Published:Updated:

``சொந்த வீடு வேணும்னா பிரச்னை பண்ணாதே!" - பொதுமக்களை மிரட்டினாரா, கோயம்புத்தூர் எம்.எல்.ஏ.?

``சொந்த வீடு வேணும்னா பிரச்னை பண்ணாதே!" - பொதுமக்களை மிரட்டினாரா, கோயம்புத்தூர் எம்.எல்.ஏ.?
``சொந்த வீடு வேணும்னா பிரச்னை பண்ணாதே!" - பொதுமக்களை மிரட்டினாரா, கோயம்புத்தூர் எம்.எல்.ஏ.?

தேர்தல் நெருங்கிவிட்டாலே… ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் ஆங்காங்கே மோதல் வெடிக்கும். " `அதைச் செய்யறேன் இதைச் செய்யறே'னு சொல்லி ஓட்டு வாங்கினீங்க... ஆனால், எதையுமே செய்யலையே…" என்று தங்கள் பிரச்னைகளை முன்வைத்துப் பொங்குவார்கள் பொதுமக்கள். அப்படியான மக்கள் கோபத்திற்கு முதல் ஆளாகச் சிக்கியுள்ளார், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன். கோவை செல்வபுரம் பகுதியை அடுத்து இருக்கிறது, குப்பண்ணன் தோட்டம். சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் பத்து நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருகிறது. அதுவும் சாக்கடைக் கழிவுகள் கலந்து வருகிறது என்பதுதான் பிரச்னை. ஏழு மாதங்களுக்கு மேல் ஆகியும் அந்தப் பிரச்னை தீர்க்கப்படாததால் கடந்த 23-ம்தேதி, செல்வபுரம் பகுதியில் காலிக் குடங்களோடு சாலையை மறித்துவிட்டார்கள் அப்பகுதி மக்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன், அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றபோது, ``எங்களுக்கு வீடுகட்டித் தர்றேனு சொல்லி ஓட்டு வாங்கினீங்க....ஆனா, வீடும் கட்டித் தரலை.. ஒண்ணும் கட்டித்தரலை. குடிக்கிற தண்ணியே சாக்கடை கலந்து வருது" என்று எம்.எல்.ஏ-விடம் மறியலில் ஈடுபட்டிருந்த பெண்கள் ஆவேசமாகிவிட்டார்கள். ``இப்போ.. நீ வாடகை வீட்லதான இருக்க... சொந்த வீடு வேணும்னா பிரச்னை பண்ணாதே" என்று பதிலுக்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் மிரட்டல் தொனியில் சொல்ல. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன பிரச்னை? 

செல்வம்பதி குளத்தையொட்டியுள்ள குப்பண்ணன் தோட்டத்துக்கு நேரில் சென்றோம். ``எங்க ஏரியாவுக்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வெச்சிருக்க பேர் என்ன தெரியுமா? அத்திப்பட்டி" என்று ஆதங்கம் குறையாமல் பேச ஆரம்பித்தார் அப்பகுதியைச் சேர்ந்த பூபதி. ``இந்தப் பகுதி 85-வது வார்டுக்குள் வருது. எம்.எல்.ஏ-வா ஆகறதுக்கு முன்னாடி  இந்த வார்டின் கவுன்சிலரா இருந்தவர் எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன். கவுன்சிலர் எலெக்‌ஷன்ல நின்னபோது, `குப்பண்ணன் தோட்டம் கோயம்புத்தூரில் இருக்கிற அத்திப்பட்டி'னு சொன்னார்.  `என்னை ஜெயிக்க வெச்சா இந்தப் பகுதியை முன்னேத்துவே'னு வாக்குறுதி தந்தார். அப்போ எங்களுக்கு ஏதாச்சும் பிரச்னைன்னா  `அத்திப்பட்டியிலிருந்து பேசுறோம்'னு சொல்லித்தான் அவருக்கு போன் பண்ணுவோம். பேப்பர் ரோஸ்ட் பார்த்திருப்பீங்க. பேப்பர் ரோடு பாத்திருக்கீங்களா? அப்படி ஒரு ரோடு போட்டார். நாலு தெருவுக்கு லைட் மாட்டினார். அவர் கவுன்சிலராகறதுக்கு முன்னாடியே ஷேங்ஷன் ஆன ஒரு பாலத்தைக் கட்டினார். அவ்வளவுதான்.!  அவரை எலெக்‌ஷன் சமயத்துல ஓட்டுக் கேட்க வந்தப்போ பார்த்ததுதான். அதற்குப் பிறகு, அவரை இந்தப் பக்கம் நாங்க பார்க்கவே இல்லை. 

ஆனா, எம்.எல்.ஏ ஆனதற்குப் பிறகு, அவருக்கு இந்த அத்திப்பட்டி தேவைப்படலைபோல. எங்க ஏரியா பக்கமே வர்றது கிடையாது. ஏழு மாசத்துக்கு மேல எங்களுக்கு வர்ற குடிதண்ணியில சாக்கடை கலந்து வருது. நீங்க அதை முகர்ந்து பார்த்தாலே மயக்கம் போட்ருவீங்க. ஆனா, நாங்க அதைத்தான் குடிக்கணும். இதை எம்.எல்.ஏ-கிட்ட சொல்லியும் பிரச்னையைச் சரி செய்யலை. எங்களுக்கு வேற வழி தெரியலை. சாலையை மறிச்சு உட்கார்ந்துட்டோம். அங்க எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வந்ததும். இருக்கிற எல்லா பிரச்னைகளையும் எங்க ஏரியா பொம்பளைங்க அவர்கிட்ட கொட்ட ஆரம்பிச்சுட்டாங்க. `30 வருஷத்துக்கும் மேல இங்கே வாடகைக்கு வசிக்கிறவங்களுக்குச் சொந்த வீடு ஏற்பாடு பண்றே'னு சொல்லியிருந்தார். அதைச் சிலர் கேட்டதுக்கு எம்.எல்.ஏ ஆத்திரப்பட்டுட்டார். `நீயெல்லாம் இன்னும் வாடகை வீட்டில் இருக்க. சொந்த வீடு வேணும்னா பிரச்னை பண்ணாமப் போயிரு'னு சொல்ல... அது பெரிய வாக்குவாதமா ஆகிருச்சி. கடைசியா  குடிநீர்ப் பிரச்னையை உடனே சரி செஞ்சு தர்றதா சொல்லி எங்களை அனுப்பிவெச்சார்" என்று விளக்கினார்.

கல்பனா, பூபதி

அடுத்ததாகப் பேசிய கல்பனா, ``மறியல் பண்ணதுக்கும் எங்க பிரச்னைகளைச் சொன்னதுக்கும் கோபப்படுற எம்.எல்.ஏ., நாங்க குடிக்கிற தண்ணியைக் குடிப்பாரா?  மாட்டாரு…! குடிதண்ணீர் பிரச்னை மட்டுமல்ல... முத்தண்ணன் குளத்திலிருந்து செல்வம்பதி குளத்திற்கு வர்ற சாக்கடைத் தண்ணி பல மாசங்களா ஓடாமல் தேங்கிக் கிடக்கிறதால கொசுத் தொல்லை தாங்க முடியலை. இங்கே இருக்கிற குப்பைகளை அள்ளுறதே இல்லை. சொந்த வீடு வெச்சிருக்கவங்க பலபேர் செல்வம்பதி குளத்தை ஆக்கிரமிச்சு வீட்டை இழுத்துக்கட்டி அதில் வாடகை பார்க்கிறாங்க. அதையெல்லாம் தடுக்க எம்.எல்.ஏ-வால முடியலை. ஆனா, `பல வருஷமா வீடு இல்லாம தவிக்கிறவங்களுக்கு வீடு தர்றே'னு சொன்னீங்களே… அது என்னாச்சு'னு  கேட்டது குத்தமாப் போச்சு. எங்கே ஏரியா இன்னும் அத்திப்பட்டியாதான் இருக்கு. எந்த முன்னேற்றமும் இல்லை. `இப்போ அத்திப்பட்டியிலிருந்து பேசுறோம்'னு சொல்லி எம்.எல்.ஏ-வுக்குப் பேசறதுக்கும் வழியில்லை. அவர் கொடுத்த நம்பர் ஸ்விட்ச் ஆஃப்லயே இருக்கு. ஓட்டு வாங்குற வரைக்கும்தான் எல்லாம். ஓட்டுப் போடுறவங்க இப்படிப் போராடியே சாக வேண்டியதுதான்" என்றார் சற்றே வேதனையுடன். 

இதுகுறித்து எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனிடம் விளக்கம் கேட்டோம், ``தமிழ்நாட்டில் வாடகை வீட்டில் இருக்கிற எல்லோருக்கும் சொந்த வீடு கொடுக்க வேண்டுமானால் 4 கோடி பேருக்குக் கொடுக்கவேண்டும். அது சாத்தியமா? பக்கத்தில் இருக்கிற பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் குடிசை போட்டு கொடு’னு கேட்கிறார்கள். அது முடியுமா? இருந்தும் அவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் ஏற்பாடு பண்ணித் தருகிறேன் என்றுதான் சொல்லி இருக்கிறேன். தண்ணீர் கேட்டுப் போராட வந்துவிட்டு, `வீடு தரலை'னு கேட்டால், `எப்படி'னுதான் நான் கேட்டேனே ஒழிய, சர்ச்சை எதுவும் இல்லை. எங்கே சாக்கடை நீர் கலக்குகிறதென்று பார்த்து உடனே அதைச் சரிசெய்யச் சொல்லி இருக்கிறேன். அப்படியும் அது சரியாகவில்லை என்றால், புது பைப் லைன் மாற்றித் தர்றேனு சொல்லி இருக்கிறேன்" என்றார்.

வாக்கு கேட்டுச் செல்ல இருக்கும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள், குப்பண்ணன் தோட்டத்து மக்கள்.