Election bannerElection banner
Published:Updated:

`இடஒதுக்கீட்டை இந்தத் துறையில் செயல்படுத்துங்கள்!'- தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

`இடஒதுக்கீட்டை இந்தத் துறையில் செயல்படுத்துங்கள்!'- தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
`இடஒதுக்கீட்டை இந்தத் துறையில் செயல்படுத்துங்கள்!'- தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

`இடஒதுக்கீட்டை இந்தத் துறையில் செயல்படுத்துங்கள்!'- தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

"உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, பதிவுத் துறையில் கடந்த காலங்களில் செய்யப்பட்ட பணியாளர் நியமனங்களுக்கு, முன் தேதியிட்டு இட ஒதுக்கீடு வழங்கி, அதனடிப்படையில் அனைத்து ஊழியர்களுக்கும் பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்" என்று தமிழக அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசுத் துறைகளில் இரண்டாம் நிலை சார் பதிவாளர் உள்ளிட்ட சில பணிகளுக்கு மாறுதல் மூலம் நியமிக்கப்படும்போது, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு போராடிப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில் இத்தீர்ப்பு, பதிவுத் துறையில் இன்னும் செயல்படுத்தப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

வணிக வரித் துறையில் உதவி வணிக வரி அலுவலர், பதிவுத் துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளர் ஆகிய பணிகளுக்கான காலியிடங்களில், மூன்றில் ஒரு பங்கு நேரடி நியமனத்தின் மூலமாகவும், இரு பங்குகள் அதே துறைகளில் உதவியாளர் நிலையில் இருப்பவர்களைக் கொண்டும் மாறுதல் மூலமான நியமனம் வழியாகவும் நிரப்பப்படுகின்றன. துணை வட்டாட்சியர் பணியிடங்கள் முழுக்க முழுக்க மாறுதல் மூலமான நியமனம் வழியாக நிரப்பப்படுகின்றன. உதவியாளர் நிலையில் இருப்பவர்கள், துணை வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர் மற்றும் சார் பதிவாளர்களாக நியமிக்கப்படும்போது, அவர்களுக்குக் கூடுதல் ஊதியம், கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். இந்த நடைமுறையில், இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுவந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இத்துறைகளின் மூத்த அதிகாரிகள் சிலர், உதவியாளர்கள் அடுத்த நிலை பதவியில் நியமிக்கப்படுவதைப் பதவி உயர்வாகத்தான் பார்க்க வேண்டும். பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என்பதால், இப்பணிகளுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று கூறினார்கள்.

இதே காரணத்தை முன்வைத்து அவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஒரு நிலையில் உள்ள அதிகாரிகள், அதிக ஊதியமும், கூடுதல் பொறுப்பும் கொண்ட அடுத்த நிலை  பணிகளில் நியமிக்கப்பட்டால், அதைப் பதவி உயர்வாகவே கருத வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதனால், இத்தகைய பணிகளுக்கு மாறுதல் மூலம் நியமனம் செய்வதில் வழங்கப்பட்டுவந்த இட ஒதுக்கீடு, கடந்த 2005-ம் ஆண்டு ரத்துசெய்யப்பட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல்செய்த மேல்முறையீட்டில்தான் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்மூலம் வட்டாட்சியர், உதவி வணிக வரி அலுவலர் மற்றும் சார் பதிவாளர் பணி நியமனங்களில், கடந்த 14 ஆண்டுகளாக  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டுவந்த அநீதி களையப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, வட்டாட்சியர்கள், உதவி வணிக வரி அலுவலர்கள் நியமனத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுத் துறையிலும் இத்தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று அத்துறையை நிர்வகிக்கும் வணிக வரித்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ள நிலையிலும், அத்தீர்ப்பு இன்று வரை பதிவுத் துறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பதிவுத் துறை பணியாளர் நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, இதுகுறித்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட  இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி புதிய பணி மூப்பு வழங்கப்பட வேண்டும். அதனடிப்படையில்தான் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த நடைமுறை எதையும் பின்பற்றாமல், 2016-17-ம் ஆண்டுக்கான மாவட்ட பதிவாளர் பதவி உயர்வு பட்டியல் கடந்த 12.02.2019 அன்று வெளியாகியுள்ளது. 

அதுமட்டுமின்றி, 2017-18, 2018-19-ம் ஆண்டுகளுக்காக மாவட்ட பதிவாளர் பணியிடங்கள், 2018-19 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை சார் பதிவாளர் பணியிடங்கள் ஆகியவற்றுக்கான பதவி உயர்வுப் பட்டியலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் தயாரிக்கப்பட்டு, வெளியிடத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது நடந்தால், மிகப்பெரிய சமூக அநீதியாக அமைந்துவிடும்.

இரண்டாம் நிலை சார் பதிவாளர் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 14 ஆண்டுகளாக இடஒதுக்கீடு வழங்கப்படாத நிலையில், மீண்டும் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால், அதைவிட பெரிய சமூக அநீதி இருக்க முடியாது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பால் இழைக்கப்பட்ட அநீதியை, தமிழக அரசுதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து துடைத்தது. அதன் பயன், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக்  கிடைப்பதை உறுதி செய்யாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் போராடிப் பெற்ற தீர்ப்பு பயனற்றதாகிவிடும்.

எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, பதிவுத் துறையில் கடந்த காலங்களில் செய்யப்பட்ட பணியாளர் நியமனங்களுக்கு முன்தேதியிட்டு இட ஒதுக்கீடு வழங்கி, அதனடிப்படையில், அனைத்து ஊழியர்களுக்கும் பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் மட்டுமே மாவட்ட பதிவாளர் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள சார் பதிவாளர் பணிகளுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். மேலும், பதிவுத் துறை தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், சமூக நீதியில் அக்கறைகொண்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவரை அந்தப் பதவியில் அரசு நியமிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு