Published:Updated:

`வந்தால் 2 சீட், அதுவும் விஜயகாந்துக்காகத்தான்!' - பிரேமலதாவைக் கண்டுகொள்ளாத அ.தி.மு.க.!

10 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக தே.மு.தி.க வாக்குவங்கி சுருங்கிவிட்டது. எந்தநிலையில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

`வந்தால் 2 சீட், அதுவும் விஜயகாந்துக்காகத்தான்!' - பிரேமலதாவைக் கண்டுகொள்ளாத அ.தி.மு.க.!
`வந்தால் 2 சீட், அதுவும் விஜயகாந்துக்காகத்தான்!' - பிரேமலதாவைக் கண்டுகொள்ளாத அ.தி.மு.க.!

`அ.தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை' எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். `தே.மு.தி.க வருமா என்பது ரகசியம்' எனக் கூறியிருக்கிறார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். `எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை' என பிரேமலதா கூறினாலும், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தே.மு.தி.க நடத்தும் ஆட்டத்தை உற்று கவனித்து வருகிறது அண்ணா அறிவாலயம். 

சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வைத்துக் கடந்த 19-ம் தேதி காலை அ.தி.மு.க-பா.ம.க கூட்டணி முடிவானதாக இரு கட்சிகளின் தலைவர்களும் அறிவித்தனர். அன்று மதியம் பா.ஜ.க தமிழகப் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் நடந்த சந்திப்பில், பா.ஜ.க-வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. `தே.மு.தி.க தலைவர்களும் வருவார்கள்' என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் பிரதிநிதிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து, விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கே சென்று பேசினார் பியூஷ் கோயல். அங்கு விஜயகாந்த் மைத்துனர் சுதீஷுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 

`பா.ஜ.க கூட்டணியை தே.மு.திக உறுதி செய்யவில்லை' என்ற தகவல் கிடைத்ததும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். இதன்பிறகு நடிகர் ரஜினிகாந்தும் சந்தித்துப் பேசினார். இந்தநிலையில், வடசென்னை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு நேராக விஜயகாந்தைச் சந்தித்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இந்தச் சந்திப்பு குறித்துப் பேட்டியளித்த ஸ்டாலின், `அரசியல் பேசுவதற்காக வரவில்லை. உடல்நலம் குறித்து மனிதாபிமானத்துடன் விசாரிக்க வந்தேன். நீங்கள் எதிர்பார்த்த சந்திப்பு இல்லை. உங்கள் நல்ல எண்ணத்துக்கு நன்றிகளும் பாராட்டுகளும்' என்றதோடு முடித்துக்கொண்டார். ஆனால், ஸ்டாலின் சந்திப்பு குறித்து பேட்டியளித்த பிரேமலதா, `விஜயகாந்தை ரஜினிகாந்த், ஸ்டாலின் சந்தித்ததில் நலம் விசாரிப்பு மட்டுமல்ல, அனைத்தும் பேசப்பட்டுள்ளது' என்றார். 

பிரேமலதாவின் இந்த விளக்கம், தி.மு.க தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``தி.மு.க கூட்டணிக்குள் தே.மு.தி.க-வைச் சேர்ப்பது தொடர்பாக எந்த விவாதங்களும் நடைபெறவில்லை. `அரசியல் பேசவில்லை' என ஸ்டாலின் தெளிவுபடுத்திய பிறகும், பிரேமலதா இவ்வாறு பேசியதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்றவர்கள், தொடர்ந்து நடந்த விஷயங்களை விளக்கினர். ``பிப்ரவரி 22 அன்று கொளத்தூரில் பெரம்பலூர் அனிதா நினைவாக அகாடமி ஒன்றைத் திறந்து வைத்தார் ஸ்டாலின். அன்று வடசென்னையில் கட்சி நிர்வாகி ஒருவரின் திருமணத்துக்கும் சென்றார். அப்போது விஜயகாந்தைச் சந்திப்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் சிலர் ஸ்டாலினிடம் பேசியுள்ளனர். ` அவரைச் சந்திக்கப் போனால் அரசியல் ஆக்கிவிடுவார்கள்' என ரொம்பவே யோசித்தார் ஸ்டாலின். 

அப்போது பேசிய சீனியர் நிர்வாகி ஒருவர், `திருநாவுக்கரசர் சென்று பார்த்துவிட்டார், ரஜினியும் சந்தித்துவிட்டார். இந்தச் சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு நீங்கள் அவரைச் சந்திக்கவில்லையென்றால் நன்றாக இருக்காது. அதனால் நீங்களும் ஒருமுறை அவரைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்' எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, துரைமுருகன், பொன்முடி, ஜெகத் ரட்சகன் உள்ளிட்டோரை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார் ஸ்டாலின். சிறிது தூரம் சென்றதும், `நீங்கள் யாரும் என்னுடன் வர வேண்டாம். இதை வேறுவிதமாகப் பார்ப்பார்கள். பேட்டி கொடுத்தால்கூட தெளிவாகக் கூறிவிட்டுத்தான் வருவேன்' எனச் சொல்லிவிட்டுச் சென்று பார்த்தார். சீனியர்களிடம் கூறியது போலவே, `அரசியல் பேச வரவில்லை' எனக் கூறிவிட்டார். இந்தச் சந்திப்பை தங்களுக்கான லாபமாக தே.மு.தி.க மாற்றிக் கொள்ளப் பார்க்கிறது. தி.மு.க-வைப் பொறுத்தவரையில், எந்த இடத்திலும் தே.மு.தி.க-வுக்காகக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கவில்லை. `அப்படியே வந்தாலும் ஒரு சீட் கொடுக்கலாம்' என்பதுதான் தி.மு.க நிர்வாகிகளின் மனநிலையாக இருக்கிறது" என்கின்றனர் இயல்பாக. 

அ.தி.மு.க தரப்பிலும், `தே.மு.தி.க வராவிட்டால் கவலையில்லை' எனக் கூறிவிட்டனர். இந்தப் பேச்சுக்களின் பின்னணி குறித்துப் பேசும் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள், ``பா.ம.க-வுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான அன்று, இரண்டு தரப்பிலும் பல விஷயங்களை விவாதித்துள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, `விஜயகாந்த் கட்சி என்னவானது, அவர்களுடன் பேசிவிட்டீர்களா..நம்முடன் வருகிறார்களா?' எனக் கேட்டிருக்கிறார். இதற்குப் பதில் கொடுத்த முதல்வர், ` அந்தக் கட்சியிலிருந்து சந்திரகுமார், பார்த்திபன் போன பிறகே தே.மு.தி.க நிலைமை மாறிவிட்டது. 10 சதவிகித வாக்கிலிருந்து 2 சதவிகிதமாகச் சுருங்கிவிட்டது. எந்தநிலையில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்தால் 2 சீட், அதுவும் விஜயகாந்துக்காகத்தான். இந்த அணிக்குள் அவர்கள் வந்தால் வரட்டும்' என உறுதியாகக் கூறிவிட்டார். அதனால்தான் தே.மு.தி.க-வுடன் பேச்சு நடத்த பியூஷ் கோயல் மட்டும் சென்றார். இதுதான் களநிலவரம். பிரேமலதா பேசிக் கொண்டிருப்பதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என்கின்றனர் தெளிவாக. 

`ஒரு கட்சியை விமர்சித்ததால், அந்தக் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பது இல்லை. அரசியலுக்கு என்று ஒரு வியூகம் உள்ளது. கடந்த ஒரு தேர்தலை மட்டும் வைத்து தே.மு.தி.க-வின் பலத்தைக் கணித்து விடக் கூடாது. மக்களவை தேர்தலில் தே.மு.தி.க. பலத்தை நிரூபிக்கும்' எனப் பேசியிருக்கிறார் பிரேமலதா. அவரது நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை மட்டும் நம்பி, கூட்டணிக்கான அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் தே.மு.தி.க தொண்டர்கள்.