Published:Updated:

மோடி எதையும் செய்வார்; அவரின் செயல்பாடுகளால் யுத்தம் மூண்டுவிடக்கூடாது! - வைகோ

மோடி எதையும் செய்வார்; அவரின் செயல்பாடுகளால் யுத்தம் மூண்டுவிடக்கூடாது! - வைகோ
மோடி எதையும் செய்வார்; அவரின் செயல்பாடுகளால் யுத்தம் மூண்டுவிடக்கூடாது! - வைகோ

`இந்திய ராணுவ வீரர்களின் தியாகக்துக்கு தலைவணங்குகிறேன்.  இரு நாடுகளுக்கு இடையே யுத்தம் ஏற்படும் சூழல் மிகவும் கவலை அளிக்கக் கூடியதாகவும் பெருத்த சேதத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். மேலும், இந்த விவகாரத்தில் உணர்ச்சிகளைத் தூண்டி எரிமலை போல் ஆக்கக்கூடாது’ என்று வைகோ கருத்து தெரிவித்திருக்கிறார். 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார். திருச்சி வந்த வைகோவை ம.தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு, சேரன், மாநில மகளிரணிச் செயலாளர் டாக்டர் ரொஹையா உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் வைகோ.

அப்போது அவர், ``காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களில் முஸ்லிம் ஒருவரும் ஆவார். இந்தத் தாக்குதலில் காஸாவில் வாசித்த 20 வயதுடைய ஒரு நபர்தான் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள். இந்தக் கொடூரத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்திய ராணுவ வீரர்களின் தியாகக்துக்கு தலைவணங்குகிறேன். இரு நாடுகளுக்கு இடையே யுத்தம் ஏற்படும் சூழல் மிகவும் கவலை அளிக்கக் கூடியதாகவும் பெருத்த சேதத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். மேலும், இந்த விவாகரத்தில் உணர்ச்சிகளைத் தூண்டி எரிமலை போல் ஆக்கக்கூடாது. இந்த தொடர் சம்பவங்களால் இரண்டு நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏற்படும் நிலை உருவாகுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாசிச மனப்பான்மை உடையவர்கள் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக எந்தச் செயலுக்கும் துணிவார்கள். மேலும், பாசிச கொள்கை அடிப்படையில்தான் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பாசிச மனப்பான்மை கொண்டவர்கள் ஆட்சி அதிகாரத்தை இழக்கமாட்டார்கள். இந்த நாடு கலாசாரம், மொழி, இனம், மதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இங்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி விடக்கூடாது. பிரதமர் நரேந்திர மோடி பாசிச மனப்பான்மையுடன் செயல்படுகிறார். இதனால் விபரீத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. 

சமூக ஆர்வலர் முகிலன் மாயமான விவகாரத்தில் தமிழக அரசு காவல்துறையை கூலிப்படையாகப் பயன்படுத்தியுள்ளது. தற்போது முகிலன் மாயமான வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றியுள்ளனர். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது தொடர்பாக தமிழக காவல்துறை அதிகாரிகள் மீது, முகிலன்  குற்றம்சாட்டிய அன்று இரவுதான், சென்னையில் காணாமல் போயுள்ளார். இதனால் காவல்துறை அதிகாரிகள் மீது தான் மிகுந்த சந்தேகம் உள்ளது. அவருக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்குத் தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பு.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்திலும் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவோம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தாலும் கூட  அதை உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்துப் போராடுவோம். எங்களது போராட்டம் தொடரும். விமானங்களைத் தனியார் மயமாக்கும் ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் எடுத்துள்ளது. இதை வைத்து பூமி ஆதாரங்களையும் அதானி அம்பானி குழும நிறுவனங்கள் எடுத்து லட்சக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவார்கள். இதுதான் பி.ஜே.பி.,யின் மறைமுகத் திட்டம்.

பிரதமர் மோடி மீது எனக்குத் தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது. ஆனால், தமிழகத்துக்கு தொடர்ந்து வஞ்சகம், துரோகம் செய்தவர் மோடி. அவர், மேக்கே தாட்டூ அணைக்கு அனுமதி அளித்ததுடன், தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். அவர் செய்த துரோகத்தைக் கண்டித்து தங்களின் எதிர்ப்பைக் காட்டும் வகையில் கொடி போராட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் வரும் 1-ம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி மோடி வந்தால் அன்றைய தினம் பிரதமர் மோடிக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டப்படும். ஏற்கெனவே தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டேன். தற்போது இதுவும் கூட தேர்தல் பரப்புரைதான். தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது’’ என்றார்.

தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளதே என்ற கேள்விக்குப் பதிலளித்த வைகோ,  ``அதுகுறித்த முழு தகவல் எனக்குத் தெரியவில்லை. தகவல் தெரிந்த பிறகுதான் அது பற்றி கருத்துக் கூற முடியும். இருப்பினும் எந்த நிலையிலும் யுத்தம் ஏற்படும் நிலை உருவாகிவிடக்கூடாது. அப்படி ஏற்பட்டால் இரு தரப்புக்கும் பெரும் சேதம் ஏற்படும்’’ என்றார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தி.மு.க-காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சனம் செய்துள்ளாரே என்கிற கேள்விக்கு வைகோ, `அரசியல் தலைவர்கள் கூறும் கருத்துகளுக்குத்தான் பதில் கூற முடியும்’’ என்றார்.