Published:Updated:

"கம்யூனிஸ்ட்கள்போல நாமும் கரைந்துபோக வேண்டுமா?"  - 'புதிய தமிழகம்' ஷியாம்

``அடுத்த மூன்றாண்டுகளில் கட்சியின் இலக்கு எப்படி அமைய வேண்டும்" என்று புதிய தமிழகம் நிர்வாகிகளிடம் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் முனைவர் ஷியாம் பேசியது கட்சிக்குள் புதிய `ரூட்'டை உருவாக்கியுள்ளது.

"கம்யூனிஸ்ட்கள்போல நாமும் கரைந்துபோக வேண்டுமா?"  - 'புதிய தமிழகம்' ஷியாம்
"கம்யூனிஸ்ட்கள்போல நாமும் கரைந்துபோக வேண்டுமா?"  - 'புதிய தமிழகம்' ஷியாம்

தேர்தல் நெருங்கும் வேளையில், ஒவ்வொரு கட்சியும் ஒரு கூட்டணிக் கூட்டுக்குள் அடைக்கலமாகி வருகின்றன. பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறப் போவதாகக் கருதப்பட்ட புதிய தமிழகம் கட்சி, தனித்துப் போட்டியிடும் முடிவை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது. ``அடுத்த மூன்றாண்டுகளில் கட்சியின் இலக்கு எப்படி அமைய வேண்டும்" என்று புதிய தமிழகம் நிர்வாகிகளிடம் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் முனைவர் ஷியாம் பேசியது கட்சிக்குள் புதிய `ரூட்'டை உருவாக்கியுள்ளது.

``ஒடுக்கப்பட்ட பிரிவில் உள்ள 7 சாதிகளை ஒருங்கிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும். இவர்களை, தாழ்த்தப்பட்டவர் பட்டியலிலிருந்து வெளியேற்றும் அரசாணையைத் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்" என்று பல ஆண்டுகளாகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போராடி வருகிறார். இந்நிலையில், பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் இணையப் போவதாக தகவல் பரவியது. இத்தகவலை மறுத்துள்ள கிருஷ்ணசாமி, ``நாங்கள் யாருடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. தனித்துப் போட்டியிடுவது குறித்தும் முடிவெடுக்கவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைத்தால், நாளையே பட்டியல் வெளியேற்றத்துக்கான அரசாணையை வெளியிடலாம்'' என்று கூறியுள்ளார். 

அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதற்கு, அரசாணை வெளியிடும் உத்தரவாதத்தைப் புதிய தமிழகம் எதிர்பார்க்கிறது. ஆனால், அ.தி.மு.க. தரப்பில் காலதாமதம் ஆவதால், கூட்டணி முடிவில் சிவப்பு விளக்கு எரிந்துள்ளதாக கிருஷ்ணசாமி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், புதிய தமிழகம் நிர்வாகிகளிடம் கூட்டணி குறித்து அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், கிருஷ்ணசாமியின் மகனுமான ஷியாம் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார்.

``ஒருகாலத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சியாகக் கம்யூனிஸ்ட்கள் இருந்தன. ஒவ்வொரு தேர்தலிலும் சில எம்.பி. தொகுதிகளுக்காகத் தங்களது கொள்கைகளை அவர்கள் விட்டுக்கொடுத்து கூட்டணி வைத்ததால்தான், இன்று கம்யூனிஸ்ட் கட்சியே கரைந்துபோய்விட்டது. இதே நிலை, பட்டியல் வெளியேற்றக் கொள்கையை விட்டுக்கொடுத்துவிட்டு அ.தி.மு.க., தி.மு.க-வுடன் இணைந்தால் நமக்கும் ஏற்படும். ஒரு சிறு இயக்கமாக இருந்த ஆர்.எஸ்.எஸ்., இன்று மிகப்பெரிய இயக்கமாக உருவெடுத்திருப்பதற்கும், அதன் சித்தாந்த கொள்கைப்பிடிப்புதான் காரணம். ஒருசில எம்.பி. தொகுதிகளுக்காகவும், 21 சட்டமன்ற இடைத்தேர்தலுக்காகவும் மட்டும் கூட்டணி வியூகங்களை வகுக்கக் கூடாது. 2021 சட்டமன்றத் தேர்தல்தான் நமக்கு இலக்கு. அதற்குள் நம்முடைய வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா என்கிற ஆளுமைகள் இல்லாத நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தலைமையில் புதிய கட்சிகள் களத்தில் உள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகுமாறு தனது மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்தும் அறிவுரை வழங்கியுள்ளார். இளைஞர்களின் வாக்கு வங்கியும் கணிசமாக உயர்ந்துள்ளது. அடுத்த மூன்றாண்டுகளில் கட்சியை வலுவாகக் கட்டமைத்து, வாக்கு வங்கியை உயர்த்திக் கொண்டால் மட்டுமே, 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் மரியாதைக்குரிய கட்சியாகப் பரிணமிக்க முடியும் என்பது ஷியாமின் இலக்கு. அதேவேளையில், கூட்டணி உடன்படிக்கை கையொப்பம் ஆகும்போதே, 21 இடைத்தேர்தல் ஆதரவு உத்தரவாதத்திலும் அ.தி.மு.க. கையொப்பம் வாங்கிவிடுகிறது. ஒட்டப்பிடாரம் தொகுதியைக் குறிவைத்திருக்கும் புதிய தமிழகம், இந்த உத்தரவாதத்தை அளிக்கத் தயாராக இல்லை. 

ஷியாமின் கருத்தில் உடன்பட்டிருக்கும் கிருஷ்ணசாமி, தாழ்த்தப்பட்டவர் பட்டியல் வெளியேற்ற உத்தரவாதத்தை அ.தி.மு.க. அளிக்காத பட்சத்தில், தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.