பிரீமியம் ஸ்டோரி

அ.ம.மு.க-வின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார் தினகரன். அவரது எதிர்முகாமோ, ‘சசிகலாவை ஓரம்கட்டவே தினகரன் காய் நகர்த்துகிறார்’ என்று கிளப்பிவிடுகிறது. ஆனால், ‘சின்னம்மாவை சிறையில் சந்தித்து, அவருடைய முழு சம்மதம் பெற்றே தினகரன் பதவி ஏற்றிருக்கிறார்’ என்று சொல்கிறது தினகரன் முகாம். தீரவிசாரித்தால், ‘அ.ம.மு.க-வின் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் சிறைக்குள் சென்று சசியை சந்தித்து நீண்ட நேரம் பேசி, தினகரன் பதவி ஏற்க ஒப்புதல் பெற்றுவிட்டார்’ என்கிறார்கள். அரசியலில்... அதுவும் அ.தி.மு.க முகாமில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்... சரி, ஒருவேளை எதிர்காலத்தில் சசி ஓரம்கட்டப்படுவார் என்று வைத்துக்கொண்டால், உறவினர்களையும், தொண்டர்களையும் டி.டி.வி என்ன சொல்லித் தேற்றலாம்?

ஐடியா அய்யனாரு!

•  அம்மா இருந்தபோது 2011-ல் சசிகலா அ.தி.மு.க-வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதன்பின் நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. 2017-ல் அ.தி.மு.க-வில் இருந்து அவர் மீண்டும் நீக்கப்பட்டார். அதன்பின் நடந்த ஆர்.கே நகர் தேர்தலில் அவர் இருந்த கட்சிக்கே மீண்டும் வெற்றி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தல் வெற்றியை மனதில்கொண்டு அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார் என்று சொன்னால், சசிகலாவே குஷியாகிவிடுவார்!

• டி.டி.வி தினகரன் வயதில், அரசியலில் ஜூனியர். அவருக்கு அ.ம.மு.க போன்ற சின்னக் கட்சி போதும். ஆனால், சர்வதேச அளவில் அரசியல் நிபுணத்துவமும் அனுபவமும் வாய்ந்த சின்னம்மாவை இப்படிச் சின்னக் கட்டத்துக்குள் அடைப்பது தவறு. அவருக்கு அ.தி.மு.க போன்ற பெரிய கட்சிகள்தான் சரிப்படும். எனவே அதை மீட்கும்போது மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்றும் சொல்லலாம்!

• ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, தினகரன் என அரசியலில் கோலோச்சும் ரத்தத்தின் ரத்தத் தலைவர்கள் அனைவருக்கும் பெயர் ஐந்தெழுத்துகள். சசிகலாவுக்கோ நான்கு எழுத்துகள்தான். எனவே நியூமராலஜிபடி தலைவராகும் ராசி அவருக்கில்லை எனக் கொளுத்திப்போட்டால், ஜோதிடத்தில் அபார நம்பிக்கைக்கொண்ட சசிகலா குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள்.

• 2017-ல் சசிகலா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்போவதாக அறிவித்தார் ராம்கோபால் வர்மா. இன்னும் படம் வந்தபாடில்லை. எனவே, படத்தை மும்முரமாக முடிக்கும்பொருட்டு சின்னம்மா ஸ்கிரிப்ட் வேலைகளில் இருப்பதால், கொஞ்ச நாள் தீவிர அரசியலில் இருந்து ரஜினிபோல ஒதுங்கியிருக்கிறார் என்று சொல்லிக்கொள்ளலாம்.

• சசி குடும்பத்தில், ‘குவா குவா’ சொல்லும் குழந்தைகள்வரை தனக்கென கட்சி வைத்திருக்கிறார்கள். குடும்பத்தின் மூத்த உறுப்பினரான சின்னம்மாவுக்குச் சொந்தமாகச் சொத்துகள் இருந்தாலும் கட்சி இல்லை. எனவே, அவருக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பித்து, அவரின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸாக பரிசளிக்கவே அ.ம.மு.க-விலிருந்து இந்த விலக்கல் முடிவு என்று சொல்லிவிடலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு