Published:Updated:

``எப்படியும் 22 சீட்டுகள் கிடைத்துவிடும்”- விமானப்படை தாக்குதல் குறித்து எடியூரப்பா சர்ச்சைப் பேச்சு

``எப்படியும் 22 சீட்டுகள் கிடைத்துவிடும்”- விமானப்படை தாக்குதல் குறித்து எடியூரப்பா சர்ச்சைப் பேச்சு
``எப்படியும் 22 சீட்டுகள் கிடைத்துவிடும்”- விமானப்படை தாக்குதல் குறித்து எடியூரப்பா சர்ச்சைப் பேச்சு

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட விமானப்படைத் தாக்குதலால், கர்நாடகத்தில் 22 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெறும் என்று எடியூரப்பா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

புல்மாவா தாக்குதலையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பால்கோட் மலைப் பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில், 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பதிலடியாக நேற்று இந்திய வான் எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டன. இந்தியாவின் மிக்- 21 ரக விமானம் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவும் ஒரு மிக் ரக விமானத்தை இழந்துள்ளது. இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் பிடியில் இருக்கிறார். இரு நாடுகளும் பிரச்னையை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமெனச் சர்வதேச நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. 

இந்நிலையில், கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் செய்தியாளர்களிடத்தில் பேசிய கர்நாடக பாரதிய ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பா, '' பாகிஸ்தானில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்  காரணமாக,  நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு ஆதரவு அலை எழுந்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில்,  கர்நாடகத்தில் 28 மக்களவைத் தொகுதிகளில் 22 தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு பெருகிக்கொண்டே போகிறது'' என்று பேசினார்.

ஏற்கெனவே, எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்துக்காக பா.ஜ.க தேசிய பாதுகாப்பை அரசியலாக்குவதாகக் குற்றம் சாட்டிய நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான  எடியூரப்பாவின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்தக் கருத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்தியப்பிரதேச காங்கிரஸ், ``அவர்களுக்கு வெட்கமில்லை. நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. நமது வீரர் ஒருவர் பாகிஸ்தானில் இருக்கிறார். வீரர்களின் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். ஆனால், பா.ஜ.க ஓட்டுகளை எண்ணிக்கொண்டிருக்கிறது. கீழ்த்தரமான அரசியல்” எனப் பதிவிட்டுள்ளது.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கும் முன்னாள் முதல்வர் சித்தராமையா, ``பா.ஜ.க-வின் எண்ணம் அதிர்ச்சி அளிக்கிறது. பிரச்னை அடங்குவதற்கு முன்னதாகவே பா.ஜ.க ஓட்டில் கவனம் செலுத்துவது துரதிர்ஷ்டவசமானது. தேசப்பற்று கொண்ட எவராலும் இதனைச் சொல்ல முடியாது. தேச விரோதிகளால்தான் இப்படிச் சொல்ல முடியும். இதற்கு, ஆர்.எஸ்.எஸ் என்ன பதில் சொல்லப்போகிறது” என கேள்வி எழுப்பியுள்ளார். 

எடியூரப்பாவின் பேச்சால் சர்ச்சை வெடித்திருக்கிறது.  தற்போது, கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு 16 எம்.பி-க்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 10  மற்றும்  மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 2 எம்.பி-க்கள் உள்ளனர்.