Published:Updated:

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 5

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 5
பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 5

-எம்.கார்த்தி


படங்கள்: 
ஆர்.எம்.முத்துராஜ்


சிவகாசி பட்டாசு ஆலையில் நடக்கும் விதிமுறை மீறல்களை தடுத்து உயிர் பலிகளை தடுக்கவே முடியாதா? பதில் சொல்ல வேண்டிய அதிகாரிகள் என்னதான் செய் கிறார்கள்? நிர்வாக ரீதியாக அவர்களுக்கு என்ன பிரச்னை என்று பார்ப்போம்...

 
750 பட்டாசு ஆலைகளை கண்காணிக்க ஒரே ஒரு தாசில்தார்


நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே சிவகாசியில் முதன் முதலாக தீப்பெட்டி தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. தீப்பெட்டி தொழில் வேகமாக வளரத்தொடங்கியது. பிறகு நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு லைசென்ஸ் வழங்குவது, அவற்றை கண்காணிப்பதற்கு என்று சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு என்று ஒரு தனித்தாசில்தார் மற்றும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் என்ற இரண்டு பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு, இப்போதுவரை அது நீடிக்கிறது. தீப்பெட்டி தொழிலுக்கு பிறகு சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 5

பட்டாசு ஆலைகளை கண்காணிக்கும் பொறுப்பும் தீப்பெட்டி தொழிற்சாலை தாசில்தார் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பட்டாசு ஆலைகளின் எண்ணிக்கை, இப்போது 750 யை தாண்டி விட்டது. ஒரே ஒரு தாசில்தார் மற்றும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ஆகியோரால் அத்தனை தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகளை கண்காணிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

வாகனம் இல்லாத தாசில்தார்

தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகளை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை தாசில்தாருக்கு புதிய பட்டாசு ஆலைகளுக்கு லைசென்ஸ் வழங்கு வதற்கு முன்பு ஆலையை ஆய்வு செய்வது, விதிமுறை மீறல்கள் நடக்கிறதா என்பதை பட்டாசு ஆலைகளுக்கு நேரடியாக சென்று கவனிக்கும் பொறுப்பு உள்ளது. ஆனால், இந்த தாசில்தாருக்கு போக்குவரத்துக்கு ஒரு மொபெட் கூட அலுவலகத்தில் இல்லை. சொந்தமாக அவர் வைத்துள்ள டூ வீலர்தான் அவருக்கு துணை. பிறகு எப்படி இவ்வளவு பட்டாசு ஆலைகளை அவர் கண்காணித்து லைசென்ஸ் கொடுத்தார், விதிமுறை மீறல்களை கண்டுப்பிடித்தார் என்பது எல்லாம் அவருக்கே வெளிச்சம்.

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 5

கடந்த ஆண்டு முதலிப்பட்டியில் 40 பேர் பலியான சம்பவத்தை பார்வையிட வந்த வருவாய்த்துறை உயர் அதிகாரிகள், பட்டாசு விபத்து பற்றி ஆய்வு செய்தபோதுதான் ஜீப்பே இல்லாமல் தீப்பெட்டி தொழிற்சாலை தாசில்தார் பணியாற்றிய லட்சணம் வெளிச்சத்துக்கு வந்தது. அப்புறம்தான், உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இவருக்கு புது ஜீப் வழங்கப்பட்டது.

 
200 பட்டாசு ஆலைகளுக்கு ஒரு தனித்தாசில்தார்

சிவகாசி பட்டாசு ஆலைகளின் வெடி விபத்தில் கொத்துக் கொத்தாய் மனித உயிர்கள் பலியாவதை கண்டு

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 5

மனம் கலங்கிப்போன, இதற்கு முந்தைய விருதுநகர் கலெக்டர் பாலாஜி, விபத்துக்களை தடுப்பது தொடர்பாக அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அதில்,"பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய சிவகாசியில் ஒரு தனி தாசில்தார் மட்டுமே இருக்கிறார். ஆண்டு தோறும் பட்டாசு ஆலைகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வசதியாக 200 ஆலைகளுக்கு ஒரு தனி தாசில்தார் என்று 3 தாசில்தார்கள் 100 தொழிற்சாலைக்கு ஒரு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும். அப்போதுதான் பட்டாசு தொழிற் சாலைகளை கண்காணித்து ஒழுங்குப்படுத்த முடியும்" என்று கூறியிருந்தார். அரசுக்கு அனுப்பிய அந்த அறிக்கை, இப்போது உயர் அதிகாரிகளின் மேஜையின் ஓரத்தில் ' பாய் போட்டு படுத்து தூங்கிக்கொண்டிருப்பதாக தகவல்!

பட்டாசு தொழில் குறித்த தீவிர ஆய்வு தேவை

கலெக்டர் பாலாஜி பட்டாசு விபத்து பற்றி அரசுக்கு அனுப்பிய அந்த முக்கியமான எச்சரிக்கை ரிப்போர்ட்டில்,"பட்டாசு தொழிலில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் புழங்குகிறது. அரசுக்கும் வணிகவரித்துறை மூலம் ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரை வருமானம் வருகிறது. பட்டாசு ஆலைக்கு லைசென்ஸ் வழங்குவது, கண்காணிப்பது போன்ற முக்கியமான பணிகளில் வருவாய்த்துறை மட்டுமின்றி வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை, தொழிலாளர் நலத்துறை, தீயணைப்புத்துறை, போலீஸ் துறை, சுகாதாரத்துறை என்று பல துறைகள் சம்மந்தப்பட்டிருக்கின்றன.

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 5

இந்த துறைகளின் மத்தியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லை. எனவே பட்டாசு ஆலைகளில் விபத்தை தடுக்க வருவாய்த்துறை மட்டுமின்றி பிற துறை அலுவலர்களை கொண்டு பட்டாசு தொழில் மற்றும் அதன் விபத்துக்கள் குறித்து தீவிர ஆய்வு நடத்தி இந்த தொழிலை வரைமுறைப்படுத்த வேண்டும். தீவிர ஆய்வு பணியை முடிக்க சில ஆண்டுகள் ஆகலாம். ஆனாலும், ஆய்வு நடத்தி இஷ்டம் போல் இயங்கும் இந்த பட்டாசு தொழிலை வரைமுறைப்படுத்தினால் மட்டுமே அப்பாவி தொழிலாளர்களின் உயிர் இழப்புக்களை தடுக்க முடியும். இல்லையென்றால் பட்டாசு தொழிலில் விபத்துக்களையும், உயிர் இழப்புக்களையும் தவிர்க்க முடியாது" என்று மேலும் கூறியிருந்தார். ஆனால் அந்த ரிப்போர்ட்.டை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறையினருக்கும் இதே நிலைமைதான்

மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் 80 ஆலைகள் மட்டுமே வருவாய்த்துறையின் மாவட்ட வருவாய் அலுவலரின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. மீதமுள்ளவை நாக்பூரில் உள்ள மத்திய அரசின் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையின் கண்காணிப்பில் உள்ளது. இந்த அலுவலகத்தின் துணை தலைமை வெடி பொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் சிவகாசியில் இயங்கி வருகிறது. துணை தலைமை கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் 10 அலுவலர்கள் மட்டுமே இங்கே பணியாற்றி 600 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை கண்காணித்து வருகின்றனர்."போதிய அலுவலர்கள் இல்லாததால் எங்களால் முழுமையாக பட்டாசு ஆலைகளை கண்காணிக்க முடிவதில்லை" என்று உண்மையை ஒத்துக்கொள்கின்றனர் இந்த அதிகாரிகள்.

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 5

பட்டாசு விபத்து: இபிகோ 304

பட்டாசு தொழில் தொடங்கிய காலம் முதல் இப்போது வரை விபத்து ஏற்பட்டு எத்தனை பேர் உயிரை விட்டாலும் போலீஸ் தரப்பில் இபிகோ 304 விபத்து என்று வழக்கு பதிவு செய்து பட்டாசு ஆலையின் போர்மென், மேனேஜர் ஆகியோரை கைது செய்வார்கள். வழக்கம் போல் பட்டாசு உரிமையாளர்கள் எதையாவது கொடுத்து தப்பி விடுவார்கள்.

இப்போதைய நவீன காலத்தில் ஒரு பெரிய கட்டடம் கட்டும் பணி நடக்கும் போது திடீரென்று சரிந்து விழுந்தால் கட்டடப்பணியை மேற்கொள்ளும் நிறுவனத்தின் உரிமையாளர், இன்ஜினியர் ஆகியோர் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத வழக்குகளின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். அதுபோல் ஒரு சட்டத்திருத்தம் பட்டாசு தொழிலுக்கும் கொண்டு வரப்பட வேண்டும். குறிப்பாக கொலை முயற்சி மற்றும் உயிர் இழப்புக்கு காரணமாக இருத்தல் போன்ற ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தால்தான். ஜெயிலுக்கு போக வேண்டிய நிலைமை வந்து விடுமோ என்ற பயத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் போர்மென்கள் விபத்து ஏற்படாத வகையில் ஜாக்கிரதையாக பட்டாசு தயாரிக்க முனைப்பு காட்டுவார்கள்.

 
உயிர் இழப்புகளின் எண்ணிக்கை பட்டியல் கூட இல்லை

பட்டாசு ஆலைகளில் இதுவரை நடந்த விபத்துக்கள் மற்றும் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை குறித்த பட்டியல், இந்த ஆலைகளுக்கு லைசென்ஸ் வழங்கும் வருவாய்த்துறையினரிடமோ, மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினரிடமோ இல்லை. வருவாய்த்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் விபத்துக்களில் பலியானவர்கள் எண்ணிக்கை மட்டுமே இருக்கிறது. இதோ கடந்த 10 ஆண்டுகளில் 178 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துக்கள் ஏற்பட்டு இதில் 200 பேருக்கு மேல் பலியாகியிருக்கின்றனர். 171 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்கிறது அந்த புள்ளி விபரம். மனித உயிர்கள் மீது இவர்கள் காட்டும் அக்கறைக்கு இது ஒன்றே நல்ல உதாரணம்.

 
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது

பட்டாசு ஆலைகள் விபத்து தொடர்பாக கலெக்டர் ஹரிகரனிடம் பேசினோம். ''ஃபேன்சி ரகங்கள்

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 5

தயாரிக்கும்போது என்ன மாதிரியான கெமிக்கல்கள் பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கிறது. ஆனால் கொள்ளை லாபத்துக்கு ஆசைப்பட்டு குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக தடை செய்யப்பட்ட செந்தூரம் என்ற வேதியியல் பொருளை பயன்படுத்துகின்றனர். அதுபோல் வானத்தில் அதிக உயரத்தில் போய் வெடிக்க வேண்டும் என்பதற்காக சி.என். காட்டன் ஆயில் என்ற தடை செய்யப்பட்ட கெமிக்கலை கலக்கின்றனர்.

வருவாய்த்துறை மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினரிடம் லைசென்ஸ் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். ஆனால், பட்டாசு ஆலையில் தினமும் என்ன கெமிக்கல் கலக்குகிறார்கள், அனுமதி பெற்ற வெடிகளை மட்டுமே தயாரிக்கிறார்களா என்பதை பக்கத்தில் இருந்து யாரும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் மாவட்டத்தில் 750 ற்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன. தினமும் அவற்றை கண்காணிப்பதற்கு போதிய அலுவலர்கள் இல்லை.

பட்டாசு தொழிலை செய்ய அரசு லைசென்ஸ் கொடுக்கிறது. நம்மை நம்பி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தொழிலாளர்கள் உயிர் முக்கியம் என்று நினைத்து ஒவ்வொரு ஆலை அதிபர்களும் மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட கெமிக்கலை பயன்படுத்தாமல் இருப்பதும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறாமல் இருப்பதும் ஆலை அதிபர்களின் கையில் தான் இருக்கிறது. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று சொல்லுவார்கள். அதுபோல்தான் பட்டாசு தொழிலும்" என்றார்.

 பிணங்களை அடகு வைத்து பணம் சம்பாதிக்க வேண்டுமா?  இனி, பட்டாசு ஆலை அதிபர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

வீதிக்கு வந்த வீரபாண்டியார் வீட்டுச் சண்டை: புதிய தொடர் நாளை...