Published:Updated:

``சாதகமான கேள்விகளைக் கேளுங்கள்!’’ - பத்திரிகையாளர்களிடம் பம்மிய எடப்பாடி பழனிசாமி

"10 நாள் நிக்குமா... 1 மாதம் நிக்குமா... 6 மாதம் நிக்குமா... 1 வருடம் நிக்குமானு கேட்டீங்க... 2 வருடம் முடிந்துபோச்சு. 3 வது வருடம் தொடங்கிடுச்சு. அடுத்து 2021-லும் அ.தி.மு.க ஆட்சிதான்."

``சாதகமான கேள்விகளைக் கேளுங்கள்!’’ - பத்திரிகையாளர்களிடம் பம்மிய எடப்பாடி பழனிசாமி
``சாதகமான கேள்விகளைக் கேளுங்கள்!’’ - பத்திரிகையாளர்களிடம் பம்மிய எடப்பாடி பழனிசாமி

மிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்குச் சேலம் வந்திருந்தார். இதற்கான நிகழ்ச்சி, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே போஸ் மைதானத்தில் உள்ள நேரு கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு அரங்கின் மேடையைவிட்டு முதல்வர் வந்தபோது பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகளைக் கேட்டார்கள். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அதன் விவரம் இதோ...

``எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் உதவிக் கொடுக்கப்படவில்லை என்று சொல்லியிருக்கிறாரே?’’

``சேலத்தில் மட்டும் 18,000 சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன. இந்த ஆண்டு சேலம் மாவட்டத்துக்கு மட்டும் 500 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம். அம்மா (மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) அரசைப் பொறுத்தவரை 41,000 கோடி ரூபாய் கடன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் புரிந்துகொண்டால் சரி.’’

``அம்மாவைக் கடுமையாக விமர்சித்த பா.ம.க-வோடு கூட்டணி வைத்தது பெரிய அளவில் விமர்சனம் செய்யப்படுகிறதே?’’

``கூட்டணி என்பது மாறி மாறி எல்லா இடத்திலும் வைத்திருக்காங்க. அ.தி.மு.க-வோடு  மட்டும் பா.ம.க கூட்டணி வைக்கவில்லை. தி.மு.க விமர்சனம் வைக்கும்போதும் பா.ம.க கூட்டணி வைத்தார்கள். கொள்கை வேறு... கூட்டணி வேறு. ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் அந்தந்த கட்சிகள் வெற்றிபெற வேண்டும். மக்களுக்குத் தேவையான திட்டங்கள் அளிக்கப்பட வேண்டும்.’’

``அம்மா நினைவு மண்டபத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க-வோடு கூட்டணி வைத்திருக்கிறீர்களே?’’ 

``வேண்டுமென்றே குதர்க்கமான கேள்விகளைக் கேட்கிறீர்கள். வேறு நல்ல கேள்விகளைக் கேளுங்கள்.’’

``நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?’’

``தமிழகம் முழுவதும் ஊடகங்கள் போகின்றன. ஊடகவியளாலர்களான நீங்கள்தான் சொல்ல வேண்டும். அம்மாவின் அரசு போடும் திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. மக்கள் மத்தியில் அம்மாவின் அரசுக்குச் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதன்மூலம் அ.தி.மு.க வேட்பாளர்களும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.’’

``தே.மு.தி.க  உங்களோடு கூட்டணிக்கு வருமா?’’

``பல்வேறு கட்சிகளோடு பேசிக்கொண்டிருக்கிறோம். தே.மு.தி.க எங்கள் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.’’

``தே.மு.தி.க-வோடு பேச்சுவார்த்தை நடக்கிறதா?’’

``பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.’’

``அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் 38 தொகுதிகளில் போட்டியிடுவதாகக் கூறியிருக்கிறாரே?’’

``அவர், 38 தொகுதிகள் மட்டுமல்ல... இந்தியா முழுவதும் 534 தொகுதிகளிலும் போட்டியிடுவார். அது, மிகப் பெரிய கட்சி. ஆனால், அவர் இன்னும் அந்தக் கட்சியைப் பதிவு செய்தாரா என்னவென்று தெரியவில்லை.’’

``தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா, `எங்களை விமர்சித்தவர்கள் புறவாசல் வழியாக வருகிறார்கள்’ என்று சொல்கிறாரே?’ ’’

``ஊடகங்கள் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்காமல் எங்களுக்குச் சாதகமான கேள்விகளைக் கேளுங்கள்.’’

``எட்டு வழி விரைவுச் சாலைக்குத் தொடர்ந்து பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறாரே?’’

``நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதைப் பற்றி விரிவாகப் பேச முடியாது.’’

``தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் கூட்டணியா... பி.ஜே.பி தலைமையில் கூட்டணியா?’’

``தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி. இந்தியா முழுவதும் பார்க்கும்போது என்.டி.ஏ தலைமையிலான கூட்டணி.’’

``அ.தி.மு.க எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்?’’

``தமிழகத்தில் இன்னும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகளும் பி.ஜே.பி-க்கு 5 தொகுதிகளும் கொடுத்திருக்கிறோம். அதேபோல, இன்னும் பல கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதெல்லாம் முடிந்த பிறகுதான் அ.தி.மு.க-வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது தெரியவரும்.’’

`` `தே.மு.தி.க வந்தால் மகிழ்ச்சி, வரவில்லை என்றால் கவலையில்லை’ என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறாரே?’’

``அவருடைய கருத்து பற்றி எனக்குத் தெரியாது. நான் கேட்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை இன்றைக்குப் பல்வேறு கட்சிகள் எங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றன. அனைத்துக் கட்சிகளும் எங்கள் கூட்டணியில் வந்து சேர வேண்டும் என ஆசைப்படுகிறோம். அதன்மூலம் மெகா கூட்டணி அமைத்து தமிழகத்தின் திட்டங்கள் நிறைவேற்றப்படவும் தமிழ்நாடு வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து செயல்படுவதற்கும் புதிய புதிய திட்டங்கள் தமிழகத்துக்கு வருவதற்கும் மத்தியில் வலுவான கூட்டணி மூலமாக அதிக எண்ணிக்கை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். அதன்படி, அம்மா 2014 மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றார்கள். இந்தியாவிலேயே மிகப் பெரிய 3-வது கட்சி அ.தி.மு.க என்று உருவாக்கினார்கள். பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணிதான் வெற்றிபெறும்.’’

`` `தேர்தலுக்குப் பிறகு, இந்தக் கூட்டணி காணாமல் போய்விடும்’ என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?’’

``அவர் எல்லாரையும்தான் சொல்கிறார். நீங்கள்கூடத்தான் கிண்டலும் கேலியுமாக ஊடக விவாதத்தில்கூடச் சொன்னீங்க...10 நாள் நிக்குமா... 1 மாதம் நிக்குமா... 6 மாதம் நிக்குமா... 1 வருடம் நிக்குமானு கேட்டீங்க... 2 வருடம் முடிந்துபோச்சு. 3 வது வருடம் தொடங்கிடுச்சு. அடுத்து 2021-லும் அ.தி.மு.க ஆட்சிதான். அதேபோல, கடந்த 2014 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தன்னந்தனியாக நின்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தற்போது நாங்கள் மெகா கூட்டணி அமைத்திருக்கிறோம். அம்மா வழியில் மக்களைச் சந்தித்து அ.தி.மு.க வேட்பாளர்கள், கூட்டணி வேட்பாளர்கள் களத்தில் இறங்கி வேலை பார்ப்பார்கள். மக்கள் எங்களுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தருவார்கள்.’’  

`` `21 சட்டமன்றத் தொகுதிகளில் (இடைத்தேர்தல்) நாங்கள் போட்டியிடவில்லை என்றுதான் சொல்லியிருக்கிறோம். அ.தி.மு.க-வுக்கு ஆதரவு என்று சொல்லவில்லை’ என்று பா.ம.க கூறுவதாகச் சொல்கிறார்களே?’’

``நாங்கதான் ஊடகத்தையெல்லாம் கூட்டி உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டிருக்கிறோம். அதற்காக உங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம். சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சிக் கூட்டணி என்பது உறுதி. ஊடகங்கள், பத்திரிகைகள் திருத்திப் போட வேண்டாம்.’’

``சமூகச் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போனதற்கு இந்த அரசுதான் காரணம் என்கிறார்களே?’’

``எல்லா மக்களும் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பாதுகாப்புக் கொடுக்க முடியாது. அவர் எங்கே போனார், ஏது போனார் என்று குடும்பத்தினர் சேர்ந்தவர்கள் தகவல் கொடுத்தால் உரிய முறையில் கண்டுபிடித்துத் தரலாம். ஆனால், தனிப்பட்ட ஒருவருக்காக இந்த அரசுமீது குற்றம்சாட்டுவது தவறு. ஏற்கெனவே ஆட்சியில் இருந்தவர்கள் இந்த அரசுமீது களங்கம் கற்பிப்பதற்காக இந்தக் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.’’