Published:Updated:

``பித்துப் பிடித்தவர்கள் அதிகமாக இருப்பது அ.தி.மு.க-வில் தான்!” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி

``பித்துப் பிடித்தவர்கள் அதிகமாக இருப்பது அ.தி.மு.க-வில் தான்!” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி
``பித்துப் பிடித்தவர்கள் அதிகமாக இருப்பது அ.தி.மு.க-வில் தான்!” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகியவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி, ஈரோடு பட்டக்காரர் வீதி நால்ரோட்டில் நேற்று (பிப்.25) நடைபெற்றது. காங்கிரஸில் புதிதாக இணைந்த நிர்வாகிகளுக்கு கதர் துண்டு அணிவித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோட்டில் தி.மு.க வேட்பாளராக இருந்தாலும் சரி அல்லது காங்கிரஸ் வேட்பாளராக இருந்தாலும் சரி, கூட்டணியின் வெற்றிக்கு நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

அந்த நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ``மோடி எப்படி வாக்குறுதிகளைத் தந்து நிறைவேற்றவில்லையோ, அதைப்போல் ராமதாஸ் அவர்களும் பல வாக்குறுதிகளைத் தந்தார். நாங்கள் பதவிக்கு வரும்போது குடும்பத்தார் யாருக்கும் பதவிகள் தரமாட்டேன் என்றார். ஆனால், மத்தியில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வந்தவுடன் மகன் அன்புமணிக்குத்தான் அந்தப் பதவியை வாங்கித்தந்தார். அதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க ஊழல் கட்சி என்றும் அந்தக் கட்சியுடன் நாங்கள் சேரவே மாட்டோம் என்றும் சொன்னவர்கள், இன்றைக்கு ஒரு அரசியல் வியாபாரியாக, தரகராக மாறி, இன்றைக்கு அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்திருக்கிறார்கள். ராமதாஸ் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்தது பா.ம.க தொண்டர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. கண்டிப்பாக அவர்களுடைய கூட்டணி கரைசேராது. அ.தி.மு.க தனியாக நின்றால்கூட டெப்பாசிட் பெறலாம். ஆனால், பா.ஜ.க-வையும், பா.ம.க-வையும் சேர்த்து நின்றால், அவர்கள் 40 தொகுதியிலும் டெப்பாசிட்கூட பெற முடியாது. ராமதாஸைப் பொறுத்தவரை சீட்டுகளைப் பெறுவதைவிட, பணத்தைப் பெற வேண்டும் என்பதுதான் நோக்கம். மிகப்பெரிய அளவில் அ.தி.மு.க கொள்ளையடித்து வைத்திருந்த பணத்தையும், மோடி கொள்ளையடித்து வைத்திருந்த பணத்தையும் ராமதாஸ் வாங்கிக்கொண்டார். தேர்தலில் இறங்காமல், அந்தப் பணத்தை ஜோப்பில் போட்டுக்கொண்டு நடையைக் கட்டுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்” என பா.ம.க-வை வெளுத்துவாங்கினார்.

தொடர்ந்து பேசியவர், “தே.மு.தி.கவினுடைய நிலைப்பாடு கடைசி வரை இழுபறியாகத்தான் இருக்கும். தேர்தலுக்குப் பிறகு தே.மு.தி.க என்ற கட்சியே காணாமல் போய்விடும். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸிற்கு என்னென்ன தொகுதிகள் ஒதுக்கப்படவிருக்கின்ற என்பது குறித்த பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பமாகும். எந்தெந்தத் தொகுதிகள் காங்கிரஸிற்கு ஒதுக்கப்படுகிறதோ, அதற்கான வேட்பாளர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவுசெய்யும். எங்களைப் பொறுத்தவரை 40 தொகுதிகளும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமானவை” என்றார். 

`அ.தி.மு.க உருவாக்கியுள்ள பிரமாண்ட கூட்டணியால், கடந்த பத்து நாட்களாக ஸ்டாலின் மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருக்கிறார் என செல்லூர் ராஜூ விமர்சனம் செய்திருக்கிறாரே’ என்று பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “பித்துப்பிடித்தவர்கள் அதிகமாக இருப்பது அ.தி.மு.க-வில்தான். கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என்று சொன்னவர் யார்? வைகை ஆற்றின் நீர் மேலே ஆவியாகாமல் இருக்க, அதில் தெர்மக்கோல் போட்டு மூடுவது என்ற புதிய ஐடியாவைச் சொன்னவர்கள் யார்? ஆகவே, மதி மங்கியவர்கள், அரைப் பைத்தியங்கள் அ.தி.மு.க-வில்தான் அதிகம்” என அதிரடித்தார்.