Published:Updated:

ஜெயலலிதாவின் பிரசார வாகனம் ஓ.பி.எஸ்ஸுக்கா; ஈ.பி.எஸ்ஸுக்கா?

``எதிரும் புதிருமாக இருந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் எல்லா தேர்தல்களிலும் எங்களோடுதான் கூட்டணி வைத்தார்கள். சின்னச் சின்ன விஷயங்களில்கூட, கருணாநிதியோடு முரண்பட்டிருந்த ஜெயலலிதா, இங்கேதான் அவருக்குப் பிரசார வாகனம் தயாராகுதுன்னு தெரிஞ்சும் எங்ககிட்ட ஆர்டர் கொடுத்தாங்க."

ஜெயலலிதாவின் பிரசார வாகனம் ஓ.பி.எஸ்ஸுக்கா; ஈ.பி.எஸ்ஸுக்கா?
ஜெயலலிதாவின் பிரசார வாகனம் ஓ.பி.எஸ்ஸுக்கா; ஈ.பி.எஸ்ஸுக்கா?

தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. ``அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...” என்று முழங்கியபடி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நம்மை நோக்கிவரத் தயாராகி வருகிறார்கள். அவர்கள் என்ன பேசப்போகிறார்கள் என்பதுதான் பிரதானமாக இருந்தாலும், அவர்கள் பவனிவரும் பிரசார வாகனம் குறித்த விசாரணையிலும் நம்மவர்கள் அலாதியான ஆர்வம் காட்டுவார்கள். பல தேர்தல்களில் ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் போன்றோருக்குப் பிரசார வாகனம் தயார் செய்துகொடுத்த கோவை கோயாஸ் & பிரதர்ஸ் நிறுவனம் இப்போது ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்ஸுக்கான பிரசார வாகனம் தயார் செய்வதில் பிஸியாக இருக்கிறது. அவற்றில் என்னென்ன ஸ்பெஷல்?

கோவை கோயாஸ் நிறுவனத்திற்கு விசிட் அடித்தோம்...

ஓ.பி.எஸ்ஸுக்கு ஒன்று, ஈ.பி.எஸ்ஸுக்கு ஒன்று என மொத்தம் இரண்டு பிரசார வாகனங்களைத் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. இதுதவிர, கடந்த தேர்தலில் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்குப் பயன்படுத்திய ஒரு வாகனமும் புனரமைப்பிற்காக கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருந்தது. ``இந்நேரம் அந்த அம்மா இருந்திருந்தா இந்த வண்டியைச் சுத்தி அ.தி.மு.க புள்ளிகள் அரணாக நிற்பார்கள். யாரும் நெருங்க முடியாது" என்று கடந்த காலத்தைச் சிலிர்ப்போடு நினைவு கூர்ந்தார் அந்த நிறுவனத்தின் ஊழியர்.

ஜெயலலிதா பயன்படுத்திய வாகனம்

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது நிலவிய கெடுபிடிகள் இல்லாததால் அந்த வாகனத்தினுள் ஏறினோம். கதவைச் சாத்திக்கொண்டால் அது வாகனம் என்கிற உணர்வே வராது. சொகுசு பங்களாவின் குட்டி அறை என்றே அதனை வர்ணிக்கலாம். ஜெயலலிதாவுக்குப் பிடித்த கண்ணைப் பறிக்காத மைல்டு கலரில் இண்டீரியர் டெகரேஷன், இரண்டு ஏ.சி செட், மேக்-அப் செய்வதற்கு வசதியாகக் கண்ணாடி, உள்ளேயே டாய்லெட் என்று அத்தனை சொகுசு வசதிகளும் இடம்பெற்றிருந்தன. இத்தனைக்கும் நாம் பார்த்தது அந்த வாகனத்தின் முழுப் பரிமாணம் கிடையாது. ஓய்வெடுக்க அமைக்கப்பட்டிருந்த உயர் ரக பெட் மற்றும் அமர்வதற்கான இருக்கைகள் உள்ளிட்ட பல வசதிகள் அகற்றப்பட்ட நிலையில் இருந்த வெறும் கூடுதான். அதுவே இந்தளவு சொகுசாகக் காட்சியளித்தது.

கோயாஸ் நிறுவன ஊழியர்களிடம் பேச்சுக் கொடுத்தோம், ``எதிரும் புதிருமாக இருந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் எல்லா தேர்தல்களிலும் எங்களோடுதான் கூட்டணி வைத்தார்கள். சின்னச் சின்ன விஷயங்களில்கூட, கருணாநிதியோடு முரண்பட்டிருந்த ஜெயலலிதா, இங்கேதான் அவருக்குப் பிரசார வாகனம் தயாராகுதுன்னு தெரிஞ்சும் எங்ககிட்ட ஆர்டர் கொடுத்தாங்க. ஏன்னா, நாங்கள் தருகிற தரம் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு என்று பெருமையோடு ஆரம்பித்தார்கள். ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாத முதல் தேர்தல் இது. யாருக்கு எப்படியோ எங்களுக்கு ரொம்ப வருத்தம். அவங்க ரெண்டுபேரும் இருந்திருந்தா, இந்நேரம் இந்த இடம் திருவிழாபோல இருந்திருக்கும். பிரசார வண்டி தயாராகி வெளியே போகிற வரைக்கும் பல வி.ஐ.பி-க்கள் இங்கேயே காத்துக்கிடப்பாங்க. சின்னச் சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்வோம். ஜெயலலிதா உட்காரும் சீட்ல யாரும் உட்கார்ந்துகூட பார்க்க மாட்டாங்க.

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸுக்குத் தயாராகும் பிரசார வாகனங்கள்

ஆனால், இப்பவும் எங்க வேலையில எந்தக் குறையும் இல்லை. அதே தரத்தைக் கொடுக்கும் வகையில்தான் உழைக்கிறோம். ஆனால், இதை ஜெயலலிதாவுக்காகத் தயாரிக்கிறோம், இதுலதான் கருணாநிதி பிரசாரத்திற்குப் போகப் போறார்னு நினைக்கும்போது உள்ளுக்குள்ளே வருமே ஓர் இனம் புரியாத உணர்வு, அது இப்போ இல்லை. இப்போது ஓ.பி.எஸ்ஸுக்கும், ஈ.பி.எஸ்ஸுக்கும் மட்டும்தான் ஆர்டர் வந்திருக்கு. கடந்த தேர்தலில் ஜெயலலிதா பயன்படுத்திய ஓய்வெடுக்கும் வாகனம் ரீ-ஒர்க்கிற்கு வந்திருக்கு. அது இப்போ ஓ.பி.எஸ்ஸுக்குன்னு சொல்றாங்க. ஆனால், யார் பயன்படுத்தப் போறாங்கன்னு கன்ஃபார்மா தெரியலை" என்றனர். மேலும், ``முந்தைய தேர்தல்களைவிட இப்போ வண்டிகள் குறைவுதான். கமல் சார் ஆபீஸ்ல இருந்து பேசியிருக்காங்க. ஆனால், அது இன்னும் கன்ஃபார்ம் ஆகலை. இனிமேல்தான் ஆர்டர்ஸ் வரும்" என்கிறார்கள்.

பிரசாரத்திற்கான சொகுசு வாகனங்களில் என்னென்ன வசதிகள் செய்யப்படுகின்றன என்பது குறித்து கோயாஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ரியாஸிடம் பேசினோம். ``முன்பக்கம் அமர்ந்து செல்வதற்கு சுழலும் இருக்கை, வாகனத்தின் இருபுறமும் எல்.இ.டி. விளக்குகள், அலுங்காமல் குலுங்காமல் செல்ல அதிநவீன் ஷாக்கப்சர்,  ஓய்வெடுக்க உயர் ரக பெட், நாட்டு நடப்புகளை அந்தந்த நேரத்தில் அப்டேட் செய்துகொள்வதற்கு ஏதுவாக டி.வி, பிரசாரத்தின் போது வாகனத்தின் வெளியே தலைகாட்டுவதற்கு ஏதுவாக ஹைட்ராலிக் லிஃப்ட் என முந்தைய தேர்தலில் செய்து கொடுத்த வசதிகளைத்தான் இப்போதும் செய்கிறோம். பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் இல்லை. ஆனால், முழுக்க முழுக்க எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் கொண்டு வந்திருக்கிறோம். தற்சமயம் தயாராகும் இரண்டு பிரசார வாகனத்தில் ஒன்றில் பெட் வசதியும், இன்னொன்றில் இருக்கை வசதியும் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். யாருக்குப் படுக்கை வசதி உள்ள வண்டி, யாருக்குப் படுக்கை வசதி இல்லாத வண்டி என்பது பற்றித் தெரியாது. ஜெயலிதாவும், கருணாநிதியும் இல்லாதது எங்களுக்கு வருத்தம்தான். ஆனால், இழப்புகளை ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்" என்று சொல்லி முடித்தார்.