Published:Updated:

`வைகோ சொன்னது மன ஆறுதலாக இருந்தது!’ - ராமதாஸ் ஓப்பன் டாக்

`வைகோ சொன்னது மன ஆறுதலாக இருந்தது!’ - ராமதாஸ் ஓப்பன் டாக்
`வைகோ சொன்னது மன ஆறுதலாக இருந்தது!’ - ராமதாஸ் ஓப்பன் டாக்

`வைகோ சொன்னது மன ஆறுதலாக இருந்தது!’ - ராமதாஸ் ஓப்பன் டாக்

`என் மன ஆறுதலுக்குக் காரணம் வைகோதான்’ என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.கவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதியான முரட்டாண்டி என்ற இடத்தில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ``என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே, நான் இந்த அரங்கத்துக்குள்ளே வரும்போது உங்கள் கண்களில் உற்சாக வெள்ளம் கரை புரண்டோடியதைக் கண்டேன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுக்குழுவில் நீங்கள் எனக்குக் கொடுத்த அதிகாரத்தை நான் சரியாகத்தான் பயன்படுத்தியிருக்கிறேன் என்பதை உங்களின் மூலம் உணர்கிறேன். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க-வுடனான நமது கூட்டணி வெற்ற பெற நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் உழைப்பினால்தான் தற்போது நமக்கு மரியாதை. இங்க வாங்க என்று ஒரு அணியும், இல்லை எங்களிடம்தான் நீங்கள் வர வேண்டும் என்று மற்றொரு அணியும் அழைத்தபோதும், நான் முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் நீங்கள் கொடுத்தது. உங்களின் தயவால் வளர்ந்த இந்தக் கட்சி இல்லையென்றால் நம்மை யாரும் கூட்டணிக்கு அழைக்க மாட்டார்கள்.  உங்களின் உழைப்பினால்தான் தற்போது தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்து நிற்கிறோம்.

பெரிய கட்சிகள் கூட பா.ம.கவை அழைப்பதற்குக் காரணம் நீங்கள் சிந்திய வியர்வையும், செய்த போராட்டமும், அனுபவித்த சிறைவாசமும்தான். 7 நாடாளுமன்றத் தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா தொகுதி என்ற நம் கூட்டணி உடன்பாட்டை கேள்விப்பட்ட பலர் வயிறு எரிந்து கொண்டிருக்கின்றனர். பத்து தொகுதிகளைக் கேட்கக் கூடிய தகுதி படைத்தவர்கள் நாங்கள். மொத்தம் 40 தொகுதிகள் என்பதாலும், கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க இருக்கிறது. அதனால் 7+1க்கு ஒப்புக் கொண்டோம். ஒரு ராஜ்யசபா என்பது இரண்டு எம்.பி தொகுதிகளுக்கு சமமானது. கூட்டணி, தொகுதிகள் குறித்துப் பேசியாகிவிட்டது. எந்தெந்த தொகுதிகள் என்று விரைவில் அறிவிப்பார்கள். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். ஐயா இதுவரை நாம் யார் முதுகிலும் குத்தியது கிடையாது, யார் காலையும் வாரியதும் கிடையாது. நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று உங்கள் உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தைகள்தான் எனக்கு முழு மன நிறைவைத் தரும். அ.தி.மு.க-வுடனான நமது கூட்டணி இயல்பாக அமைந்த கூட்டணி. பேச்சு வார்த்தையை நாம் நடத்திக்கொண்டிருந்தபோதே, எந்த ஜோசியர் சொன்னாரோ தெரியவில்லை அ.தி.மு.க - பா.ம.க தொண்டர்கள் கைகோத்துக் கொண்டனர்.

அதனால் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். கட்சி தொடங்கிய போதும் சரி, கூட்டணி வைக்கும்போதும் சரி கொள்கையை எக்காலத்திலும் நாம் விட்டுக்கொடுத்ததில்லை. கொள்கையில் தேக்குமரமாக இருக்கும் நாம் கூட்டணியின்போது நாணலாக வளைவோம். கொள்கையைப் புறந்தள்ளிவிட்டு பேரம் பேசுவதில்லை. நாம் 10 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம். அதில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய அழுத்தம் கொடுத்திருக்கிறோம். இரு தினங்களுக்கு முன்பு தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த அற்புதம்மாள், `ஐயா, முதல்வர் உங்களைப் பார்க்க வருகிறார். எப்படியாவது அவரிடம் சொல்லி என் மகனை விடுதலை செய்யச் சொல்லுங்கள். விடுதலையானவுடன் தைலாபுரம் தோட்டத்துக்குத்தான் முதலில் செல்வேன் என்று பேரறிவாளனே கூறியிருக்கிறான்’ என்று அழுதார்.

அன்புமணி அடிக்கடி கூறுவதுபோல கண்ணியமான வளர்ச்சியான கட்சியாக நாம் இருக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் யாரையும் குறை கூறாதீர்கள். அவர்கள் புழுதி வாரி தூற்றினாலும் நீங்கள் பதில் கூறக் கூடாது. வெற்றிக்குப் பிறகு அவர்களுக்கு நாம் நாகரிகமாக பதில் அளிப்போம். சில தினங்களுக்கு முன்பு ம.தி.மு.க தலைவர் வைகோவிடம் அ.தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணி வைக்கிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், `மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்கள் ஒரு சமூகப் போராளி. சிறப்பான கட்சி ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார். கூட்டணி குறித்து பேசுவதற்கு அந்தக் கட்சிக்கும், அவருக்கும்தான் அதிகாரம் இருக்கிறது. அதைப்பற்றி கருத்து சொல்வதற்கு வேறு யாருக்கும் உரிமை இல்லை’ என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னது எனக்கு மன ஆறுதலைக் கொடுத்தது. அன்புமணி கூறியதுபோல் 40 தொகுதிகள் மட்டுமல்ல, 21 தொகுதி சட்டமன்றத் தொகுதிகளிலும், ஜூலை மாதம் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் நம் கூட்டணி வெற்றி பெறும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு