Election bannerElection banner
Published:Updated:

‘‘பதவிக்காக கூஜா துாக்கி வாழமுடியாது!’’ பா.ம.க மீது பாய்கிறார் நடிகர் ரஞ்சித்

‘‘பதவிக்காக கூஜா துாக்கி வாழமுடியாது!’’  பா.ம.க மீது பாய்கிறார் நடிகர் ரஞ்சித்
‘‘பதவிக்காக கூஜா துாக்கி வாழமுடியாது!’’ பா.ம.க மீது பாய்கிறார் நடிகர் ரஞ்சித்

கொள்கைகளையும் லட்சியங்களையும் மாற்றிக்கொள்வது உடனுக்குடன் விற்பது என்பது ஜீரணிக்க முடியாத ஒன்று. ஒரு கட்சியில் இணைந்துவிட்டு, இப்போது அவர்களின் மீது கீழ்தரமான விமர்சனங்களை வைப்பற்கு என் மனசு ரொம்பவும் கூசுகிறது

‘‘பா.ம.க–வின் 10 அம்சக்கோரிக்கைதாம் இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை!’’  

``ஏதோ நாலு படங்களில் நடித்தோம்... சென்றோம் என்று இல்லாமல் அர்ப்பணிப்போடு இருக்க வேண்டும் என்ற என்று நினைத்தேன். அதனால்தான் பா.ம.கவில் இணைந்தேன். முப்பது ஆண்டுக்காலமாக மதுவுக்கு எதிராகப் போராடுகிறார்கள்... விவசாயத்துக்கு ஆதரவாக பேசுகிறார்கள், நீர் மேலாண்மையைப் பற்றிப் பேசுகிறார்கள்... ஒரு மாற்றம் வராதா? தமிழகம் சிறப்பாக இருக்க ஒரு வாய்ப்பு இருக்காதா? என்கிற எண்ணம் எனக்கு. ஆனால், ஒரு நொடிப்பொழுதில் என் கனவுகள் அனைத்தும் சிதைந்துவிட்டது. கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் என்பதிலிருந்தும் நான் விலகிக்கொள்கிறேன் என்றபடி பா.ம.க–விலிருந்து வெளியேறியுள்ளார் நடிகர் ரஞ்சித்...நேற்று, கோவையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் அளித்த விரிவான பேட்டி... 

``கொள்கைகளையும் லட்சியங்களையும் மாற்றிக்கொள்வது உடனுக்குடன் விற்பது என்பது ஜீரணிக்க முடியாத ஒன்று. ஒரு கட்சியில் இணைந்துவிட்டு, இப்போது அவர்களின் மீது கீழ்த்தரமான விமர்சனங்களை வைப்பற்கு என் மனசு ரொம்பவும் கூசுகிறது. இருந்தாலும், சில விஷயங்களை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். என்றபடி பேச ஆரம்பித்தார்....

``மாற்றம்... முன்னேற்றம்... என்கிற பெரிய முழக்கத்தை வைத்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தினார்கள்.  ஸ்டைலைட்டை  எதிர்த்துப் போராட்டம்,  ஹைட்ரோ கார்பனை எதிர்த்துப் போராட்டம், மதுக்கடைகளை மூடச்சொல்லி போராட்டம்... எட்டு வழிச் சாலைக்கு எதிராகப் போராட்டம் என்று எல்லாவற்றுக்கும் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், இப்போது ஒரு நொடிப் பொழுதாவது மக்களை நினைத்துப் பார்த்ததா பா.ம.க? வேதனையாக இருக்கிறது. பதவிக்காக... என்னால் நாலு பேருக்கு கூஜா தூக்கி வாழ முடியாது. தப்பு யார் செஞ்சாலும் தப்பு தப்புதான். இவ்வளவு நாள் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிவிட்டு எப்படி, டாஸ்மாக் நடத்துகிறவர்கள் கூடவே கூட்டணி சேர்வீர்கள்? என்ன கான்செப்ட் இது?   

அதுமட்டுமல்ல... அ.தி.மு.க-வின் அமைச்சர்களை...`டயர் நக்கி,மானங்கெட்டவனே, மண்ணாங்கட்டி, மடையன், பொறம்போக்கு, ஒன்றும் தெரியாதவர்கள், அடிமை, ஐந்தறிவு படைத்தவர்கள், ஆண்மையற்றவர்கள், என்றெல்லாம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை கடுமையாக விமர்சித்துவிட்டு, இப்போது யாரை எதிர்த்துப் போராடுகிறோமோ அவர்களின் காலைப்பிடித்து, ஒன்றாக உட்கார்ந்து விருந்து சாப்பிடுவது கீழ்த்தரமான அரசியல் இல்லையா? அது மனசுக்கு ரொம்ப கஷ்டத்தைக் கொடுத்தது. கடந்த சில நாள்களாகவே நான் ரொம்பவும் மனம் வெம்பினேன், மனதளவில் சிரமப்பட்டேன். ஏன் இப்படிச் செய்திருக்கிறார்கள்.? எதற்காக இந்தக் கூட்டணி? ஏதாவது நியாயம் இருக்குமா? என்று நிறைய யோசித்தேன். என் அம்மாவிடம் கேட்டேன், மனைவியிடம் கேட்டேன், நண்பர்களிடம் கேட்டேன், சந்திக்கிற எல்லோரிடமும் கேட்டேன்...  எல்லோரும், காரித் துப்புறாங்க.! 

‘‘பதவிக்காக கூஜா துாக்கி வாழமுடியாது!’’  பா.ம.க மீது பாய்கிறார் நடிகர் ரஞ்சித்

 7 லட்சம் கோடிக்கு மேல் தமிழகத்தில் கடன் இருக்கிறது. சுத்தமாக தண்ணீர் இல்லை, விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். தொழில் பாதுகாப்பு கிடையாது. தொழில் வளர்ச்சி இல்லை. இவற்றையெல்லாம் மாற்ற நல்ல தலைவர் வரமாட்டாரா? என்கிற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கும்தானே.? அந்த எண்ணத்தில்தான் நாங்கள் அன்புமணியைத் தேர்ந்தெடுத்தோம். மாற்றம் வரும் என்று நம்பி  லட்சக்கணக்கான இளைஞர்கள் உங்கள் பின்னால் வந்தார்கள்? அவர்கள் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டீர்கள். அவர்களை மீண்டும் எப்படிச் சந்திப்பீர்கள்? 10 அம்சக் கோரிக்கைகள் என்று காரணம் சொல்கிறார்கள். அதுதான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை. மூன்று ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எதுவுமே செய்யாதவர்கள். இப்போது 10 கோரிக்கையை நிறைவேற்றிவிடுவார்களா? அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். அதன் பிறகு, நாங்கள் கூட்டணி சேர்கிறோம் என்று சொல்லியிருந்தால் நாங்கள் உயிரைக் கொடுத்து வேலை பார்த்திருப்போம். 

இப்போ குழந்தை பெற்றுக்கொள்ளலாம் பிறகு தாலி கட்டிக்கொள்ளலாம் என்கிற மாதிரி கூட்டணி அமைத்தால் என்ன அர்த்தம்? இது தமிழ்ச்சமூகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் இல்லையா? இத்தனை ஆண்டுக்காலம் எதுவுமே செய்யாத தமிழக அரசு, இந்தக் கோரிக்கைகள் மூலம் மட்டுமே நல்லது செய்துவிடுவார்களா? உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை ஒன்றாக இருப்பார்கள். உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும், நாங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. என்று சொல்லி கூட்டணியிலிருந்து வெளியேறிவிடுவார்கள். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது மீண்டும் மாற்றம் முன்னேற்றம் என்று கிளம்விடுவார்கள். மீண்டும் இளைஞர்கள் கொடியைப் பிடித்துக்கொண்டு சென்று ஏமாற வேண்டும். இந்தக் கட்சியிலிருந்து விலகியதில் நான் நிம்மதியாக உணர்கிறேன். பா.ம.க-விற்கு ஆதரவாகப் பேசும்போது யாரைவாயது தவறாகப் பேசியிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றவரிடம் சில கேள்விகளை முன் வைத்தார்கள் பத்திரிகையாளர்கள்...

‘‘பதவிக்காக கூஜா துாக்கி வாழமுடியாது!’’  பா.ம.க மீது பாய்கிறார் நடிகர் ரஞ்சித்

தொண்டர்களிடம்  கலந்தாலோசனை செய்யாமல்தான் அ.தி.மு.க–வோடு கூட்டணி அமைத்ததா பா.ம.க? 

சிரிப்புதான் வருகிறது.! எந்தத் தொண்டர்களிடம் அவர்கள் ஆலோசித்தார்கள்.? எனக்கு தெரிந்தவரை அவர்கள் எந்தத் தொண்டர்களிடமும் ஆலோசனை நடத்தவில்லை. சிங்கம் மாதிரி பிரஸ் மீட் கொடுத்துக்கொண்டிருந்த அன்புமணி, இப்போது கோழையாகிவிட்டார். 

 பா.ஜ.க –உடன் கூட்டணி கிடையாது அ.தி.மு.க–வோடுதான் கூட்டணி என்று ராமதாஸ் கூறியுள்ளாரே?

அவர்களோடு கூட்டணி வைத்தால் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய்விடும் என்று பயந்திருப்பார்கள். ஐ.. மீன்..  மானம்.. மரியாதை!

 பா.ஜ.கவிற்கு வேலை செய்யாதீர்கள் என்று ராமதாஸ் மறைமுகமாகச் சொல்கிறாரா?

இவர்களுக்கே இவர்களுடைய தொண்டர்கள் வேலை செய்வார்களா என்று தெரியவில்லை

பா.ம.கவில் இணைவதற்கு முன்பு நீங்கள் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக மேடைகளில் பேசியிருக்கிறீர்கள். இப்போது, அ.தி.மு.க- பா.ம.க கூட்டணியை எதிர்க்கிறீர்கள்... இது  பா.ம.க மீதான அதிருப்தியா அல்லது அ.தி.மு.க மீதான வெறுப்பா? 

 50 ஆண்டுக்கால ஆட்சியில் திராவிடக் கட்சிகள் எதுவும் செய்யவில்லை. இப்போது நாம் பொருளாதாரத்தில், வேலை வாய்ப்பில் பின்தங்கியிருக்கிறோம். இப்படியான சூழலில், ஒரு நல்ல ஆட்சி வேண்டும் என்றுதானே எல்லோரும் நினைப்போம். அ.தி.மு.க ஆட்சியை அகற்றுவதே குடிமகனின் கடமை. என்ற எண்ணத்தில் அன்புமணியைத் தேர்ந்தெடுத்தேன். எதிரிகளை வீழ்த்தக்கூடிய வாளாக யாரை நினைத்தேனோ அந்த வாளை அ.தி.மு.க–விடம் அடகு வைத்துவிட்டார்கள்.

  அ.தி.மு.க அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு சொன்ன நீங்கள் இப்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ளீர்களே? என்று கேட்டதற்கு,  குற்றம் நிரூபிக்கப்பட்டால் நாங்கள் முதல் ஆளாக குரல் கொடுப்போம் என்கிறாரே அன்புமணி?

 எப்படி மக்களை சந்திப்பாங்க? என்ன சொல்லி பிரசாரம் பண்ணுவீங்க? எப்படி ஒரே வண்டியில் போவீங்க? ஓட்டுக் கேட்கும்போது, இவருதாங்க ஃபோர் ட்வென்ட்டி... இவர் மேல நான் கேஸ் போட்டிருக்கேன். கேஸ்ல தீர்ப்பு வந்தது இவரை அரெஸ்ட் பண்ணி உள்ள வெச்சிருவோம். ஆனால், இப்போ ஓட்டுப் போட்ருங்க’ன்னு கேட்க முடியுமா? இவர் ரெண்டு கொலை பண்ணியிருக்கார். இவர் மேல வழக்குப் போட்டுருக்கோம். இப்போ ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சிருங்க. தீர்ப்பு வந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என்று ஓட்டுக் கேட்க முடியுமா? என்ன நிலைப்பாடு இது? சொல்லும் போதே தவறாகத் தெரியலையா? மாற்றம் முன்னேற்றம் மிகப்பெரிய ஏமாற்றமாகிவிட்டது

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு