Published:Updated:

பி.ஜே.பி-யை வளர்க்கும் பிரக்யாக்கள்... பிரக்யாக்களை வளர்க்கும் பி.ஜே.பி!

பி.ஜே.பி-யை வளர்க்கும் பிரக்யாக்கள்... பிரக்யாக்களை வளர்க்கும் பி.ஜே.பி!
பிரீமியம் ஸ்டோரி
பி.ஜே.பி-யை வளர்க்கும் பிரக்யாக்கள்... பிரக்யாக்களை வளர்க்கும் பி.ஜே.பி!

பி.ஜே.பி-யை வளர்க்கும் பிரக்யாக்கள்... பிரக்யாக்களை வளர்க்கும் பி.ஜே.பி!

பி.ஜே.பி-யை வளர்க்கும் பிரக்யாக்கள்... பிரக்யாக்களை வளர்க்கும் பி.ஜே.பி!

பி.ஜே.பி-யை வளர்க்கும் பிரக்யாக்கள்... பிரக்யாக்களை வளர்க்கும் பி.ஜே.பி!

Published:Updated:
பி.ஜே.பி-யை வளர்க்கும் பிரக்யாக்கள்... பிரக்யாக்களை வளர்க்கும் பி.ஜே.பி!
பிரீமியம் ஸ்டோரி
பி.ஜே.பி-யை வளர்க்கும் பிரக்யாக்கள்... பிரக்யாக்களை வளர்க்கும் பி.ஜே.பி!

பி.ஜே.பி--யில் பாரம்பர்யம் மிக்கவர்கள், பாரத தேசத்தின் அபிமானிகள், பணம் படைத்தவர்கள், மிரட்டிப்பார்ப்பவர்கள் என்று பல வகையினரும் உண்டு! இதில் பணம் இருப்பவர்கள் வருவார்கள், பதவியை அனுபவிப்பார்கள், அப்படியே கிளம்பிப்போய் விடுவார்கள். சத்ருஹன் சின்ஹா, ஹேமமாலினி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி சகோதரர்கள் போன்றோரை இப்படிச் சொல்லலாம். மிரட்டிப் பார்ப்பவர்கள் எனும் பிரிவினரைப் பட்டியலிட்டால்... உமாபாரதி, யோகி ஆதித்யநாத், சாக்‌ஷி மஹராஜ் என்று நீளும். இந்த வரிசையில் சாத்வி பிரக்யா என்கிற பெண் சாமியாருக்கும் இடமுண்டு.

பிரக்யா, ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளில் தீவிரப் பற்றுகொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரிப் படிக்கும்போதே, பி.ஜே.பி-யின் துணை அமைப்பான ஏ.பி.வி.பி-யில் செயலாற்றியவர். பிறகு, ‘இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ‘அபிநவ் பாரத்’ அமைப்பில் இணைந்தார். சில காலம், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மகளிர் அமைப்பான துர்கா வாகினியிலும் இருந்தார். 2006-ம் ஆண்டு, செப்டம்பர் 8-ம் தேதி வடக்கு மராட்டியத்தில் இருக்கும் மாலேகான் என்ற இடத்தில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் குண்டு வெடிக்கிறது. 40 பேர் கொல்லப்படுகிறார்கள். இதில், அபிநவ் பாரத் அமைப்பின் தலைவர் ரமேஷ் உபாத்யாயா பெயர் அடிபடுகிறது. பிரக்யாவின் பெயரும்தான். இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும்போதே, 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி, அதே மாலேகானில் இன்னொரு குண்டுவெடிப்பு நடக்கிறது. ஆறு பேர் கொல்லப்படுகிறார்கள். இதில் முக்கியக் குற்றவாளி என்று நிறுத்தப் படுகிறார் பிரக்யா.

மாலேகான் குண்டுவெடிப்பை, எந்தச் சந்தேகமும் இல்லாமல், ‘தீவிரவாத நடவடிக்கை’ என்று அறிவிக்கிறது மராட்டிய அரசு. உடனே, மராட்டிய மாநிலத்தின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு களத்தில் இறக்கப்படுகிறது. அப்போது அதன் தலைவராக இருந்தவர், நேர்மைக்கு பெயர்பெற்ற ஹேமந்த் கர்கரே. விசாரணையைத் தொடங்கிய சில நாள்களிலேயே, ‘குண்டு வெடிப்புக்குப் பின்னால் இருந்தவை சில தீவிர இந்து அமைப்புகள்’ என்பதை அவர் கண்டுபிடித்து அறிவிக்கிறார்.

பி.ஜே.பி-யை வளர்க்கும் பிரக்யாக்கள்... பிரக்யாக்களை வளர்க்கும் பி.ஜே.பி!

கர்கரே கட்டம் கட்டப்படுகிறார். அவருக்கு அது கடினமான காலம். ‘‘வழக்கு விசாரணையின் போது அடிக்கடி என்னிடம் பேசுவார் கர்கரே. தனக்கு நிறைய இடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாக வருந்துவார். முக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் வழக்கைக் கைவிடுமாறு மிரட்டுவதாகக்கூட சொன்னார். நான் அவரிடம், ‘வருந்தாதீர்கள். உங்கள் பணியை நீங்கள் தொடருங்கள். ஒரு நியாயமான இந்து எதைச் செய்வானோ அதைச் செய்யுங்கள்’ என்று ஆறுதல் சொன்னேன்” என்று பதிவுசெய்கிறார் மும்பை முன்னாள் ஆணையர் ஜூலியோ ரிபெய்ரோ.

ஒரு நியாயமான காவல்துறை அதிகாரியாகக் கடமையாற்றினார் கர்கரே. சிறிது சிறிதாக நூல் பிடித்து, பிரக்யாவை நெருங்கினார். அவரை கைதுசெய்து, சிறையில் அடைத்தார். அவருடன் ரமேஷ் உபாத்யாயா, காந்த் பிரசாந்த் புரோகித் உள்ளிட்டவர்களும் கைதுசெய்யப்பட்டனர். அப்போது ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார் கர்கரே. அங்கே எழுப்பப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும், ‘‘வழக்கு விசாரணை சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது. என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவேன்” என்று அழுத்திச் சொன்னார். ஆனால், அடுத்த சில நாள்களில், மும்பை தீவிரவாதத் தாக்குதலில் அவர் உயிர்த்தியாகம் செய்ய நேரிட்டது.

கர்கரே மரணத்துக்குப் பிறகு, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு கவனிப்பாரின்றி போகிறது. விசாரணையும் மந்தமாகிறது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து, தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கை கையில் எடுக்கிறது. கர்கரே விட்ட இடத்திலிருந்து விசாரணையை தொடங்க வேண்டியவர்கள், அப்படியே எதிர்த்திசையில் வழக்கைச் செலுத்துகிறார்கள். 1,600 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்கிறார்கள். அதில், ‘சாத்வி பிரக்யா உள்ளிட்டவர்கள் நிரபராதிகள். வேண்டும் என்றே வழக்கில் சிக்கவைக்கப் பட்டுள்ளனர்’ என்றது அந்தக் குற்றப்பத்திரிகை. ஆனால், ‘எந்த அடிப்படையில் அவர்கள் நிரபராதிகள்?’ என்பது குறித்தோ, ‘அவர்கள் நிரபராதிகள் என்றால் குற்றவாளிகள் யார்?’ என்பது குறித்தோ எதுவும் சொல்லவில்லை.

நீதிபதிகளும் விசாரணை அதிகாரிகளின் வாதத்தை முதலில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ‘குண்டுவெடிப்புக்கு பிரக்யாவின் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறதே?’ என்று கிடுக்கிப்பிடி போடுகிறார்கள். உண்மையில், அதற்கு ஆதாரம் இருந்தது. அந்த மோட்டார் சைக்கிள் பிரக்யாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததை கர்கரே கண்டறிந்திருந்தார். ஆனால், விசாரணை அதிகாரிகள், ‘இல்லை, அந்த மோட்டார் சைக்கிள் பிரக்யாவுடையது அல்ல’ என்று சொன்னார்கள். ஆனாலும், ‘குண்டுவெடிப்பில் குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே உயிரிழந்தது குறித்து தன் ஆட்களிடம் பிரக்யா அதிருப்தி தெரிவித்தார் என்பதற்கான ஆதாரங்களும்கூட இருக்கின்றனவே’ என்று மீண்டும் கேட்டார்கள் நீதிபதிகள். இதற்கும் ஆதாரம் இருந்தது. பிரக்யா அப்படி பேசியிருந்தார். அதிகாரிகளோ, ‘அவர் அந்த அர்த்தத்தில் பேசவில்லை’ என்று சாதித்தார்கள்.

விசாரணை முடிவில், ‘எம்.சி.ஓ.சி.ஏ’ (MCOCA - Maharashtra Control of Organised Crime act)  பிரிவில் இருந்து பிரக்யாவை விடுவித்தது விசாரணை நீதிமன்றம். இருந்தாலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புப் பிரிவில், பெயர் சேர்க்கப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இடையில், 2017-ம் ஆண்டு மும்பை நீதிமன்றம் சென்று பிணை வாங்கி வெளியே வந்துவிட்டார் பிரக்யா. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்தார். இவர், இப்போது மத்தியப்பிரதேச மாநிலத்தின் போபால் மக்களவைத் தொகுதியின் பி.ஜே.பி வேட்பாளர்.

‘குற்றப்பின்னணிக் கொண்டவர்களை வேட்பாளர்களாக களமிறக்குவது, எல்லாக் கட்சிகளிலும் நடப்பதுதான். ஆனால், சாத்வி பிரக்யா தீவிரவாத நடவடிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர். அதற்காகத் தண்டனை அனுபவித்தவர். அவருக்கு எப்படி வாய்ப்பு வழங்கலாம்?’ என்று கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும். ‘அவர் ஒன்றும் தீவிரவாதி அல்ல’ என்று பதில் கொடுக்கின்றன சங்கப்பரிவாரங்கள். ‘ஒரு ஹிந்து, தீவிரவாதியாக இருக்க முடியாது’ என்று, பிரக்யா வேட்பாளராக்கப் பட்டதை நியாயப்படுத்தியுள்ளார் அமித் ஷா. ‘குறிப்பிட்ட வேட்பாளரைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று சொல்லும் உரிமை நீதிமன்றத்துக்கு இல்லை. தேர்தல் ஆணையத்துக்கே உண்டு’ என்று கைவிரித்து விட்டது சிறப்பு நீதிமன்றம். அடுத்து, தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் அனுப்பிப் பார்த்தார்கள் பிரக்யாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர். தேர்தல் ஆணையம் கொஞ்சம்கூட அசைந்து கொடுக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பி.ஜே.பி-யை வளர்க்கும் பிரக்யாக்கள்... பிரக்யாக்களை வளர்க்கும் பி.ஜே.பி!

52 வயதாகும் உஸ்மான் கான், மாலேகான் குண்டுவெடிப்பில் உறவினர்களைப் பறிகொடுத்தவர். ‘‘வேட்பாளராக நிறுத்தும் அளவுக்கு பிரக்யா என்ன நல்லது செய்திருக்கிறார்?’’ என்று பி.ஜே.பி-யைப் பார்த்துக் கேட்டிருக்கிறார் உஸ்மான் கான். இந்தக் கேள்விக்கான பதில்களைத்தான், கடந்த 10 நாள்களாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பிரக்யா.

ஒருகூட்டத்தில், ‘‘சிறையில் தள்ளி என்னைக் கொடுமைப்படுத்தினார் கர்கரே. அப்போது நான் கொடுத்த சாபத்தால்தான், மும்பை குண்டு வெடிப்பில் அவர் மரணமடைந்தார்’’ என்று பேசினார் பிரக்யா. ‘மூளை முழுக்க மூடத்தனம் நிறைந்தவர்களால் மட்டுமே இப்படியெல்லாம் பேசமுடியும்’ என்று எதிர்ப்புகள் வலுத்தன. சுதாரித்தவர், ‘என் கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்’ என்று அறிவித்தார். ஆனால், ‘எதிரிகளுக்கு நானே இடம் அளித்துவிடக் கூடாது’ என்று சொல்லியே வாபஸ் வாங்கினார். அதாவது, தன் கருத்து தவறானது என்ற எண்ணமோ, அதுகுறித்த குற்றஉணர்ச்சி யோகூட எள்ளளவும் பிரக்யாவுக்கு ஏற்படவில்லை. ‘பாபர் மசூதி இடிப்பில் நானும் பங்குகொண்டேன் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றும்கூட பேசிவைத்தார்.

இன்னொரு கூட்டத்தில், ‘கோமியம் குடித்தால் புற்றுநோய் குணமாகிவிடும். என் மார்பகப் புற்றுநோய் அப்படித்தான் குணமானது’ என்றும் பேசினார். உடனே, ‘பிரக்யாவின் மார்பகப் புற்றுநோய் முறையான மருத்துவச் சிகிச்சையின் மூலமே குணமாக்கப்பட்டது’ என்று மறுப்பு வெளியிட்டார்கள், அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.

‘பிரக்யா போன்றவர்களால்தான் பி.ஜே.பி-யே வளர்ந்தது... இனியும் வளரும்’ என்று அவர்கள் முடிவுசெய்து விட்டால், யாரால் என்னசெய்ய முடியும்?!

- சக்திவேல்