Published:Updated:

‘அதனால்தான் அவர் நல்லகண்ணு!’

‘அதனால்தான் அவர் நல்லகண்ணு!’
பிரீமியம் ஸ்டோரி
‘அதனால்தான் அவர் நல்லகண்ணு!’

‘அதனால்தான் அவர் நல்லகண்ணு!’

‘அதனால்தான் அவர் நல்லகண்ணு!’

‘அதனால்தான் அவர் நல்லகண்ணு!’

Published:Updated:
‘அதனால்தான் அவர் நல்லகண்ணு!’
பிரீமியம் ஸ்டோரி
‘அதனால்தான் அவர் நல்லகண்ணு!’

புலியூர்குறிச்சி... திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். ஒரு கூலித்தொழிலாளியின் வீட்டில் வெடிகுண்டுகளுடன் உறங்கிக்கொண்டிருக்கிறார் நல்லகண்ணு. சுற்றிவளைத்து அவரைக் கைதுசெய்கிறது போலீஸ். அவரைக் கடுமையாக விசாரிக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் பதில் கிடைக்கவே இல்லை. கனத்த பூட்ஸ் கால்களால் நல்லகண்ணுவின் கால்களில் ஏறி மிதிக்கிறார் இன்ஸ்பெக்டர். அப்போதும் பதில் வரவில்லை. உடனே, நல்லகண்ணுவின் மீசை முடியை ஒவ்வொன்றாகப் பிடுங்குகிறார்கள் போலீஸ்காரர்கள். வலியால் துடிக்கிறார். ஆனாலும், அவரிடமிருந்து வந்த ஒரே பதில் ‘மௌனம்’ மட்டும்தான்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான தோழர் நல்லகண்ணு, அனைத்து அரசியல் கட்சியினராலும் பெரிதும் மதிக்கப்படுபவர். அதிர்ந்து பேசாத நல்லகண்ணுவைத்தான் பொதுவாகத் தெரியும். ‘அந்தக் காலத்தில் பல பண்ணையார்களுக்கும் காவல்துறைக்கும் சிம்மசொப்பனமாக விளங்கியவர் அவர்’ என்பது பலரும் அறியாதது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவர் மீசையே வைத்துக்கொள்ளவில்லை.

‘அதனால்தான் அவர் நல்லகண்ணு!’

இத்தகைய வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில், ‘அதனால்தான் அவர் நல்லகண்ணு’ என்கிற ஆவணப்படம் ஒன்று தயாராகி வருகிறது. ஈழத்தமிழர்கள், விவசாயிகள் தற்கொலை பற்றிய குறும்படங்களை இயக்கிய சேலம் சண்முகவேலு இயக்கும் இந்த ஆவணப்படத்தை இயக்குநர் சமுத்திரக்கனி தயாரிக்கிறார்.

“தமிழகத்தில் தோழர் நல்லகண்ணுவின் கால் படாத கிராமமே இல்லை. சுதந்திரப் போராட்டக் காலம் தொடங்கி, தமிழகத்தில் பல லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்திருக்கிறார். 94 வயதிலும் பயணம் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவரது அடிச்சுவட்டை அறிய நாங்கள் 12,000 கி.மீ தூரம் பயணித்திருக்கிறோம்” என்று கூறிய சண்முகவேலுவிடம், “இந்தப் படத்தை எடுக்க நல்லகண்ணு எப்படிச் சம்மதித்தார்?” என்று கேட்டோம்.

“அவர் சம்மதிக்கவே இல்லை. 2007-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து முயற்சி செய்தேன். ‘படம் எடுக்குற அளவுக்கு என்ன செஞ்சிட்டேன்... அதெல்லாம் வேண்டாம்’ என்று மறுத்தார். கட்சியில் பல தலைவர்களிடம் பேசி, ‘ஆய்வின் அடிப்படையில்தான் எடுக்கப்போகிறோம்’ என்று சொன்ன பிறகு, அரை மனதுடன் சம்மதித்தார்” என்ற சண்முகவேலு, இப்படம் பற்றிய பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். 

“வெவ்வேறு பகுதிகளில் அவருடன் போராட்டக் களத்தில் இருந்தவர்களைச் சந்தித்தோம். திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு அருகே கட்டளை என்கிற ஒரு கிராமத்துக்குச் சென்றோம். முழுக்கவே பட்டியலின மக்கள் வசிக்கும் கிராமம். அங்குதான், நீண்டகாலம் அவர் தலைமறைவாக இருந்துள்ளார். அவருடைய தலைமறைவு வாழ்க்கையைப் பற்றி நெகிழ்ச்சியான தகவல்களை அந்த மக்கள் பகிர்ந்துகொண்டனர். 

கீழாம்பூர்  கிராமத்தில் 85 வயதாகும் ஒருவரைச் சந்தித்தோம். அவர், நல்லகண்ணுவுடன் மூன்றாண்டுகள் சிறையில் இருந்தவர். ‘மதுரா கோட்ஸ் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நல்லகண்ணு தலைமையில் கம்யூனிஸ்டுகள் போராடினோம். எங்களை ஒடுக்குவதற்கு போலீஸை ஏவினார்கள். எங்கள் மீது போலீஸார் குண்டு வீசினார்கள். நல்லகண்ணு தலைமையில் நாங்கள் போலீஸார் மீது குண்டு வீசினோம்’ என்று அவர் சொன்னார். அம்பாசமுத்திரம் அருகே காக்கைகுளத்தில் உள்ள ஒரு மலையின் உச்சியில்தான், நல்லகண்ணு தலைமறைவாக இருந்திருக்கிறார். அங்குதான் வெடிகுண்டுகளைத் தயாரித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டபோது நல்லகண்ணு கையில் மூன்று குண்டுகள் இருந்தன என்று அவர் சொன்ன தகவல் ஆச்சர்யமாக இருந்தது. 

‘முத்திரை மரக்கால்’, ‘பட்டமரக்கால்’ என்று இரு வகையான மரக்கால்கள் இருந்துள்ளன. முத்திரை மரக்கால் அளவில் பெரியது, பட்டமரக்கால் என்பது சிறியது. முத்திரை மரக்காலில்தான் கூலி நெல்லை அளந்து விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டும். அது அரசு உத்தரவு. ஆனால், பட்டமரக்காலில் அளந்துதான் பண்ணையார்கள் கூலி கொடுத்துள்ளனர். அதை எதிர்த்து நல்லகண்ணு தலைமையில் கம்யூனிஸ்டுகள் போராடியுள்ளனர். பண்ணையார்கள் உடன்படவில்லையாம்.  ‘அப்போ நல்லகண்ணு பொங்கி எழுந்த காட்சியை இப்போ நினைச்சாலும் உடம்பு புல்லரிக்குதுங்க’ என்றார் ஒரு பெரியவர்.

அம்பாசமுத்திரம் பகுதியில் ஆதீனத்துக்கு சொந்தமாகப் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை விவசாயிகள் காலங்காலமாக விவசாயம் செய்துவருகிறார்கள். அங்கு விளையும் நெல்லில் 60 சதவிகிதம் ஆதீனத்துக்கும் 40 சதவிகிதம் விவசாயிகளுக்கும் என பங்கீடு இருந்தது. அதை எதிர்த்து நல்லகண்ணு தலைமையில் மிகப் பெரிய போராட்டம் நடந்துள்ளது. அதன் விளைவாக, விவசாயிகளுக்கு 60 சதவிகிதம் கொடுப்பதாக இறங்கிவந்துள்ளனர். அந்த மக்களைச் சந்தித்தபோது, ‘எங்க ஊரையே அவர்தான் காப்பாத்தினாரு... நாங்க சாகுற வரைக்கும் மறக்கமாட்டோம்’ என்றனர். ஆவணப்படம் இன்னும் இரண்டு மாதங்களில் வெளிவரும்” என்றார் சண்முகவேலு.

அதே அம்பாசமுத்திரத்தில்தான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நல்லகண்ணு தோற்கடிக்கப்பட்டார்!

- ஆ.பழனியப்பன்