Published:Updated:

`ராமதாஸ் வீட்டில் சாப்பிட்டதில் என்ன தவறு?'- ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி பதில்

`ராமதாஸ் வீட்டில் சாப்பிட்டதில் என்ன தவறு?'- ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி பதில்
`ராமதாஸ் வீட்டில் சாப்பிட்டதில் என்ன தவறு?'- ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி பதில்

``முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்பவர்தான் இந்திய பிரதமராக வருவார்'' என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மற்றும் சிவகாசியில் இன்று நடைபெற்ற நலத்திட்ட விழாக்களில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டார். பின்னர் அவர் கூறும்போது, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க-வின் நட்பு கட்சி தான் பா.ம.க. இந்தக் கூட்டணியைக் கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பயம். ஜெயிக்கப் போவதால் நாங்கள் கர்ஜிக்கிறோம். அவர்கள் ஒப்பாரி வைக்கிறார்கள். தமிழக வெற்றியே மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும். எடப்பாடி சொல்பவரே பிரதமராக வருவார். ஆட்சியில் அ.தி.மு.க பங்குபெறும். நரேந்திரமோடி பிரதமராக வர வேண்டும் என்பதையே அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் விரும்புகிறார்கள்.

ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. அதனால் கொடுக்கிறார்கள். குறைசொல்லியே பழக்கப்பட்டவர்கள் தி.மு.க. நாங்கள் கொடுத்தே பழக்கப்பட்டவர்கள். தே.மு.தி.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாங்கள் பந்தயக் குதிரை போன்றவர்கள். ஓடிக்கொண்டே இருப்போம். எங்கள் பின்னால் வந்தால்தான் வெற்றி இலக்கை அடைய முடியும். அ.தி.மு.க-வை சீண்டிப் பார்ப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். 46 வயது நிரம்பிய 56 இன்ச் மார்பளவு கொண்ட இளைஞர்களை கொண்ட மகத்தான இயக்கம் அ.தி.மு.க. இந்த இயக்கத்தை குறைசொல்லி யார் பேசினாலும் அவர்களை நோக்கி சொற்களால் ஏவுகணை தாக்குதல் நடத்துவோம். எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது.

தி.மு.க-வில் தான் வாரிசு அரசியல் உண்டு. அ.தி.மு.க-வில் அப்படி இல்லை. முயற்சியால்தான் முன்னேறி வருவார்கள். கடைக்கோடி தொண்டனாக இருந்த நான் இன்று அமைச்சராக உயர்ந்துள்ளேன். நான் என்ன அம்பானி குடும்பத்தைச் சேர்ந்தவனா. ஆலை அதிபர் வீட்டு பிள்ளையா. அ.தி.மு.க-வில் தான் சாமானிய தொண்டனும் உயர்ந்த இடத்துக்கு வர முடியும். கோட்டைக்குப் போக முடியும். ரிக்சாக்காரனையும், கூலித் தொழிலாளியையும் எம்.எல்.ஏ. ஆக்கியது அ.தி.மு.க. அ.தி.மு.க-வுக்கு ஒரு வரலாறு உண்டு. அது வீர வரலாறு. தி.மு.க வரலாறு கோழை வரலாறு. தி.மு.க-வில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை.

விஜயகாந்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நலன் விசாரிக்க விரும்பியிருந்தால் மருத்துவமனையிலிருந்து வந்த உடனே சந்தித்திருக்க வேண்டும். ஆனால், தற்போது சந்திக்கச் சென்றது சந்தர்ப்பவாதம். பா.ம.க, அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி சேர்ந்ததால் பதற்றத்தோடு சென்று பார்த்தார். இது பரிதாபமாக உள்ளது. ராமதாஸ் பாகிஸ்தானைச் சேர்ந்தவரா? அடித்தட்டு மக்களுக்காக போராடிய போராளி. அவர் வீட்டில் சாப்பிட்டதில் என்ன தவறு. இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துக் கூறியவரா? தமிழக உரிமைக்காக போராடியவர் அவர். இடஒதுக்கீடு பிரச்னைக்காக போராடிய போராளியை முதல்வர் எடப்பாடி சந்தித்ததில் என்ன தவறு. சொந்தப்பகைக்காக எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர். இந்த ஆட்சி இன்னும் 10 ஆண்டுகள் நீடிக்கும்.

அ.தி.மு.க என்ற இயக்கத்தை அழிக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை. அ.தி.மு.க ஜெயிக்கும் பந்தயக் குதிரை. தி.மு.க தோற்கும் குதிரை. அதனால் எங்கள் கூட்டணிக்கு நிறைய பேர் வருவார்கள் எனத் தெரிவித்தார். தி.மு.க இன்ஜின் இல்லாத ரயில். அ.தி.மு.க இன்ஜின் உள்ள ரயில். நாங்கள் செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பல கட்சிகளும் இஞ்சின் உள்ள ரயிலுக்கே வரும் என தெரிவித்தார்.