வகைகள் முதல்வருக்காக பிரேத்யேகமாக கொண்டுவரப்பட்டதாக ராமதாஸ் கூறியிருந்தார். விருந்து முடிந்த பின், அரைமணிநேரம் வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டன. இருதரப்பினரும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்து பேசினர். பின் அங்கிருந்து 10 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர். எடப்பாடிதான் தைலாபுர தோட்டத்துக்கு வந்த முதல் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.