Published:Updated:

“இந்த இடம் எனக்கு நிரந்தரமில்லை!”

“இந்த இடம் எனக்கு நிரந்தரமில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“இந்த இடம் எனக்கு நிரந்தரமில்லை!”

“இந்த இடம் எனக்கு நிரந்தரமில்லை!”

“இந்த இடம் எனக்கு நிரந்தரமில்லை!”

“இந்த இடம் எனக்கு நிரந்தரமில்லை!”

Published:Updated:
“இந்த இடம் எனக்கு நிரந்தரமில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“இந்த இடம் எனக்கு நிரந்தரமில்லை!”

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்துக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு. ‘ஆளுநர் என்ற பெயரில் கிரண்பேடி புதுவையில் அதிகார அத்துமீறல்களைச் செய்வதாக’த் தொடரப்பட்ட வழக்கில்  ‘யூனியன் பிரதேசங்களில் ஆளுநருக்கு எல்லையற்ற அதிகாரமில்லை’ என்று தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். கிரண்பேடியைச் சந்தித்து எவ்வளவு அனல் வீசும் கேள்விகளைக் கேட்டாலும், கழுவிய மீனில் நழுவிய மழுப்பல் மீன்களாகவே வந்துவிழுகின்றன பதில்கள்.

புதுச்சேரியின் ஆளுநராக மூன்றாண்டுகளை நிறைவு செய்வதை எப்படி உணர்கிறீர்கள்?

“எனது வாழ்வில் நல்ல நோக்கங்களுடன் கழிந்த பயனுள்ள மூன்றாண்டுக்காலப் பயணமிது.”

கவர்னராக நீங்கள் பொறுப்பேற்றபோது ‘மாநில வளர்ச்சிக்காக முதல்வர் நாராயணசாமியுடன் இணைந்து செயல்படுவேன்’ என்று கூறினீர்கள். ஆனால் அப்படி நடக்கவில்லையே?

“அது மிகவும் வருத்தத்திற்குரியதுதான். நானும், முதல்வர் நாராயணசாமியும் ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால் புதுச்சேரியை இன்னும் சிறந்த முறையில் நிர்வகித்திருக்கலாம். அத்துடன் பெரிய அளவில் முதலீடுகளைப் பெற்று நாட்டிலேயே சிறந்த யூனியன் பிரதேசமாகப் புதுச்சேரியை உருவாக்கியிருக்கலாம்.”

“இந்த இடம் எனக்கு நிரந்தரமில்லை!”

இலவச அரிசி உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறீர்கள் என்று முதல்வர் நாராயணசாமி சொல்லும் குற்றச்சாட்டு குறித்து உங்கள் பதில் என்ன? மக்களுக்கான திட்டங்களுக்கு ஏன் ஒப்புதல் அளிக்க மறுக்கிறீர்கள்?

“அந்தக் குற்றச்சாட்டுகள் எவையும் உண்மையில்லை. அதற்கான ஆதாரங்களும், ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்யும்போது உண்மை வெளியே வரும்.”

மத்திய பா.ஜ.க அரசின் ஏஜென்டாகச் செயல்படுகிறீர்கள் என்று உங்கள்மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து?

“அந்தக் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை.”

யூனியன் பிரதேசங்களுக்கு நானே நிர்வாகி, இறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் எனக்கே இருக்கிறது என்கிறீர்கள். அப்படியானால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறுகிறீர்களா?

“யூனியன் பிரதேச சட்ட விதிமுறைகளைத்தான் நான் பின்பற்றிவருகிறேன். வணிகம் மற்றும் நிதி விதிமுறைகளை நான் புரிந்துகொண்டாலும் தலைமைச் செயலாளர், சட்டச் செயலாளர் மற்றும் நிதிச் செயலாளரின் ஒப்புதல்களைப் பெற்றே அவற்றை நடைமுறைப்படுத்தி யிருக்கிறேன். அதேபோல, பொதுத் தலைமைக் கணக்காளர் மற்றும் இந்திய அரசின் ஒப்புதலைப் பெறவும் தவறியதில்லை.”

உங்களுக்கு எதிராகக் காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கில் மாநில அரசுக்குத்தான் அதிகாரம் என்று உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து?

“அந்தத் தீர்ப்பு குறித்து ஆளுநர் மாளிகை விரிவாக ஆய்வு செய்துவருகிறது.”

அந்தத் தீர்ப்புக்கு எதிராக ஆளுநர் மாளிகை சார்பில் மேல் முறையீடு செய்யப்படுமா?

“காலம் அதற்குப் பதில் சொல்லும்.”

வார இறுதி நாள்களிலும்கூட மக்கள் பிரச்னைகளுக்காகச் செலவழிக்கிறீர்கள். உங்களுக்கான பொழுதுபோக்குதான் என்ன?

“அலுவலகப் பணி முடிந்ததும் கிடைக்கும் நேரங்களில் என் தனிப்பட்ட வேலைகளைச் செய்துகொள்வேன். புதிய புதிய கோணங்களில் சிந்தித்து, சிறப்பான முறையில் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது எனக்குப் பெரும் உந்துதலையும், உற்சாகத்தையும் தரும்.”

புத்தகங்கள் வாசிக்க நேரமிருக்கிறதா?

“என்னுடைய பயண நேரங்களை நான் படிப்பதற்காக மட்டுமே செலவழிப்பேன். அதேபோல அதிகாலையில் படிப்பதும் என் வழக்கங்களில் ஒன்று.”

சீர்திருத்தம் வேண்டும் என்பதைத் தொடர்ந்து கூறி வருகிறீர்கள். குளங்களைத் தூர் வாருவதாலோ சுத்தப்படுத்துதலாலோ மட்டுமே சீர்திருத்தம் வந்துவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

“நீராதாரம் மற்றும் மக்களின் நலன்களை முன்னிறுத்தியே குளங்கள் மற்றும் ஏரிகளைத் தூர்வாரி சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. தூய்மையான தண்ணீர், நல்ல ஆரோக்கியம் போன்றவை இருந்தால் மட்டுமே வாழ்வு வளம் பெறும். இல்லையென்றால் வறட்சியும் நோய்களும்தான் மிஞ்சும்.”

“இந்த இடம் எனக்கு நிரந்தரமில்லை!”

புதுச்சேரி அரசுக்குத் தொல்லை கொடுப்பதற்காகவே மத்திய அரசு உங்களை அனுப்பியிருக்கிறது என்றும், அதை நிறுத்திவிட்டால் அடுத்த நிமிடமே பதவியிலிருந்து நீங்கள் தூக்கியடிக்கப்படுவீர்கள் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உங்களை விமர்சித்திருந்தாரே?

“குடியரசுத் தலைவர்தான் என்னை ஆளுநராக நியமித்திருக்கிறார். எனினும், இந்த இடம் எனக்கு நிரந்தரமில்லை என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். அதனால்தான் ஒருநாள்கூட வீணாகிவிடக் கூடாது என்று பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.”

பா.ஜ.க அரசு தேச ஒற்றுமை என்று சொல்லிக்கொண்டு ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளின் நிர்வாகத்தில் தலையிடுவது சரியா?

“இது ஒரு தவறான கண்ணோட்டம். இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.”

கிரண்பேடி என்றால் இரும்புப் பெண்மணி, நேர்மையான அதிகாரி என்ற பிம்பம் இருந்தது. ஆனால் இப்போதோ மத்திய அரசின் கைப்பாவை என்ற பிம்பம் இருக்கிறதே?

“இதுபோன்ற கருத்துகள் அரசியலில் மிக மிக சாதாரணமானது என்பதுடன் தவிர்க்க முடியாததும்கூட.”

சமீபத்தில் அதிகரித்திருக்கும் பெண்கள்மீதான வன்முறையை ஒழிக்க என்ன வழி?

“தரமான கல்வி, பெற்றோர்களின் சிறந்த வளர்ப்பு முறை போன்றவை அதற்கு உறுதுணையாக இருக்கும். அதேபோல முறையான மற்றும் சிறந்த செயல்திறனுடைய குற்றவியல் நீதி அமைப்பும் இருத்தல் அவசியம்.”

ஆம் ஆத்மியில் இருந்த அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்களேன்...

“எந்த அரசியல் கட்சி குறித்தும் என் தனிப்பட்ட கருத்துகளைக் கூற நான் விரும்பவில்லை.”

அண்ணா ஹசாரேவின் போராட்டம் வெற்றிபெறும் என்று நினைக்கிறீர்களா?

“இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை.”

- ஜெ.முருகன்,  படங்கள்: ஆ.குரூஸ்தனம்