Published:Updated:

ஸ்டாலின் குட் புக்கில் வைகோ!- ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை?

ஸ்டாலின் குட் புக்கில் வைகோ!- ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை?
ஸ்டாலின் குட் புக்கில் வைகோ!- ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை?

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ம.தி.மு.க-வுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக்கூட்டணி பேனரில் போட்டியிட்ட ம.தி.மு.க., வி.சி.க., சி.பி.எம்., சி.பி.ஐ. ஆகிய நான்கு கட்சிகளும் இப்போது, தி.மு.க-வின் தோழமைக் கட்சிகளாக மாறியுள்ளன. தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை குழுவோடு, இந்தக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

கம்யூனிஸ்டுகள் தலா இரண்டு தொகுதிகளை எதிர்பார்க்கின்றனர். முதலில் நான்கு தொகுதிகளைக் கேட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பின்னர் மூன்று என இறங்கி வந்து, தற்போது இரண்டு தொகுதிகளையாவது, தங்களுக்குக் கொடுத்ததாக வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறாராம். கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

``2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கரம்கோத்த ம.தி.மு.க., ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு 3.5 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2016 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்து, 28 தொகுதிகளில் போட்டியிட்டு, 0.9 சதவிகித வாக்குகளையே பெற்றது. இந்தக் கணக்கின் அடிப்படையில்தான் தொகுதி ஒதுக்கும் பணி நடைபெறுகிறது. ம.தி.மு.க. சார்பில் துரைசாமி, ஈரோடு கணேசமூர்த்தி ஆகியோர் தலைமையிலான குழு, எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதலில் நான்கு தொகுதிகள் கேட்டவர்கள், நாங்கள் மறுத்ததும் மூன்றில் இறங்கி வந்து, தற்போது இரண்டு தொகுதிகள் கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்கிறார்கள். ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்கு பத்து, முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒன்று எனத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 25 தொகுதிகளுக்குக் குறையாமல் நிற்க வேண்டும் என்று தி.மு.க. விரும்புகிறது. மீதமுள்ள நான்கு தொகுதிகளைத்தான் ஆளுக்கு ஒன்றாக வி.சி.க., சி.பி.எம்., சி.பி.ஐ., ம.தி.மு.க. கட்சிகளுக்கு ஒதுக்க முடியும். இந்நிலையில், தே.மு.தி.க-வுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

`கடந்த தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்டுவிட்டு, இப்போது ஒரு தொகுதியில் போட்டியிடுவது ஏற்புடையதாக இருக்காது. இவ்வளவு ஆண்டுகள் கட்சியில் உள்ள மூத்தவர்களையும் பார்க்க வேண்டும். கட்டாயம் இரண்டு தொகுதிகள் ஒதுக்கினால்தான் கூட்டணியில் நீடிக்க இயலும்' என்பதை ம.தி.மு.க. தெளிவாகக் கூறிவிட்டது. இதை அப்படியே ஸ்டாலினிடமும் கூறினோம். மு.க.ஸ்டாலினின், குட் புக்கில் வைகோ இடம்பெற்றுள்ளதால், அவர் எதிர்பார்த்த எண்ணிக்கையிலேயே இரண்டு தொகுதிகளை ஒதுக்க ஸ்டாலின் சம்மதித்துள்ளார். ஈரோடு தொகுதி கணேசமூர்த்திக்கும், திருச்சி தொகுதி வைகோவுக்கும் ஒதுக்கப்படலாம்" என்றவரிடம், ``அப்படியென்றால், தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையுமா" என்றோம். ``கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டுமானால், சில முடிவுகளை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்" என்று கூறி முடித்துக்கொண்டார்.

திருச்சியில் ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற தமிழேந்தல் கலைஞர் புகழ் போற்றும் விழாவில் பேசிய ஸ்டாலின், ``அண்ணன் வைகோ எப்படி எனக்குத் துணை நிற்கிறாரோ, அதேபோல நானும் அவருக்குத் துணை நிற்பேன்!" என்று சூளுரைத்திருப்பது கூட்டணி குறித்த தொகுதிப் பங்கீட்டையும் சேர்த்துதான் என்று ம.தி.மு.க-வினர் குதூகலிக்கிறார்கள்.