Election bannerElection banner
Published:Updated:

`கூட்டணிக்குள் தே.மு.தி.க வந்தாக வேண்டும்!’ - அமித் ஷா உத்தரவால் வேகமெடுத்த அ.தி.மு.க

`கூட்டணிக்குள் தே.மு.தி.க வந்தாக வேண்டும்!’ - அமித் ஷா உத்தரவால் வேகமெடுத்த அ.தி.மு.க
`கூட்டணிக்குள் தே.மு.தி.க வந்தாக வேண்டும்!’ - அமித் ஷா உத்தரவால் வேகமெடுத்த அ.தி.மு.க

மத்திய உளவுத்துறையின் ரிப்போர்ட் அ.தி.மு.க-வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `அவர்களை விட்டுவிட வேண்டாம். அது எதிர்கட்சிகளுக்கு சாதமாகிவிடும்’ என்ற பா.ஜ.கவின் உத்தரவு மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்த தூண்டியுள்ளது.

மார்ச் முதல் வாரத்துக்குள் மக்களவைத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கயிருக்கிறது தேர்தல் ஆணையம். இரு பெரும் தலைவர்கள் இல்லாமல் தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், தங்கள் வலிமையையும் எதிர்காலத்துக்கான தங்கள் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள மாநிலக் கட்சிகள் முயன்று வருகின்றன. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, துப்பாக்கிச்சூடு, கஜாபுயல் நிவாரணம் உள்ளிட்ட பிரச்னைகளால் மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. இதனிடையே மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையின் மத்திய அரசு கொண்டு வந்த 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பேச்சு, மாநில மக்களின் கவனத்தை ஈர்த்தது. மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை அ.தி.மு.க.  எடுக்கிறதா உள்ளிட்ட கேள்விகள் எழுந்தன. ஒரு கட்டத்தில் அ.தி.மு.க-வும் அதையே விரும்பியது. காரணம் மத்திய அரசின் மீதான தமிழக மக்களின் அதிருப்தி, இஸ்லாமியர்களின் வாக்குகளை இழக்கும் அபாயம் உள்ளிட்டவற்றால் கூட்டணி அமைப்பதில் தயக்கம் காட்டியது.

ஓ.பி.எஸ்ஸின் 11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு, குட்கா உள்ளிட்ட வழக்குகள் காரணமாகக் கூட்டணிக்கு தலையசைத்தது அ.தி.மு.க. கடந்த 19-ம் தேதி இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகின. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு 7 தொகுதிகள், பா.ஜ.க-வுக்கு 5 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டன. இவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்கவே அடுத்த நாளே, காங்கிரஸுடனான கூட்டணி முடிவை அறிவித்தார் ஸ்டாலின். இப்படி போட்டிப்போட்டு தேர்தலுக்குத் தயாராகும் இரு கட்சிகளும் தே.மு.தி.க-வை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருகின்றனர். `அவர்களையும் நம்முடன் இணைத்துவிட வேண்டியதுதானே’ என்று பா.ஜ.க கேட்க, `பா.ம.க-வுக்கு இணையான சீட்டுகள் வேண்டும் என்பதால் கூட்டணியில் இழுபறி நிலவுகிறது’ என விளக்கமளித்தது அ.தி.மு.க. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க-வின் வாக்கு சதவிகிதம் சரிந்ததுதான், இழுபறிக்கு முக்கிய காரணம். இதை, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறது தி.மு.க. அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் ஈடேற வழியில்லை என்கின்றனர் தி.மு.க-வினர்.

``தே.மு.தி.க-வை கூட்டணிக்குள் கொண்டுவந்தால் வடமாவட்டங்களில் பா.ம.க-வுக்கு டஃப் கொடுக்க ஏதுவாக இருக்கும் என எண்ணினார் ஸ்டாலின். ஆனால், அவர்களின் பிடிவாதத்தால் தற்போது பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே காங்கிரஸுக்கு 10 சீட்டுகள், முஸ்லிம் லீக் 1 சீட்டு என ஒதுக்கப்பட்டுவிட்டது. ம.தி.மு.க 2 சீட்டுகளைக் கேட்கிறது. வி.சி.கவுக்கு 1, இரண்டு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா 1, போக தி.மு.வுக்கு 24 மட்டுமே மிஞ்சும். கூட்டணிகளுக்கு கிள்ளிக் கொடுத்து, பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற தி.மு.க எண்ணியது. தே.மு.தி.கவை உள்ளே இழுக்க குறைந்தது 4 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும். இதற்காக காங்கிரஸிடம் இரண்டு தொகுதிகள் விட்டுத்தர தி.மு.க சார்பில் பேசப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மறுத்துவிட்டது. ப.சிதம்பரம், ‘ஏற்கனவே தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில்தான் நிற்கிறோம். அதிலும் இரண்டைக் குறைக்க முடியாது. ஏற்கெனவே தி.மு.க தலைமையின் மூவ் காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிருப்தியளித்திருக்கிறது. இப்போது சீட் குறைப்பு என்றால் அது மேலும் சிக்கலாகிவிடும்’ என்று சொல்லிவிட்டார். தே.மு,தி.க தரப்பில் 4 சீட்டுகள் வேண்டும். தேர்தலுக்கு நிதி வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்தனர். இதுதான் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள சுணக்கத்துக்குக் காரணம்” என்கின்றனர்.


`தமிழ்நாட்டில் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க கூட்டணி அமைந்தால் 25 சீட் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது’ என்று மத்திய உளவுத்துறையான ஐபி அமித் ஷாவுக்கு ஒரு ரிப்போர் அனுப்பியிருக்கிறது. இதையறிந்த அமித் ஷா, உடனே அ.தி.மு.கவை தொடர்புகொண்டு, `தே.மு.தி.க நம்ம கூட்டணியில வர வைக்கிற வழியப் பாருங்க. அப்படி விட்டுட்டீங்கனா எதிர்க்கட்சிகளுக்கு அது சாதகமாயிடும்” என்று வலியுறுத்தியுள்ளார். தே.மு.தி.க இல்லாவிட்டால் பெரும் இழப்பில்லை என்று எண்ணியிருந்த அ.தி.மு.கவுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இறங்க அக்கட்சி முடிவெடுத்துள்ளது. `` நான்கு மக்களவை தொகுதிகள் மற்றும் 100 கோடி தேர்தல் நிதி” என்ற நிலைப்பாட்டுடன் தே.மு.தி-கவை அ.தி.மு.க. அணுக உள்ளது.  தி.மு.கவின் கதவு மூடப்பட்டுள்ள நிலையில், இதை தனக்குச் சாதகமாய் பயன்படுத்திக்கொண்ட அ.தி.மு.க, தங்கள் கூட்டணிக்குள் தே.மு.க.தி.க-வை கொண்டுவர தயாராகிவிட்டது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு