Published:Updated:

தேனியை விட்டு விருதுநகருக்கு இடம்பெயரும் ஓ.பி.எஸ். மகன்...? ஏன்?

"ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் தன் மகனுக்கு எம்.பி. சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோனது மாதிரி இந்த முறை இல்லை."

தேனியை விட்டு விருதுநகருக்கு இடம்பெயரும் ஓ.பி.எஸ். மகன்...? ஏன்?
தேனியை விட்டு விருதுநகருக்கு இடம்பெயரும் ஓ.பி.எஸ். மகன்...? ஏன்?

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட, துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் விருப்ப மனு பெற்றது முதல் தேனி மாவட்ட அரசியல் களமும், தமிழக அரசியல் களமும் சூடுபிடிக்கத் தொடங்கியது எனலாம். தேனி தொகுதியில் ரவி நிறுத்தப்பட்டால், அவருக்கு இணையான, சரியான போட்டி வேட்பாளரைக் களம் இறக்க வேண்டும் என தி.மு.க கூட்டணி மற்றும் அ.ம.மு.க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது.

இதற்கிடையே, ஓ.பி.எஸ். மகன் ரவி, தேனி தொகுதியை விட்டு மாறி, விருதுநகர் தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியானது. அங்கொன்றும், இங்கொன்றுமாக கட்சி நிர்வாகிகளுக்குள் கிசுகிசுவாகப் பேசப்பட்டு வந்த இந்தத் தகவலை தேனியில் நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதிப்படுத்தியுள்ளார். ரவியை விருதுநகர் தொகுதியில் போட்டியிட தாம் அழைப்பதாக மேடையிலேயே அமைச்சர் பேசினார்.

ஓ.பி.எஸ்-ன் தம்பி ஓ.ராஜாவின் பள்ளி எனக் கருதப்படும், பெரியகுளம் ரோட்டில் அமைந்துள்ள ரோஸி வித்யாலயா பள்ளியில், ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டார். தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சையதுகான், ரவீந்தநாத் குமார் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். அமைச்சர் பேசுகையில், ``எதிர்க்கட்சிகள் எங்களை அடிமைகள் என்று விமர்சிக்கின்றனர். ஆம். நாங்கள் அடிமைகள்தான். மத்திய அரசிடமிருந்து எய்ம்ஸ் போன்ற முக்கியத் திட்டங்களை தமிழகத்திற்குப் பெற்றுத்தந்த எங்களை அடிமைகள் என்று விமர்சித்தால் ஆயிரம் அடிமைப் பட்டங்களை வாங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சிலர் பார்த்துவிட்டு நலம் விசாரிப்பதற்காகவே வந்தோம் என்று கூறுகின்றனர். அப்படி என்றால் விஜயகாந்தை வெளிநாட்டிலிருந்து வந்தவுடனே சென்று பார்த்து இருக்க வேண்டும்.

மதுரை மண்ணில் பிறந்தவர் விஜயகாந்த். தன்னை யார் சூழ்ச்சியுடன் சந்திக்க வருகின்றனர்; யார் நலம் விசாரிக்க வருகின்றனர் என்பது அவருக்குத் தெரியும்.  தமிழக மக்களின் நலன் கருதி, கூட்டணி குறித்து விரைவில் அவர் நல்ல முடிவை அறிவிப்பார். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றிபெறுவார். நான் சார்ந்திருக்கிற சாத்தூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதி விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. எனவே, ரவீந்திரநாத் குமாரை விருதுநகர் தொகுதிக்கு அழைக்கிறேன்” என்றார். அதைக் கேட்டு மேடையில் அமர்ந்திருந்த  ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார் புன்னகைத்தார்.

தேனி தொகுதியை ஏன் தவிர்த்தார் ஓ.பி.எஸ். மகன்?

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பமனு பெற்றுவிட்டு, விருதுநகர் தொகுதிக்குத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கக் காரணம் என்ன என ஓ.பி.எஸ்-ன் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். ``தேனியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் மீது ஓ.பி.எஸ்-க்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. தர்மயுத்தம் மேற்கொண்ட காலத்தில் அதனை நன்கு உணர்ந்தார் ஓ.பி.எஸ். அதிகாரத்தில் இல்லை என்றதும் தன் பின்னால் யாரும் இல்லாததை அவர் நேரடியாகப் பார்த்து உணர்ந்திருக்கிறார். தேர்தல் என்று வந்தால், தன் மகனை இவர்கள் ஜெயிக்க வைத்துவிடுவார்கள் என்று அவர் எப்போதும் நம்பியதில்லை. அதனால்தான் விருதுநகர் தொகுதியைத் தேர்ந்தெடுக்க முடிவெடுத்தார் ஓ.பி.எஸ். ரவியும் அதற்குச் சரி என்று சொல்லிவிட்டார். ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் தன்  மகனுக்கு எம்.பி. சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோனது மாதிரி இந்த முறை இல்லை. அதனால், வலுவான தொகுதியாகவும், தன் சமூக பலம் அதிகமாகவும் இருக்கும் விருதுநகர்த் தொகுதியில் ரவியை நிறுத்தி எளிதில் வெற்றிபெற வைத்துவிடவேண்டும் எனக் கணக்குப்போட்டுவைத்துள்ளார் ஓ.பி.எஸ்” என்றனர்.

வருவாய்த்துறை அமைச்சரின் ஓபன் டாக் மூலம் ரவீந்திரநாத் குமார், விருதுநகர் தொகுதியில் நிறுத்தப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தி.மு.க. கூட்டணி மற்றும் அ.ம.மு.க யாரை வேட்பாளராக நிறுத்த இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டே ஓ.பி.எஸ் மகன் ரவியின் வெற்றிவாய்ப்பு அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.