Published:Updated:

`ஏ.சி.சண்முகத்துக்காக எப்படி ஓட்டுக் கேட்க முடியும்?’ - ஐ.டி ரெய்டின் பின்னணியால் கொதித்த கே.சி.வீரமணி

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அணி சார்பாக வேலூரியில் போட்டியிட்டார் ஏ.சி.சண்முகம். அவருக்கு எதிராகக் கழக வேட்பாளர் செங்குட்டுவனை வெற்றி பெற வைத்தார் வீரமணி. ` இப்போது அதே ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக மக்களிடம் சென்று எப்படி ஓட்டுக் கேட்க முடியும்?' என முதல்வரிடம் ஆதங்கப்பட்டார் வீரமணி.

`ஏ.சி.சண்முகத்துக்காக எப்படி ஓட்டுக் கேட்க முடியும்?’ - ஐ.டி ரெய்டின் பின்னணியால் கொதித்த கே.சி.வீரமணி
`ஏ.சி.சண்முகத்துக்காக எப்படி ஓட்டுக் கேட்க முடியும்?’ - ஐ.டி ரெய்டின் பின்னணியால் கொதித்த கே.சி.வீரமணி

மிழக அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனையை உற்று கவனித்து வருகின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். `பா.ஜ.க கூட்டணியை எதிர்த்ததும் தேர்தல் செலவுக்கு நிதி கொடுக்காத கோபமும்தான் ஐ.டி ரெய்டுக்குப் பிரதான காரணம்' எனக் கொந்தளிக்கின்றனர் வீரமணி தரப்பினர். 

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான அணியில் பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. நேற்று சேலத்தில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `தே.மு.தி.க உட்பட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்' எனப் பதிலளித்தார். தேர்தல் தேதி நெருங்கிக்கொண்டிருப்பதால், எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை இறுதி செய்யும் பணியை அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில், அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட இருக்கிறது. கடந்த 2014 தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், இந்தமுறை வேலூரில் போட்டியிட இருக்கிறார். ஆனால், தேர்தல் வேலை பார்ப்பதற்கு மாவட்டத்தின் முக்கிய பிரமுகரான அமைச்சர் வீரமணி தயாராக இல்லை. காரணம், அவரைக் குறிவைத்து நடந்த வருமான வரித்துறை சோதனைகள்தான். 

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள 300 கோடி ரூபாய் மதிப்பிலான நில விவகாரத்தில், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடு இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, அமைச்சருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் காட்பாடியைச் சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் வீரமணியின் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் டெல்லியிலிருந்து வந்திருந்த வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜோலார்பேட்டையில் உள்ள அமைச்சர் வீரமணியின் அலுவலகம் மற்றும் காட்பாடியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர்களின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. நாட்றம்பள்ளி பிரதான சாலையில் உள்ள அமைச்சரின் ஆர்.எஸ்.மஹால் மற்றும் மண்டப மேலாளர் சத்தியமூர்த்தியின் வீடு, அமைச்சரின் உதவியாளரும் ஜோலார்பேட்டை அ.தி.மு.க நகரச் செயலாளருமாக உள்ள சீனிவாசன் வீடு உள்ளிட்டவையும் சோதனையில் தப்பவில்லை. வேலூரில் சர்ச்சைக்குரிய நிலத்தை வாங்கிய விவகாரத்தில் ஆந்திராவைச் சேர்ந்த திருமலா டெய்ரியின் உரிமையாளர்கள் பிரம்மானந்தம் தண்டா, சத்திய நாராயணா ஆகியோருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தாகத் தகவல் வெளியானது. இந்தச் சோதனையில் வீரமணிக்கு எதிரான ஆவணங்களும் வீடியோக்களும் சிக்கியதாக செய்திகள் வெளிவந்தன. 

நில விவகாரத்தில் அமைச்சர் வீரமணி பேசும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. `அமைச்சரோட பவரைக் காட்டுனா என்ன ஆகும் தெரியுமா?' என்ற தலைப்பில் அந்த வீடியோவை சிலர் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக அமைச்சர் வீரமணி தரப்பினரிடம் பேசினோம். ``வீடியோவின் முழுப் பகுதியையும் வெளியிட்டால், உண்மை நிலவரம் தெரியும். தங்களுக்குச் சாதகமான வகையில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். வேலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள இடத்தை அமைச்சரின் நண்பர்கள் வாங்கியுள்ளனர். அதற்கு முன்னதாக ராமமூர்த்தி என்பவர் அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தார். அந்த இடத்தை திருமலா குழுமம் விலைக்கு வாங்கியபோது, நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையையும் ராமமூர்த்திக்குக் கொடுத்துள்ளனர். ஆனால், நிலத்தின் மதிப்பு தெரிய வந்ததும், சிலர் விளையாட்டைத் தொடங்கிவிட்டனர். அமைச்சராக இருப்பதால், வீரமணியை எளிதாக வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் எனச் சிலர் எதிர்பார்த்தனர். இந்த விவகாரத்தில் அனைத்தும் முறைப்படிதான் நடந்தது. சிலரது பேராசையால் விவகாரம் விஸ்வரூபமாகிவிட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், அமைச்சரை குறிவைத்து சோதனை நடத்தப்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என விவரித்தவர்கள், 

``வருமான வரித்துறை சோதனையால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் வீரமணி. எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியாமல் இந்த ரெய்டு நடந்திருக்க வாய்ப்பில்லை என அவர் உறுதியாக நம்புகிறார். 37 ஆண்டுகளாக அ.தி.மு.க-வுக்குச் சிம்ம சொப்பமான இருந்த வேலூர் தொகுதியின் எம்.பி சீட்டை வென்று கொடுத்தது வீரமணிதான். கடந்த தேர்தலில் திருவண்ணாமலைக்குச் சாதாரண வேட்பாளரைத்தான் அறிவித்தார் ஜெயலலிதா. இவர்கள் இருவரையும் வெற்றி பெற வைப்பதற்காகக் கடுமையாக உழைத்தார். இப்போது தேர்தல் நேரத்தில் ரெய்டு நடத்துவதன் பின்னணியில் சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. தொடக்கத்திலிருந்தே பா.ஜ.க கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார் வீரமணி. `ஜெயலலிதா வழியில் தனித்துப் போட்டியிடலாம்' எனத் தொடர்ந்து பேசி வந்த தம்பிதுரையின் கருத்தைத்தான் அவரும் பிரதிபலித்து வந்தார். மேலும், `தேர்தல் நிதி கொடுங்கள்' என எடப்பாடி பழனிசாமி கேட்டபோது, `நிதி கொடுக்க வாய்ப்பில்லை' என உறுதியாக மறுத்துவிட்டார். இதில் முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது. கொங்கு மண்டலத்தில் உள்ள பவர்ஃபுல்லான அமைச்சர் ஒருவரோடு கடும் மோதலில் இருந்தார். அந்த அமைச்சர் அனுமதியில்லாமல் வேலூரில் ஒரு ட்ரான்ஸ்பரைக் கூட வீரமணியால் போட முடியவில்லை. இதுதொடர்பாக, தலைமைச் செயலகத்தில் வைத்தே வீரமணியை அவமானப்படுத்தினார் அந்த அமைச்சர். இதில் வீரமணியைப் பழிவாங்குவதற்கு சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் அந்த அமைச்சர்" என்றவர்,  

``கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அணி சார்பாக வேலூரியில் போட்டியிட்டார் ஏ.சி.சண்முகம். அவருக்கு எதிராகக் கழக வேட்பாளர் செங்குட்டுவனை வெற்றி பெற வைத்தார் வீரமணி. `இப்போது அதே ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக மக்களிடம் சென்று எப்படி ஓட்டுக் கேட்க முடியும்?' என முதல்வரிடம் ஆதங்கப்பட்டார் அமைச்சர். இவை அனைத்தையும் மனதில் வைத்து வருமான வரித்துறை ரெய்டை அரங்கேற்றிவிட்டார்கள் என உறுதியாக நம்புகிறார் வீரமணி. கடந்த சில வாரங்களாக, தொகுதிக்குள் தேர்தல் வேலையைப் பார்க்காமல் அமைதியாக இருக்கிறார். `என்னை வழிக்குக் கொண்டு வருவதற்காக சோதனை நடத்திவிட்டார்கள். இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி சமாதானம் பேசும்வரையில் தொகுதி வேலைகளைப் பார்க்கப் போவதில்லை' என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால், அவருடைய ஆதரவாளர்கள் சிலரோ, `இப்படியொரு அவமானத்தை சந்தித்த பிறகு எதற்காக இந்தக் கட்சியில் இருக்க வேண்டும். லட்சம் பேரைத் திரட்டிக்கொண்டு தி.மு.க-வில் ஐக்கியமாவோம்' எனக் கூறி வருகின்றனர். இதில் அடுத்தகட்ட முடிவு என்ன என்பதைச் சொல்லாமல் முதல்வரின் பதிலுக்காகக் காத்திருக்கிறார் அமைச்சர் கே.சி.வீரமணி" என்கின்றனர் அழுத்தமாக.

அ.தி.மு.க அமைச்சர்களிலேயே பெரியார் கொள்கை, சுயமரியாதை ஆகியவற்றை லட்சியமாகக் கடைபிடித்து வருகிறார் வீரமணி. `இதை விரும்பாத சிலர்தான், தனக்கு எதிரான அஸ்திரத்தை கூர் தீட்டுகிறார்கள்' எனவும் வீரமணி தரப்பினர் பேசி வருவதுதான் ஹைலைட்.