Published:Updated:

மிரட்டும் பி.ஆர்.பி. சொந்தம்: சிவாஜி நகரில், பிளாட் வாங்கியவர்கள் சோகம்!

மிரட்டும் பி.ஆர்.பி. சொந்தம்: சிவாஜி நகரில், பிளாட் வாங்கியவர்கள் சோகம்!
மிரட்டும் பி.ஆர்.பி. சொந்தம்: சிவாஜி நகரில், பிளாட் வாங்கியவர்கள் சோகம்!
மிரட்டும் பி.ஆர்.பி. சொந்தம்: சிவாஜி நகரில், பிளாட் வாங்கியவர்கள் சோகம்!

மதுரை: மதுரை ஒத்தக்கடை அருகே 1973ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் துவக்கி வைக்கப்பட்ட வீட்டுமனைகளில், இன்று வரை அதை வாங்கியவர்களால் தங்கள் மனைகளுக்குள் செல்ல முடியாத கொடுமை ஏற்பட்டுள்ளது. இவர்களை தடுப்பவர் வேறு யாருமல்ல, மனைகளை விற்பனை செய்தவர்தான்!

இது சம்பந்தமாக போலீஸ், கலெக்டர், எஸ்.பி என, கடைசியாக முதல்வர் வரைக்கும் மனு அனுப்பியும், சிவாஜி கணேசன் நகரில் மக்களால் வீடு கட்ட முடியவில்லை. ஏன்? உள்ளேயே நுழையவே முடியவில்லை.

அந்த பகுதியில் ஐந்து பிளாட்கள் வாங்கி, இன்று வரை அதிகாரிகளை பார்க்க அலைந்து கொண்டிருக்கும் ஆ.கோபாலிடம் பேசினோம்,  ‘‘மதுரை வடக்கு தாலுகா, ஒத்தக்கடை சப்டியை சேர்ந்த அரும்பனூர், 2வது பிட் கிராமத்தில், அக்னி அம்பலம் என்பவர், ஒரு பிளாட் அஞ்சே கால் சென்ட் வீதம், 110 பிளாட்டுகளை 1973ல் நடிகர்திலகம் சிவாஜி கணேசனை அழைத்து வந்து விற்பனை செய்தார்.

வாங்கியவர்களில் பெரும்பாலோர் ஏழை சவுராஷ்டிரா மக்கள்தான். சிவாஜி துவக்கி வைத்ததால், அந்த பகுதிக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நகர் என்று பேரும் வைத்தோம். மனைகளை வாங்கி போட்ட எங்களால் உடனே அதில் வீடு கட்ட முடியவில்லை. நம்ம இடம்தானே என்று அசால்டாக போட்டு வைத்தோம்.  சமீபத்தில் அந்த பகுதியெல்லாம், மதுரைக்கு விரிவாக்க பகுதியாக மாறிவிட்டதால், விலை பல மடங்கு ஏறிவிட்டது.

##~~##
இப்போது மனைகளில் வீடு கட்ட நினைப்பவர்களை, உள்ளேயே வரக்கூடாது என்று அக்கினி அம்பலமும், அவரது உறவினர்களும் மிரட்டுகிறார்கள். நாங்களும், பத்திரம், பட்டாக்களை காட்டி முறையிடாத அதிகாரிகளே இல்லை. முதல்வர் மற்றும் கலெக்டர் உத்தரவிட்டும், ஒத்தக்கடை போலீஸ், வி.ஏ.ஓ., ஆர்.ஐ., ஆகியோர் எங்களிடமே, ‘இடத்துக்குள் போகாதீர்கள், அக்கினி அம்பலம் மோசமான ஆளு, பி.ஆர்.பி.க்கு சொந்தக்காரர். உங்களை காலி பண்னிடுவாரு’ன்னு எங்களை மிரட்டுறாங்க.

இதுக்கு மேலேயும் யாருகிட்டே போய் முறையிடுறதுன்னு தெரியலை.... முதல்வர்தான், அக்கினி அம்பலத்து மேலேயும், அதிகாரிங்க மேலேயும் நடவடிக்கை எடுக்கனும்’’ என்றார் விரக்தியுடன்.

பி.ஆர்.பி. மீது பல்வேறு வழக்குகள், கைது என எவ்வளவோ நடந்தும், அவர் பேரை சொல்லி டெர்ரர் வேலைகளில் ஈடுபடுவோர் மதுரையில் இன்னும் உலவுவதுதான் ஆச்சரியமாக உள்ளது!

செ.சல்மான்

படம்: பா.காளிமுத்து