Published:Updated:

ஸ்டாலினின் கையில் போர் வாளா... அட்டக்கத்தியா?! - வைகோவின் வரலாறு

ஸ்டாலினின் கையில் போர் வாளா... அட்டக்கத்தியா?! - வைகோவின் வரலாறு
News
ஸ்டாலினின் கையில் போர் வாளா... அட்டக்கத்தியா?! - வைகோவின் வரலாறு

``அன்று கருணாநிதியின் உறையிலிருந்து வெளியே வீசப்பட்ட வரலாறு, இப்போது உள்ள தி.மு.க உடன்பிறப்புகளுக்குத் தெரியுமா" என்று நக்கலாகக் கேட்கிறார்கள் ம.தி.மு.க-வின் மூத்த உறுப்பினர்கள். 

``கலைஞரால், `போர் வாள்' என்றழைக்கப்பட்டவர் வைகோ. தொண்டர்களால், 'தளபதி' என்று அழைக்கப்பட்டவன் நான். தற்போது தளபதியும் போர்வாளும் ஒரே மேடையில் இணைந்திருப்பது திராவிட இயக்கத்தைக் காக்கவே" - இது, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவைப் பற்றி திருச்சியில் சிலாகித்துப் பேசிய வரிகள். உண்மையில், ``இன்று தளபதியின் கரங்களை வலுப்படுத்தும் வாளாக உருவெடுத்துள்ள இந்தப் போர்வாள், இந்தத் தளபதி தலைவராக வேண்டும் என்பதற்காகவே அன்று கருணாநிதியின் (மறைந்த முன்னாள் முதல்வர்) உறையிலிருந்து வெளியே வீசப்பட்ட வரலாறு, இப்போது உள்ள தி.மு.க உடன்பிறப்புகளுக்குத் தெரியுமா" என்று நக்கலாகக் கேட்கிறார்கள் ம.தி.மு.க-வின் மூத்த உறுப்பினர்கள். 


தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதிக்குச் செல்லப்பிள்ளையாக ஒருகட்டத்தில் இருந்தவர் வை.கோபால்சாமி. எதிரில் அமர்ந்திருப்பவர்களைத் தனது நாவன்மையால் கட்டிப்போடும் யுக்தி தெரிந்தவர். தமிழகத்தில் 1977-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியைப் பறிகொடுத்த பிறகு நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சியின் குரல் ஓங்கி ஒழித்ததற்குப் பிரதான காரணமாக இருந்தவர் வைகோ. துடிப்புமிக்கப் பேச்சால் நாடாளுமன்றத்திலும், டெல்லி அரசியலிலும் தி.மு.க-வுக்கு ஒரு லாபியை ஏற்படுத்தினார், வைகோ. அந்தச் செயலால் மகிழ்ந்த கருணாநிதி, ``தி.மு.க-வின் போர்வாள் கோபால்சாமி” என்று அடைமொழியோடு அவரைக் கொண்டாடினார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே எதிரிகளை வீழத்தும் என்று நினைத்த போர்வாள், தன் மகனின் அரசியல் எதிர்காலத்தைத் துளைத்துவிடும் வாளாக மாறிவிடுமோ என்ற அச்சம் கருணாநிதிக்கு ஏற்பட்டது. அதனால், போர்வாளை உறைக்குள்ளிருந்து எடுத்துவிடக்கூடாது என்கிற மனநிலைக்கு, 1989-ம் ஆண்டு காலகட்டத்தில் கருணாநிதி வந்துவிட்டார். வைகோவின் வளர்ச்சி ஸ்டாலினின் வீழ்ச்சிக்கு வாய்ப்பாக அமைந்துவிடுமோ என்கிற அச்சம் அப்போதே கருணாநிதிக்கு ஏற்பட்டது மறுக்கமுடியாத உண்மைதான். 

அதற்குத் தோதாக, அதே ஆண்டு பிப்ரவரியில் கள்ளத்தோணியில் கடல் கடந்து வன்னிப் பகுதிக்குச் சென்றது, ``காக்கா உட்கார பழம் விழுந்த கதையாக” அமைந்துவிட்டது. பதிமூன்று வருட காலத்துக்குப் பிறகு, வராது வந்த மாமணியாக நமக்குக் கிடைத்த ஆட்சி வாய்ப்பை வைகோ சிதறடித்துவிடுவார்போலவே என்று தி.மு.க தலைவர்களிடம் முணுமுணுக்கத் தொடங்கினார், கருணாநிதி. அதற்குக் காரணம், தன்னுடைய முணுமுணுப்பை முழுத் தொண்டர்களிடமும் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவார்கள் என்று நம்பினார், கருணாநிதி. ஆனால், அப்போது வைகோவுக்குக் கட்சிக்குள் இருந்த செல்வாக்கு, புலிகள் மீதான பாசம், யாரையும் வசீகரிக்கும் பேச்சுத் திறமை.... இவற்றுக்கு முன்னாள் கருணாநிதியின் கணக்குப் பலிக்கவில்லை. இதனால் கொஞ்சம்கொஞ்சமாகத் தனது போர்வாளை மழுங்கச் செய்யும் வேலையில் கருணாநிதி இறங்கினார். குறிப்பாக, அப்போது பன்னிரண்டு மாவட்டங்களைத் தவிர வேறு மாவட்டங்களில் வைகோ கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்தப் பன்னிரண்டு மாவட்டங்களும் வைகோவின் நலம் விரும்பிகள் மாவட்டச் செயலாளர்களாக இருந்ததால் அங்கு சாத்தியப்பட்டது. தான் ஒரம்கட்டப்படுவதை உணர்ந்து ஒருகட்டத்தில் புயலாகப் புறப்பட்டு அன்பழகனிடம் புலம்பினார், வைகோ. அதற்கு அன்பழகன், ``யார்கூட மோதுற..? ஸ்டாலின் அவர் பெத்த புள்ளை.. அவர் எப்ப வேணாலும் தலைவர் மடில உக்காந்துக்கலாம். நீ போய் உக்கார முடியுமா? இதையெல்லாம் பொறுத்துதான் போகணும்” என்று அட்வைஸ் செய்துள்ளார். பின்னாளில், ம.தி.மு.க உருவான பிறகு, வைகோவே இந்தச் சம்பவத்தை மேடைகளில் நினைவுகூர்ந்துள்ளார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிறகு தி.மு.க-வுக்கு நெருக்கடிகளும் அதிகரித்தன. ஜெயின் கமிஷன் விசாரணையில் தி.மு.க-வும் சிக்கியது. அதற்குக் காரணம், வைகோவுக்கு இருந்த புலிகள் பாசம்தான் என்று தலைமை நினைத்தது. அதையும் வைகோவுக்கு எதிராகத் திருப்பியபோதும் பெரிதாக எடுபடவில்லை. இந்நிலையில், 1991, டிசம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் திராவிட இயக்கத்தின் பவள விழா மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது. வைகோ-வுக்கும், கருணாநி்திக்கும் பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் மாலையில் நடைபெற்றது. தி.மு.க-வின் இளைஞர் அணிச் செயலாளர் என்ற கம்பீரத்துடன் வெள்ளை பேன்ட், சர்ட்டில் தனது இளைஞர் அணிப் பட்டாளத்துடன்  மாநாட்டுத் திடலுக்குள் அணிவகுத்து வந்தார் ஸ்டாலின். அப்போது, 'ஸ்டாலின் வாழ்க' என்று பெரும் கரகோஷம், மாநாட்டுப் பந்தலில் எழுந்தது. அப்போது, அவர் தளபதியாக உருவாகவில்லை. மேடையில் இருந்த கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள், வாஞ்சையுடன் அவரைப் பார்த்தனர். அடுத்த சிறிது நேரத்தில், அடுத்த காட்சி அரங்கேறியது. கழகத்தின் போர்வாள் வைகோ மாநாட்டுப் பந்தலுக்குள் தனது ஆதரவாளர்களுடன் என்ட்ரி கொடுத்தார்.

'ஸ்டாலின் வாழ்க' என்று கேட்ட குரலைவிட அதிகமான கோஷம் கோபால்சாமிக்கு எழுந்தது. விசில் சத்தம் மாநாட்டுப் பந்தலைப் படபடக்கச் செய்தது. அதிர்ந்தார்கள், மேடையில் இருந்த தலைவர்கள். உண்மையில் வைகோவுக்கு கட்சிக்குள் இருந்த செல்வாக்கு பட்டவர்த்தனமாக கருணாநிதிக்கு அப்போது தெரிந்தது. மேடைக்குள் தனது டிரேட் மார்க் கறுப்புத் துண்டை, இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு வைகோ நடந்துவரவர வாழ்த்துக் கோஷங்களும் அதிகரித்தது. வைகோ மேடையேறி கருணாநிதிக்கு  பொன்னாடை போர்த்த கருணாநிதி ஒரு புன்னைகையோடு கைகுலுக்கினார். கருணாநிதி மனதில் இருந்தது அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளியே தெரிந்துவிட்டது" என்று சொல்லும் மூத்த நிர்வாகிகள், ``இதற்கு முன், மற்றொன்றையும் கவனிக்க வேண்டும்" என்றார்கள். ``மதுரை மாநாட்டுக்கு முன்பு நடைபெற்ற கட்சி மாநாடுகளில் உணவு அருந்தும் மதிய நேரத்திலே வைகோ பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. கூட்டம் கூடிவிடக்கூடாது என்று திட்டம் அதற்குள் இருந்தது. ஆனால், வைகோவின் பேச்சு, உணவுக்குச் சென்றவர்களையும் மாநாட்டுப் பந்தலுக்குள் அழைத்து வந்தது. இதெல்லாம் கருணாநிதி கவனிக்கத் தவறவில்லை. வைகோ ஒரம்கட்டப்படுவது குறித்து செய்தித்தாள்களில் விமர்சனம் வைத்தபோது, ``வைகோ எனது உறைவாள்.. அதை எப்போது, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அப்போது அதைப் பயன்படுத்துவேன்” என்று தனக்கே உரிய பாணியில் பதில் அளித்தார். 


93-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து கருணாநிதிக்கும், வைகோவுக்கும் நேரடிப் பேச்சு என்பது கிட்டத்தட்ட நின்று போய்விட்டது. அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்து ஒரு கடிதம் கருணாநிதிக்கு வந்தது. அதில், ``திரு.வை.கோபால்சாமியின் அரசியல் ஆதாயத்துக்காக விடுதலைப்புலிகள் உங்களைக் கொலை செய்யத் திட்டம் வைத்திருப்பதாக மத்திய அரசுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலை முதல்வர் உங்களிடம் சொல்லச் சொன்னார். உங்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவும் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்துடன் செய்தியாளர்களைச் சந்தித்தார், கருணாநிதி. அப்போது, ``உங்களைக் கொலை செய்ய என்ன காரணம்" என்று கேட்டதற்கு, ``அதை, கடிதத்தில் சொல்லியுள்ளார்களே” என்று தமிழகமே அதிரும் பதிலைச் சொன்னார். அதன்பிறகு, கட்சியிலிருந்து வைகோவை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தி.மு.க இரண்டாவது முறையாகப் பிளவைச் சந்தித்தது. உதயசூரியன் சின்னத்துக்கு உரிமைகோரி வைகோ வழக்கு தொடர்ந்தார். வைகோ பின்னால், ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் அணிவகுத்தனர். ``உதயசூரியன் பறிபோனால் என் உயிர் போய்விடும்” என்று கருணாநிதி களங்கினார். ஆனால், தி.மு.க-வுக்கே உதயசூரியன் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட பிறகு, ம.தி.மு.க என்கிற கட்சியைத் தொடங்கினார் வைகோ.

லட்சியத்தில் உறுதி என்கிற பெரும் முழக்கத்தோடு கருணாநிதியின் போர்வாள் அவருக்கு எதிரான வாளாகக் களம் மாறியது அப்போதுதான். வைகோ பின்னால் தி.மு.க-விலிருந்து அணிவகுத்துச் சென்ற பலரும் வைகோ-வின் அரசியல் முடிவுகளால் மீண்டும் தி.மு.க-வுக்குத் திரும்பினார்கள். பொன்.முத்துராமலிங்கம், செஞ்சி.ராமச்சந்திரன், கண்ணப்பன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டவர்கள் தி.மு.க-வுக்கு வந்தபிறகும் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், எந்த தளபதிக்காக போர்வாளை கருணாநி்தி தூக்கி எறிந்தாரோ, அந்தப் போர்வாள் மீண்டும் தளபதியின் படையைப் பாதுகாக்கப் புறப்பட்டுவிட்டது. போர்வாளுக்குப் பக்கபலமாக நின்றவர்கள், இன்று தளபதிக்குச் சேனையாக இருந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள்” என்கிறார்கள், மூத்த நிர்வாகிகளாக அப்போது ம.தி.மு.க-வில் இருந்தவர்கள்.

தொடர்ந்து அவர்கள், ``வைகோ இதுபோன்று அழுவது முதல்முறை அல்ல. முரசொலி மாறன் மறைவுக்குச் சிறையிலிருந்து பரோலில் வந்து அவர் உடலைப் பார்த்து அழுதார். திண்டுக்கலில் தி.மு.க நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட வைகோ, கருணாநிதி இப்போது ஸ்டாலின் பேசியது போன்று உணர்ச்சிப் பொங்கிப்பேச அப்போது மேடையில் கண்ணீர் வடித்தார். அவரை, அருகில் இருந்த துரைமுருகன் ஆறுதல்படுத்தினார். கருணாநிதி உடல் நலிவுற்றிருந்தபோதும் அவரைப் பார்த்து அழுதார். எனவே, உணர்ச்சிப்பெருக்கினால் வைகோ அழுவது ஒன்றும் புதிதல்ல. அவர் பின்னால் சென்றவர்கள் நிலை அதைவிடக் கண்ணீராக உள்ளது” என்கிறார்கள்.

தளபதி போருக்குத் தயாராகிவிட்டார். அவரைக் காத்துக்கொள்ள போர்வாள் தேவை... உறைக்குள் உறங்கிக்கிடந்த வாளுக்கும் இதுவே நல்லவேளை. தளபதியின் கரங்களில் இருப்பது வாளுக்குப் பெருமை.. ஆனால், போர்வாளை  நம்பி வந்த சேனைகளின் நிலைமை?