Published:Updated:

கடலில் கரைத்த பெருங்காயமாக காணாமல் போகும் பா.ம.க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கடலில் கரைத்த பெருங்காயமாக காணாமல் போகும் பா.ம.க!
கடலில் கரைத்த பெருங்காயமாக காணாமல் போகும் பா.ம.க!

செல்வகணபதி அதிரடி

பிரீமியம் ஸ்டோரி

ர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில், எட்டு வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. காரணம், வாக்குச்சாவடிகள்  பலவும் பா.ம.க-வினரால் கைப்பற்றப்பட்டன என்கிற குற்றச்சாட்டுதான். இதன் பின்னணியில் பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பெயர் அடிபடுகிறது. இந்தப் பரபரப்புக்குப் பின்புலமாக இருந்தவர், தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளருக்காகத் தேர்தல் பணியாற்றிய முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளருமான செல்வகணபதி. தற்போது அரவக்குறிச்சி இடைத்தேர்தலில், தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜியின் வெற்றிக்காக உழைக்கக் கரூர் ஒன்றியப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் செல்வகணபதி. அவரைச் சந்தித்துப் பேசினோம்.

“மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில், வாக்குப் பதிவு அதிகமாகியுள்ளது. என்ன காரணம்?”

“இடைத்தேர்தல் என்பது ஒரு காரணம். அதைவிட, அந்த மாவட்டங்களில் வாழும் பலதரப்பட்ட மக்களும் இந்த அரசால் அனுபவித்த அல்லல்கள் முக்கிய காரணம். ‘இந்த அரசை அகற்றியே தீர வேண்டும்’ என்ற அவர்களின் கோபம்தான், 11 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குகளாக எதிரொலித்துள்ளது.”

கடலில் கரைத்த பெருங்காயமாக காணாமல் போகும் பா.ம.க!

“பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் எட்டு வாக்குச்சாவடிகளில், மறு வாக்குப்பதிவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் பிரசாரக் கூட்டத்தில், ‘வாக்குச்சாவடிகளில் நாமதான் இருக்கப் போறோம்’ என்று அன்புமணி கூறியதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா?”

“கண்டிப்பாக இருக்கிறது. சொல்லப் போனால், அவர் சொன்னதின் வெளிப்பாடுதான் இது. முதலில் ‘கைவிட்டுவிடாதீர்கள்’ என்று மக்களிடம் கண்ணைக் கசக்கி அழுது நடித்துப் பார்த்தார் அன்புமணி. அது எடுபடவில்லை. அதனால், ‘பூத்தைக் கைப்பற்றுவோம்’ என்று குறுக்குவழியை நாடினார். ஆனால், அவர்மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளும் தரப்பில், தேர்தல் ஆணையத்தில் அனைவரும் அவருக்கு உடந்தையாகத்தான் இருந்தார்கள். வலுவான ஆதாரங்கள் எங்களிடம் இருந்ததால்தான், வேறு வழி இல்லாமல் தேர்தல் ஆணையம் எட்டு வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டுள்ளது.”

“தஞ்சாவூர் தொகுதிப் பொறுப்பாளராக இருந்த நீங்கள், தேர்தலுக்கு இரண்டு வாரத்துக்கு முன்னர் திடீரென தர்மபுரி மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டீர்கள். காரணம், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தி.மு.க உட்கட்சிப் பூசலா?”

“இல்லை. தர்மபுரி தொகுதியில் நிலவிய கடுமையான போட்டிதான் காரணம். தவிர, நான் ஏற்கெனவே தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டு முறையும், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் ஒருமுறையும் தேர்தல் பணியாற்றியிருக்கிறேன். அந்த அனுபவத்தைக் கணக்கில்கொண்டு, தலைவர் ஸ்டாலின் தர்மபுரிக்கு என்னை அனுப்பினார்.”

“தொடர்ந்து 26 வருடங்களுக்கும் மேலாக, ஐந்து சதவிகித வாக்குகளைப் பா.ம.க தக்கவைத்து வருகிறது. எனவே, அக்கட்சிக்கு வன்னியர் சமூக மக்களிடம் செல்வாக்கு குறையவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?”

“பா.ம.க-வுக்கு வன்னியர் சமூக மக்களிடம் இன்னும் செல்வாக்கு இருக்கிறது என்பதே மாயை. உண்மையில் மிகப் பெரிய கட்சியாக வளர்வதற்கான அத்தனை வாய்ப்புகளும் பா.ம.க-வுக்கு இருந்தன. ஆனால், ராமதாஸ் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தேர்தலிலும் எடுத்த தவறான முடிவுகள், சுயநலச் செயல்பாடுகள் வன்னியர் சமூக மக்களிடமே வெறுப்பை ஏற்படுத்திவிட்டன. நிலையான கொள்கை, செயல்பாடுகள் இல்லாததால், பா.ம.க தேய்பிறையாக உள்ளது. இந்தத் தேர்தலில், கூட்டணி விஷயத்திலேயே பா.ம.க வீழ்ச்சி அடைந்துவிட்டது. இந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு பாருங்கள்... கடலில் கரைத்த பெருங்காயமாக பா.ம.க காணாமல் போகும்.”

“தி.மு.க தலைவர் கருணாநிதி இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் இது. தி.மு.க கட்சியின் தலைவராக ஸ்டாலின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?”

“இந்தத் தேர்தலைத் தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் திறம்பட எதிர்கொண்டதற்கு ஸ்டாலினின் கடுமையான உழைப்புதான் பிரதான காரணம். இடைவிடாத அவரின் முயற்சி, கூட்டணி அமைத்த பாங்கு, ஆக்கபூர்வமான தேர்தல் அறிக்கை என்று தளபதியின் ஒவ்வோர் அசைவும், எங்களைப் பிரமிக்கவைத்துவிட்டது.”

- துரை.வேம்பையன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு