Published:Updated:

``எம்.ஜி.ஆர் என்னை வாழ்த்தினார்" - கேரள ஆளுநர் சதாசிவம் நெகிழ்ச்சி

கேரள மாநிலம் பாலக்காடு அருகே வடவனூரில் சைதை துரைசாமியால் ஒரு கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். வீட்டை கேரள ஆளுநர் பி சதாசிவம் திறந்துவைத்தார்.

``எம்.ஜி.ஆர் என்னை வாழ்த்தினார்" - கேரள ஆளுநர் சதாசிவம் நெகிழ்ச்சி
``எம்.ஜி.ஆர் என்னை வாழ்த்தினார்" - கேரள ஆளுநர் சதாசிவம் நெகிழ்ச்சி

``எம்.ஜி.ஆர் எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க-வைத் தோற்றுவித்தாரோ, அந்த நோக்கம் சீர்குலையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; குடும்ப அரசியல் செய்யும் கட்சிதான் நம்முடைய பிரதான எதிரி" என்று கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்தில் பேசுகையில் குறிப்பிட்டார் சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி.

பாலக்காடு அருகே உள்ள வடவனூரில் பழுதடைந்த நிலையில் எம்.ஜி.ஆர் வாழ்ந்த வீடு இருந்தது. அந்த வீட்டை சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து புதுப்பித்துள்ளார் சைதை துரைசாமி. புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் இல்லத்தை கேரள மாநில ஆளுநர் பி. சதாசிவம், பிப்ரவரி 26-ம் தேதி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதா, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய சைதை துரைசாமி, ``ஏழை மக்களின் கடவுளாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். உலக வாழ்வியல் நெறிமுறைகளைப் பூர்த்தி செய்து, `வாத்தியார்' என்று அனைவராலும் அன்போடு போற்றப்படுபவர். சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடு இல்லாமல் வாழ்ந்தவர். கேரளாவில் அவர் வாழ்ந்த வீடு சிதிலமடைந்திருப்பதை ஊடகங்களின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். அந்தத் தகவல் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனான எனக்கு மிகுந்த மனக்கவலையை அளித்தது. உடனடியாக, அந்த வீட்டைப் புனரமைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், `யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்' என்று தெரியவில்லை. அந்த நேரத்தில், எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தானம் செய்த லீலாவதியைத் தொடர்பு கொண்டு, என்னுடைய எண்ணத்தைத் தெரிவித்தேன். `உங்களுக்காக நான் புனரமைப்புப்  பணிகளை அருகிலிருந்து செய்கிறேன்' என்றார் அவர். அவரின் பதில் எனக்குக் கண்ணீரை வரவழைத்துவிட்டது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று வாழ்ந்து மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் 54 ஆண்டுகளாக எம்.ஜி.ஆரின் புகழைப் பரப்பும் பணியைச் செய்து வருகிறேன். நடிகர்கள் நாடாள முடியும் என்று உலகிற்குக் காட்டியவர் எம்.ஜி.ஆர். நல்ல எண்ணங்களையும், சிந்தனைகளையும் வித்திட்டவர். 50 ஆண்டுக்கால திராவிட இயக்க வளர்ச்சிக்குக் காரணமானவர். எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க-வை எம்.ஜி ஆர் தோற்றுவித்தாரோ, அது அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்ப அரசியல் செய்யும் கட்சிதான் நம்முடைய பிரதான எதிரி" என்றார்.

தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதா, ``இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக யாரை அழைக்க வேண்டும் என முடிவெடுக்க வேண்டியிருந்தது. கேரள ஆளுநரும், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான சதாசிவத்தை அழைப்பதுதான் சரி எனத் தோன்றியது. அதன்படி அவரை அழைத்தோம். நீதித்துறையில் நேர்மையாகப் பணியாற்றிய ஒருவரைக் கொண்டு எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் திறக்கப்பட்டதை நான் பெருமையாகக் கருதுகிறேன். எம்.ஜி.ஆரின் பெயரைச் சொன்னாலே தமிழகத்தில் 30 சதவீத ஓட்டுகள் விழுந்து விடும். கண் அசைவிலேயே அனைவரையுமே கட்டுப்படுத்தி வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர்" என்றார்.

கேரள ஆளுநர் சதாசிவம், ``மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ள எம்.ஜி.ஆ.ரின், புதுப்பிக்கப்பட்ட இல்லத்தைத் திறந்து வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஏழை மக்களுக்காக அயராது உழைத்தவர் அவர். தன்னலம் மறந்த தலைவரின் பிம்பமாகவே எம்.ஜி.ஆரை மானசிகமாக நினைத்து, மக்கள் ஏற்றுக்கொண்டனர். `ஓடி ஒடி உழைக்கணும்...ஊருக்கெல்லாம் கொடுக்கணும்' என்ற பாடல் வரிகளுக்கேற்ப, தன் உழைப்பு அனைத்தையும் மக்களுக்காகக் கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் கடைசிவரை வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். இந்தியா - சீனா இடையே போர் நடந்த காலகட்டத்தில், 75,000 ரூபாய் நிதியை அன்றைய பிரதமர் நேருவிடம் கொடுத்து, காமராஜர் உள்ளிட்டோரிடம் நற்பெயரை வாங்கியவர் அவர். அனைத்துத் தரப்பு மக்களையும் புரிந்துகொண்ட காரணத்தினாலேயே எம்.ஜி.ஆர், மக்கள் தலைவராக விளங்கினார். 

கடந்த 1973-ம் ஆண்டு சட்டப்படிப்பு முடித்து வழக்கறிஞராக நீதிமன்றத்திற்குச் சென்ற முதல்நாள்... காலை 8 மணியளவில் எம்.ஜி.ஆரின் இல்லத்திற்குச் சென்றேன். அப்போது, அவரைக் காண ஏராளமானோர் காத்திருந்தனர். வந்திருந்த அனைவரின் பார்வையாளர் அட்டைகளையும் ஜேப்பியார் வாங்கினார். அப்போது, ஒரு துண்டுக் காகிதத்தில், நான் எதற்காக எம்.ஜி.ஆரை சந்திக்கச் சென்றேன் என்பதை எழுதிக் கொடுத்தேன். ஜேப்பியார் உள்ளே சென்று அதைக் கொடுத்ததும், முதலில் என்னைத்தான் சந்திக்க அழைத்தார் எம்.ஜி.ஆர். 'நீங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லும் முதல்நாள் இது. அதனால்தான், உங்களைக் காத்திருக்க வைக்காமல் முதலில் அழைத்தேன். அரசியலுக்கு அப்பாற்பட்டுச் செயல்படுங்கள்  என்று என்னை வாழ்த்தி அனுப்பினார். அதன் பிறகு, அவருடைய உதவியாளர் மூலம் நான் அவரிடம் ஆசிபெற்ற புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்தார். இது என் வாழ்வின் நெகிழ்வான தருணம். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்தைப் பாதுகாப்பதில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக முயற்சி எடுத்த சைதை துரைசாமி உள்ளிட்ட அனைவருக்கும் என் பாராட்டுகள்" என்றார்.