Published:Updated:

மிஸ்டர் கழுகு: “நிம்மதி போச்சு!” - எடப்பாடி டார்ச்சர்... காசியில் பொங்கிய பன்னீர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மிஸ்டர் கழுகு: “நிம்மதி போச்சு!” - எடப்பாடி டார்ச்சர்... காசியில் பொங்கிய பன்னீர்
மிஸ்டர் கழுகு: “நிம்மதி போச்சு!” - எடப்பாடி டார்ச்சர்... காசியில் பொங்கிய பன்னீர்

மிஸ்டர் கழுகு: “நிம்மதி போச்சு!” - எடப்பாடி டார்ச்சர்... காசியில் பொங்கிய பன்னீர்

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: “நிம்மதி போச்சு!” - எடப்பாடி டார்ச்சர்... காசியில் பொங்கிய பன்னீர்

“காசியில் நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்வுக்குச் சென்றுவிட்டு இப்போதுதான் வருகிறேன்” என்றபடி நம்முன் வந்து அமர்ந்த கழுகாரை, “வாரும்... வாரும்’’ என்று வரவேற்றோம்.

‘‘ஓ.பி.எஸ் அங்கே காவி வேட்டியில் வலம் வந்ததை அறிந்திருப்பீர்கள். தனியாகச் செல்லாமல் அவர் குடும்பத்தினருடன் அங்கு சென்றதையும் கவனிக்க வேண்டியுள்ளது. வாரணாசிக்குச் சென்றதன் காரணம், மோடியின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் கலந்துகொள்ளவே என்று அ.தி.மு.க தரப்பு முதலில் சொன்னது. ஆனால், ‘ஒருநாள் முன்பாகவே வாரணாசி செல்ல வேண்டிய அவசியம் என்ன?’ என்ற கேள்விக்கு, ‘முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை செய்யவே, முன்னதாகச் சென்றுவிட்டார்’ என்று பன்னீர்செல்வம் தரப்பில் விளக்கம் கொடுத்தார்கள்.’’

‘‘அந்த விளக்கம் சரிதானா?’’

‘‘சொல்கிறேன். வெள்ளிக்கிழமை நல்லநாள் என்பதால், அன்று வாரணாசியில் தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்ய மோடி முடிவு செய்திருந்தார். ‘வேட்பு மனுதாக்கலின்போது கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் அழைக்க வேண்டும்’ என்ற மோடியின் விருப்பத்தை அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் பி.ஜே.பி தலைமை தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் அ.தி.மு.க-வுக்கும் அழைப்பு வந்தது. ஆனால், மோடியின் வேட்புமனுத் தாக்கலுக்கு முன்தினமே குடும்பத்தினருடன் வாரணாசி சென்றுவிட்டார் ஓ.பி.எஸ். அவர் தங்கப்போகும் ஹோட்டல், அவருடைய நிகழ்ச்சிநிரல் போன்றவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்குத் தெரிவிக்கப்பட்டது.’’

‘‘ம்...’’

‘‘வாரணாசியில் பூஜையை முடித்துக் கொண்டு, பியூஷ் கோயலைச் சந்தித்துள்ளார் பன்னீர். அந்தச் சந்திப்புதான், தமிழக அரசியலில் அடுத்தடுத்த புயலைக் கிளப்பப் போகிறது.’’

‘‘விவரமாகச் சொல்லும்?’’

மிஸ்டர் கழுகு: “நிம்மதி போச்சு!” - எடப்பாடி டார்ச்சர்... காசியில் பொங்கிய பன்னீர்

‘‘பன்னீர், காசிக்குச் சென்றது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அல்ல... தன் மனக்குமுறல்களைக் காவிக்கட்சியினரின் மனங்களுக்குள் திணித்துவிட்டு வருவதற்காகத் தான். காசியில் பூஜையை முடித்த பிறகு, கோயலுடன் சந்திப்பு நடைபெற்றது. அந்தச் சந்திப்பின் ஆரம்பத்திலே பன்னீர் புலம்ப ஆரம்பித்துவிட்டாராம். பன்னீர் இப்படிப் பொங்குவார் என்று கோயலே நினைக்க வில்லையாம்.’’

‘‘என்ன பொங்கினாராம்?’’

‘‘கொஞ்சம் நஞ்சமல்ல... ‘தமிழகத்தின் துணை முதல்வராகவும் கட்சியின் ஒருங்கிணைப் பாளராகவும் நான் இருந்தாலும் என்னிடம் எந்த அதிகாரமும் இல்லை. எடப்பாடியின் பிடியில்தான் கட்சியும் ஆட்சியும் உள்ளது. எடப்பாடியின் எடுபிடிபோலவே இப்போது செயல்பட வேண்டியுள்ளது. அவர் சமூகத்து அமைச்சர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் கூட எனக்குத் தரப்படுவது இல்லை. ஒவ்வொரு நாளும் நிம்மதியில்லாமல் தவிக்கிறேன்’ என்று ஆரம்பித்துள்ளார்.’’

‘‘ஐயோ!’’

‘‘குறிப்பாக, ‘அம்மா இருந்தவரை எனக்கிருந்த மரியாதை இப்போது சுத்தமாகக் கிடையாது. முன்பு எல்லாம் என் துறையில், நான் என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள்ளலாம். இப்போது அந்தச் சுதந்திரம்கூட எனக்கு இல்லை. என் துறையில் என்ன நடக்கிறது, நான் எங்கு செல்கிறேன், யாரைச் சந்திக்கிறேன் என்று அனைத்து விவரங்களையும் உளவுத்துறையை வைத்து நோட்டம் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. என் பின்னால் இருந்தவர்கள் எல்லாம் மிரட்டி இப்போது எடப்பாடி பக்கம் திரள வைக்கிறார்கள். கடுமையான மன உளைச்சலில் தவிக்கிறேன்’ என்றெல்லாம் புலம்பியுள்ளார்.’’

‘‘கோயல் என்ன சொன்னாராம்?’’

‘‘பன்னீர் புலம்பியதைவிட அவர் குடும்பத்தினர் கூடுதலாகக் குமுறி இருக்கிறார்கள். பொறுமையாகக் கேட்ட கோயல், ‘என்ன ஐடியாவில் உள்ளீர்கள்?’ என்று கேட்டுள்ளார். ‘என் மகன் தேனி தொகுதியில் வெற்றி பெற்றுவிடுவார். அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டும்’ என்று கேட்க, ‘அதைப் பற்றி நான் அமித் ஷாவிடம் பேசுகிறேன். வெற்றிபெற்றால் கண்டிப்பாக அமைச்சரவையில் இடம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்று நம்பிக்கை கொடுத்துள்ளாராம்.’’

‘‘அடேங்கப்பா!’’

‘‘அதன்பிறகு மெதுவாக பன்னீர், “நான் அ.தி.மு.க-வில் தொடரும் மனநிலையில் இல்லை. சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு ஆட்சி நீடிக்குமா என்கிற சந்தேகம் எனக்கும் உள்ளது. அப்படி ஒரு நிலை வந்தால், பி.ஜே.பி-க்கு வரும் எண்ணம் எனக்கு உள்ளது’ என்று பன்னீர் சொன்னதும், கோயல் உற்சாகமாக, ‘வெல்கம்... வெல்கம்’ என்று சொன்னாராம். குடும்பத்தினரை வைத்துக்கொண்டே பன்னீர் இப்படிப் பேசியதன் பின்னால், ஒட்டுமொத்த குடும்பத்தின் முடிவாகவே இதை கோயலும் பார்த்துள்ளார். தவிர, காவி வேஷ்டியுடன் காவிக்கட்சிக்கு தாவும் தனது முடிவை பன்னீர் அறிவித்தது கவனிக்கத்தக்கது.’’

‘‘ஆக மொத்தத்தில் பன்னீர், கழகக் கரை வேட்டியிலிருந்து காவி வேட்டிக்கு மாறத் தயாராகிவிட்டார் என்று சொல்லும்!’’

மிஸ்டர் கழுகு: “நிம்மதி போச்சு!” - எடப்பாடி டார்ச்சர்... காசியில் பொங்கிய பன்னீர்

‘‘ஆமாம்! கடந்த சில மாதங்களாகவே பன்னீர் வேதனையில் இருக்கிறார் என்கிற பேச்சு கட்சிக்குள் பலமாக இருந்தது. வேட்பாளர்கள் பட்டியலில்கூட அவர் மகனைத் தவிர வேறு யாரும் பன்னீரின் ஆதரவாளர்கள் இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மோடியின் செல்லப் பிள்ளையாக இருந்த பன்னீரை ஒரு குறிப்பிட்ட காலத்தில் டெல்லி பி.ஜே.பி மேலிடமும் கண்டுகொள்ளவில்லை. இதனால், எதுவும் முடிவு எடுக்க முடியாமல் தவித்துவந்தவர், இங்கிருந்த முக்கிய வி.ஐ.பி மூலம் மீண்டும் மோடியிடம் இணக்கத்தை ஏற்படுத்தத் தொடர்ந்து முயன்றுவந்தாராம்.’’

‘‘ஓஹோ!’’

‘‘அந்த முயற்சி ஒருபுறம் கைகூடிய பிறகே, தன் மகன் போட்டியிடும் தேனி தொகுதிக்கு மோடியை அழைத்துவந்து பிரசாரமும் செய்ய வைத்தார். மோடி, தேனி தொகுதிக்கு வந்ததில் எடப்பாடிக்கு விருப்பம் இல்லையாம். மீண்டும் மோடியோடு, பன்னீர் ஒட்டிவிட்டார் என்கிற அச்சம் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது. தேனியில் பிரசாரம் முடிந்தபிறகு மோடியிடம் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டாராம் பன்னீர். அதன் பிறகே கோயல் மூலம் காசியில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பி.ஜே.பி-க்குத் தமிழகத்தில் உறுதியான அடித்தளம் ஏற்படுத்தவே கோயலை அந்தக் கட்சித் தலைமை இங்கு களம் இறக்கியது. இப்போது அ.தி.மு.க தலைவர் ஒருவரே, பி.ஜே.பி-க்குத் தாவும் மனநிலையில் இருக்கும்போது கோயல் அதைவிடுவாரா... கோயலிடம் பன்னீர் வைத்த மற்றொரு கோரிக்கை, ‘பி.ஜே.பிக்கு நான் வந்தால், மாநிலத் தலைவர் பதவி தனக்கு வேண்டும்’ என்பதையும் சொல்லியுள்ளார். அதற்கு கோயல், ‘தேர்தல் முடிவுகள் வரட்டும்... அமித் ஷாவிடம் பேசி முடிவுக்கு வரலாம்’ என்றும் சொல்லியுள்ளாராம்.’’

‘‘அமித் ஷா - பன்னீர் சந்திப்பு நடைபெற்றதே?’’

‘‘ஆமாம். ஏப்ரல் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மோடி வேட்புமனு தாக்கல் செய்தார் அல்லவா... அதற்கு முன்பாக வாரணாசி தாஜ் ஓட்டலில் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு அமித் ஷா காலை விருந்து கொடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இருவரையும்தான் இந்நிகழ்ச்சிக்கு பி.ஜே.பி-யிலிருந்து அழைத்திருந்தார்களாம். ஆனால், பழனிசாமி மிஸ்ஸிங். அதேசமயம், வேலுமணியும் தம்பிதுரையும் ஆஜராகியுள்ளனர். இதற்குக் காரணமே, எடப்பாடியின் உளவு பார்வைதான் என்றும் பொங்கியிருக்கிறார் பன்னீர். அந்த இருவரும் வந்ததை பி.ஜே.பி தரப்பு ரசிக்காத நிலையில், அந்த விருந்தில் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. குறிப்பாக, அமித் ஷா ஹிந்தியில் மட்டுமே பேசுவார், பன்னீருக்கோ ஹிந்தி தெரியாது. வேலுமணியை வைத்துகொண்டு என்ன பேசிவிட முடியும்? எனவே, அதற்கு முன்பாகவே கோயல் மூலம் தனது மனஓட்டத்தை பி.ஜே.பி தலைமைக்குக் கொண்டுசென்றுவிட்டார் பன்னீர்.’’

மிஸ்டர் கழுகு: “நிம்மதி போச்சு!” - எடப்பாடி டார்ச்சர்... காசியில் பொங்கிய பன்னீர்

‘‘பன்னீர் ஒரு புறம் பி.ஜே.பி-க்குத் தாவ பார்க்கும் நேரத்தில், தமிழகத்தில் ஆட்சியைக் காப்பாற்ற அதிரடியில் இறங்கிவிட்டாரே எடப்பாடி?’’

‘‘ஏற்கெனவே சொல்லியிருந்தேனே... எடப்பாடியின் கணக்கே ஐந்து எம்.எல்.ஏ-க்களைக் காலி செய்து, தன் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். அதற்கான ஆரம்ப கட்டமாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மூவருக்கு நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஜூன் மாதம் சட்டமன்றம் கூடும். தேர்தல் முடிவுகள் ஆளும்கட்சிக்குச் சாதகமாக வரவில்லை என்றால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை வரும். அப்போது நோட்டீஸ் கொடுத்தால், கால அவகாசம் கொடுக்கமுடியாமல் போய்விடும். அதனால், இப்போது நோட்டீஸ் கொடுத்து 15 நாள்களில் விளக்கம் கேட்க உள்ளார் சபாநாயகர். அவர்கள் தரப்பிலிருந்து விளக்கம் தரவில்லை என்றால், தகுதிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ளவார் சபாநாயகர் என்கிறார்கள்.’’

‘‘என்ன காரணம் சொல்லி தகுதிநீக்கம் செய்வார்கள்?

‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிக்கு விரோதமாக, எதிர்தரப்புக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்கள் என்று குற்றச்சாட்டையே இப்போது பிரதானப்படுத்த உள்ளார்களாம்.”

“தி.மு.க தரப்பு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதே?’’

‘‘எதிர்க் கட்சி, எதிர்க்கத்தானே செய்யும்?’’

‘‘அவர்கள் வேறு திட்டத்தில் உள்ளார்கள். சபாநாயகர் மூன்று பேருக்கு நோட்டீஸ் கொடுக்கும் முன்பு சபாநாயகர்மீது நம்பிக்கை இல்லை என்று சட்டமன்றச் செயலாளரிடம் நோட்டீஸ் அளித்தால், சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை வந்துவிடும். அதை இப்போது செய்யலாம் என்று தி.மு.க திட்டமிடுகிறதாம்’’ என்றபடி சிறகை விரித்தார் கழுகார்.

அட்டைப் படம்: வி.ஸ்ரீனிவாசுலு

ஆணையத்துக்கு தடை!

ஜெ
யலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த ஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். ‘ஆணையத்தில் மருத்துவக்குழு அமைக்க வேண்டும்’ என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க ஆணையம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில்தான் ஆணையத்தின் விசாரணைக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யாதது ஏன்?’ என்பது குறித்து அப்போலோமீது எழுந்த சர்ச்சையின் காரணமாகவே மருத்துவக் குழுவின் விசாரணையை அப்போலோ கேட்டது குறிப்பிடத்தக்கது.

இது இப்படியிருக்க, ‘ஜெயலலிதா மரணத்திலிருக்கு மர்மத்தை விசாரிக்க, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்த ஓ.பன்னீர்செல்வம், ஏழு முறை சம்மன் அனுப்பப்பட்டும் ஆணைய விசாரணையில் ஆஜர் ஆகவில்லை. இந்நிலையில், இந்தத் தடை வேறு விதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, பன்னீர், அப்போலோ, ஆணையம், சசிகலா, தமிழக அரசு என்று பலதரப்பையும் வைத்து பலவிதமான சந்தேகங்களும் எழுந்து நிழலாட ஆரம்பித்துள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு