Published:Updated:

`அவர்களை வளர்ப்பதற்காக கூட்டணி வைக்கல!' -பா.ஜ.க-வை விமர்சிக்கும் தம்பிதுரை

`அவர்களை வளர்ப்பதற்காக கூட்டணி வைக்கல!' -பா.ஜ.க-வை விமர்சிக்கும் தம்பிதுரை
`அவர்களை வளர்ப்பதற்காக கூட்டணி வைக்கல!' -பா.ஜ.க-வை விமர்சிக்கும் தம்பிதுரை

"தமிழகத்தில் பா.ஜ.க-வை வளர்க்கவோ, காலூன்ற வைக்கவோ இந்தக் கூட்டணி கிடையாது. அந்தக் கட்சியை வளர்ப்பதற்காக இந்த கூட்டணி அமைக்கவில்லை. எங்கள் கட்சியை மட்டுமே நாங்கள் வளர்ப்போம்" என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பா.ஜ.க-வை தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார். 'அது, தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து' என்று அ.தி.மு.க தலைமை மழுப்பிவந்தாலும், தொடர்ந்து விமர்சித்துவந்தார். இந்நிலையில், அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி உறுதியானதைத் தொடர்ந்து, பா.ஜ.க மீதான விமர்சனத்தைக் குறைத்தார். ஆனால் இப்போது, பா.ஜ.க மீதான விமர்சனத்தைத் தொடங்கி இருக்கிறார். கரூரை அடுத்த வடக்குப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்ற தம்பிதுரை, பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், "தேர்தல் கூட்டணியில் தே.மு.தி.க இழுபறியாக இருப்பதுகுறித்து கேட்கிறீர்கள். தேர்தல் கூட்டணிகுறித்து பேச்சுவார்த்தை நடத்த தனிக் குழு உள்ளது. அவர்கள் முடிவுசெய்வார்கள். நல்லபடியாக அமையும். தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இது, நாட்டிற்கு மரியாதையையும், கௌரவத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ராணுவத்தின் வலிமையைக் காட்டுகிறது. இந்த விசயத்தில் இந்திய அரசைப் பாராட்டுகிறோம். பெருமைப்படுகிறோம். ராணுவ வீரர்களைப் பாராட்டுகிறோம். இந்தியா வலிமையான நாடு என்பதைக் காட்டியுள்ளது.

பா.ம.க கூடதான் அ.தி.மு.க-வை விமர்சனம் செய்தது. இது கொள்கை ரீதியான கூட்டணி கிடையாது. கூட்டணிக்காக அ.தி.மு.க கொள்கையை விட்டுக்கொடுக்காது. தேர்தல் கூட்டணி என்பது எதிரிகளை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்டது. காங்கிரஸ், தி.மு.க வெற்றி பெறக்கூடாது. அதற்காகத்தான் இந்தக் கூட்டணி. 'பா.ஜ.க-வை அ.தி.மு.க தூக்கிச் சுமக்காது எனக் கூறியிருந்தீர்களே, இப்போது அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே' என்று கேட்கிறீர்கள். பா.ஜ.க-வை வளர்க்கவோ, காலூன்ற, வேரூன்ற வைக்கவோ இந்தக் கூட்டணி கிடையாது. எங்கள் கட்சியை மட்டுமே நாங்கள் வளர்ப்போம். மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம். அதேநேரம், பயங்கரவாதிகளை ஒழித்ததை நாடே பாராட்டுகிறது. தீவிரவாதிகளின் எதிர் நடவடிக்கைகளைச் சந்திக்க, இந்தியாவுக்கு திராணி இருக்கிறது. பயங்கரவாதிகளை ஒழித்த மோடியைப் பாராட்டுகிறேன்" என்றார்.