Published:Updated:

வங்கம் முதல் வடகிழக்கு வரை... பிரமிக்க வைக்கிறது பி.ஜே.பி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வங்கம் முதல் வடகிழக்கு வரை... பிரமிக்க வைக்கிறது பி.ஜே.பி!
வங்கம் முதல் வடகிழக்கு வரை... பிரமிக்க வைக்கிறது பி.ஜே.பி!

வங்கம் முதல் வடகிழக்கு வரை... பிரமிக்க வைக்கிறது பி.ஜே.பி!

பிரீமியம் ஸ்டோரி

‘அகில இந்திய கட்சி’ என்கிற வார்த்தைக்கு முழுமையான அர்த்தம் கொடுக்கும் வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது பி.ஜே.பி! ஒருகாலத்தில் ‘ஹிந்தி’ பேசும் மாநிலங்களில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியவர்கள், அடித்தளம் இல்லாமல் இருந்த மேற்கு வங்கம், ஒடிஷா போன்ற மாநிலங்களிலும் இப்போது வலுப்பெற்று வருகிறார்கள். ஒடிஷாவில், காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு அருகே வந்து நிற்கிறார்கள். மேற்கு வங்கத்திலும் கம்யூனிஸ்ட்களை காலி செய்துகொண்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களிலும் பி.ஜே.பி கொடி பறக்கிறது. 

வங்கம் முதல் வடகிழக்கு வரை... பிரமிக்க வைக்கிறது பி.ஜே.பி!

மேற்கு வங்கம்

ம்தா, சரியான சண்டைக்கோழி! ஜெயலலிதா மறைந்த பிறகு, மெஹ்பூபா முப்தி ஆட்சி கலைந்தபிறகு, ஆனந்திபென் படேல் பதவியிலிருந்து இறங்கிய பிறகு, இந்தியாவில் மிச்சமிருக்கும் ஒரே பெண் முதலமைச்சர் மம்தா மட்டுமே. எதிரிகள் யாரும் இல்லை என்கிற மிதப்பில் இருந்தவர், சங்பரிவாரங்களின் வளர்ச்சியைச் சரியாகக் கண்டுகொள்ளவில்லை. விளைவு, 2018-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், 20 சதவிகித இடங்களைப் பிடித்து அதிரவைத்தது, பி.ஜே.பி. அதுவும், மாவோயிஸ்ட் மண்டலங்களில் அவர்கள் பெற்ற வெற்றி ஆச்சர்யத்துக்குரியது.

மேற்கு வங்கத்தில் எங்கு திரும்பினாலும் ‘திரிணாமூல்’தான். கம்யூனிஸ்ட்கள் காட்சிப் பொருளாக நிற்கிறார்கள். மக்களும் மம்தாவைக் கொண்டாடுகிறார்கள். ஆக, மம்தாவின் பிம்பத்தைச் சரிக்காமல் அங்கே பி.ஜே.பி–யால் பெரிய வெற்றிகளைப் பெற்றுவிட முடியாது. ஆனால், மம்தா எளிமையானவர். அரசியலில் சம்பாதிக்காதவர். ஜெயலலிதா தங்கத்தில் திளைத்தார், மாயாவதி வைரத்தை விரும்பினார். மம்தாவுக்கு அந்த வெள்ளுடையும் வெள்ளைச்செருப்பும் மட்டுமே அடையாளம். அம்பானி வீட்டுத் திருமணத்துக்குச் சாதாரண உடையில் அவர் வந்து இறங்கியபோது, அங்கிருந்த அத்தனை ஆடம்பரங்களும் அர்த்தம் இழந்தன. இப்படிப்பட்டவரை, தனிப்பட்ட தாக்குதல் நடத்தித் தகர்க்க முடியாது என்பதை பி.ஜே.பி தாமதமாகவே உணர்ந்தது.

என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள் மோடியும் அமித் ஷாவும். மேற்கு வங்கத்துக்கு வரும்போதெல்லாம், ‘சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் மம்தா’ என்று கூவினார்கள். மக்கள் கண்டுகொள்ளவில்லை. அடுத்து அவர்கள் கையில் எடுத்ததுதான் சாரதா நிதி நிறுவன ஊழல். அரசியல் களத்தில், அது அபாரமாக ஒர்க் அவுட் ஆகிறது. ‘ஒரே ஒரு ஓவியத்தை விற்றுவிட்டு நான் படும்பாடு இருக்கிறதே’ என்று கலங்கிக்கொண்டிருக்கிறார் மம்தா.

மேற்கு வங்கத்தின் மேப்பை பூதக்கண்ணாடி வைத்துத் தேடினாலும், காங்கிரஸின் தடயம் சிக்காது. அந்த அளவுக்கு ‘கை’யைக் கழுவிவிட்டார்கள் மேற்கு வங்க மக்கள். அதனால், கடைசி நேரம்வரை மம்தா கூட்டணிக்கு அழைப்பார் என்று காத்திருந்தார் ராகுல். ‘நமோ எதிர்ப்பு’ என்ற நிலைப்பாட்டில் நம்மை நெருங்குவார் என்று எதிர்பார்த்தார். மம்தா நடத்திய மெகா மாநாட்டுக்கு ‘அன்புள்ள அக்கா... உங்களுக்கு என் ஆதரவு’ என்று வாழ்த்துக் கடிதம்கூட அனுப்பினார். ஆனால், ராகுலுக்கு ரசகுல்லா தந்துவிட்டார் மம்தா.

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகள் இருக்கின்றன. வன்முறை வாசத்தோடு சில தொகுதிகளில் தேர்தலும் நடந்துமுடிந்துவிட்டது. எப்படியும், அதிக தொகுதிகளை மம்தாதான் ஜெயிக்கப் போகிறார். இது முக்கியச் செய்தி அல்ல. ஆனால், மம்தாவுக்கு அடுத்த இடத்தில், கம்யூனிஸ்ட்களையும் காங்கிரஸையும் ஓரங்கட்டிவிட்டு வந்து நிற்கப் போகிறார்கள் பி.ஜே.பி-யினர். இதுதான் முக்கியச் செய்தி.

வங்கம் முதல் வடகிழக்கு வரை... பிரமிக்க வைக்கிறது பி.ஜே.பி!

ஒடிஷா

ன்றைய தேதியில் ஒடிஷாவில் இரண்டாவது பெரிய கட்சி, பி.ஜே.பிதான். காங்கிரஸ் கரைந்துகொண்டிருக்கிறது. அதுவும், உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி காட்டிய பெர்ஃபாமன்ஸை எப்படி அளவிடுவது என்று அரசியல் ஆய்வாளர்களே குழம்பிக் கிடக்கின்றனர். 2012-ம் ஆண்டில் 36 இடங்களை மட்டுமே பெற்றவர்கள், 2017-ல் 306 இடங்களைப் பிடித்தார்கள். மாநகராட்சியிலும் முப்பதில் எட்டு இடங்களை பி.ஜே.பி பிடித்தது. ஆறாண்டுகளில் அசுர வளர்ச்சி.  கேட்டால், ‘மத்தியில் நல்லாட்சி கொடுத்தோம். அதனால் வளர்ந்தோம்’ என்கிறார், முக்தர் அப்பாஸ் நக்வி. ‘மோடி நல்லாட்சி கொடுத்தார்’ என்பதை அமித்ஷாவே நம்பமாட்டார் எனும்போது ஒடிஷா மக்கள் எப்படி நம்புவார்கள் என்று பிஜூ ஜனதா தளமே பிரமித்துப் போயிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்கிறது, ஒடிஷா. நாடாளுமன்றத்துக்கு 21 தொகுதிகளும், சட்டமன்றத் தேர்தலுக்கு 147 தொகுதிகளும் இருக்கின்றன. மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 அன்று நடந்தது.

அடிப்படையில், நவீன் பட்நாயக் சொல்பவர் அல்ல, செய்பவர். ஆட்சிப் பீடத்தில் ஏறியபோது, நவீனின் முன்னால் இமயமலை உயரத்துக்கு இரண்டு சவால்கள் நின்றன. சீரழிந்து கிடந்த பொருளாதார நிலையும், மிகவும் பின் தங்கியிருந்த பெண்களின் வாழ்க்கைப்பாடுமே அவை. நவீன் நம்பிக்கை வைத்தார். துவண்டு கிடந்த மாநிலத்தைத் தூக்கி நிறுத்தினார். சாலைகள், பள்ளிக்கூடங்கள், தண்ணீர்த் தொட்டிகள் என அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்தினார். இதுவரை ஏழு லட்சம் சுய உதவிக்குழுக்களை உருவாக்கியிருக் கிறார். அதன் மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை நிலைப்படுத்தியிருக்கிறார்.  ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மருத்துவமனை வளாகங்களில் ஐந்து ரூபாய்க்கு உணவு ஆகியவை நவீனின் பெயரைச் சொல்கின்றன. விவசாயிகளுக்காக அவர் அமல்படுத்தி இருக்கும் ‘காலியா’ (KALIA) திட்டமும் முக்கியமான முயற்சி.

ஆனால், வேலைவாய்ப்பிலும், தொழில் வளர்ச்சியிலும் கொஞ்சம் கோட்டைவிட்டிருக்கிறார். இதனால், வேறு மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதுதான் பி.ஜே.பி நுழையும் இடைவெளியைஅதிகப்படுத்தியிருக்கிறது. இதனால், எப்படியும் எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டிவிடுவார்கள் என்று காங்கிரஸ்காரர்களே சொல்லி வருகிறார்கள்.

வங்கம் முதல் வடகிழக்கு வரை... பிரமிக்க வைக்கிறது பி.ஜே.பி!

வடகிழக்கு

டகிழக்கில் கால் பதிக்கும் நோக்கில், 2016-ம் ஆண்டு ‘வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி’யை உருவாக்கினார் அமித் ஷா. இரண்டே ஆண்டுகளில் நான்கு மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். எப்படி? பலமாக இருக்கும் கட்சியை பலவீனப்படுத்தினார்கள், அந்தக் கட்சியில் இருக்கும் முக்கியத் தலைவர்களை விலைபேசி வீழ்த்தினார்கள், பிரிவினைவாத கட்சியாகவே இருந்தாலும் கைகோத்தார்கள்... இப்படியாக ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, வடகிழக்கில் பி.ஜே.பி வலுவான சக்தி. அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அவர்களின் கைகளுக்குள் இருக்கின்றன. நாகாலாந்திலும், மேகாலயாவிலும் அவர்களின் ஆதரவு பெற்ற கட்சிகளே ஆட்சி செலுத்தி வருகின்றன.

வடகிழக்கு மாநிலங்களில், மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. அதில் குறைந்தது 20 இடங்கள், பி.ஜே.பி-யின் இலக்கு. ‘மிஷன் 20’ என்று அதற்குப் பெயர். இதில் பத்தோ, பதினைந்தோ தேறிவிடும் போலிருக்கிறது.

அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்திருக்கிறது. அருணாச்சல பிரதேசத்தில் ஆலோ ஈஸ்ட், யச்சூலி, திராங் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் பி.ஜே.பி வேட்பாளர்கள் போட்டியின்றியே தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய புரட்சி படைத்துள்ளனர். அவர்களை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் உட்பட அனைவரும் வேட்புமனுக்களை வாபஸ் வாங்கிவிட்டார்கள். மீதியிருக்கும் 57 தொகுதிகளுக்கு மட்டுமே ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடந்தது. பி.ஜே.பி ஆதரவு பெற்ற பீமா காந்துதான் மீண்டும் அரியணை ஏறுவார் என்கிறார்கள்.

சிக்கிமிலும் அதே கதைதான். அங்கே ஆட்சியில் இருக்கும் சிக்கிம் ஜனநாயக முன்னணி, வடகிழக்கு ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி. ஆனால், இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சியான சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சாவிடம் கூட்டணிக்கு அடிபோட்டது பி.ஜே.பி. ஏனென்றால், முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் நீண்ட ஆட்சியின்மீது அதிருப்தி அலை அதிகமாக வீசுகிறது. இதை உணர்ந்து, எதிர்க்கட்சியை வளைக்கப் பார்த்தார்கள். ஆனால், அந்தக் கட்சியின் தலைவர் பிரேம்குமார் டமாங் ஆர்வம் காட்டவில்லை. எப்படியும் தேர்தலுக்குப் பிறகு கூட்டணிக்கு அழைத்து வந்துவிடலாம் என்று காத்திருக்கிறார்கள். டமாங் கூட்டணிக்குள் வந்துவிட்டால், சாம்லிங்கை ‘டக்’கென்று கழற்றிவிடுவார்கள்.

வடகிழக்கு, மேற்கு வங்கம், ஒடிஷா மாநிலங்களை மனதில் வைத்துதான், ‘பெரும்பான்மை பெறுவோம். எவர் ஆதரவும் இல்லாமல் அரியணை அமர்வோம்’ என்று பேசிவருகிறார், அமித் ஷா. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் இழக்கும் இடங்களை அங்கே ஈடுசெய்துவிடலாம் என்பது அவரது கணக்கு.

நடந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

- சக்திவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு