Published:Updated:

``நோ ஆக்‌ஷன்... ஒன்லி ரீடிங்..!" - டல்லடித்த எடப்பாடியின் ஈரோடு விசிட்

``நோ ஆக்‌ஷன்... ஒன்லி ரீடிங்..!" - டல்லடித்த எடப்பாடியின் ஈரோடு விசிட்
``நோ ஆக்‌ஷன்... ஒன்லி ரீடிங்..!" - டல்லடித்த எடப்பாடியின் ஈரோடு விசிட்

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே புதிய மேம்பாலம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று (பிப் - 28) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தொடங்கிவைத்து, பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சர் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சிக்காக, முதலில் ஈரோடு சி.எஸ்.ஐ பள்ளி மைதானத்தில்தான் மேடை போடப்பட்டது. கோர்ட் வழக்குகளில் சி.எஸ்.ஐ மைதாதனம் இருப்பதைக் காரணம் காட்டி, ஈரோடு வ.உ.சி பூங்காவுக்கு நிகழ்ச்சியை மாற்றினர். வ.உ.சி பூங்காவில் மேடை அமைக்கும் பணி ஏறக்குறைய முடிவடையவிருந்த சூழ்நிலையில், சென்டிமென்ட் அது இது என சாக்கு சொல்லி நிகழ்ச்சியை அங்கிருந்தும் மாற்றம் செய்தனர். இறுதியாக, ஈரோடு பிரப் ரோடு வணிக வரித்துறை அலுவலகத்திற்கு அருகே, சாலையின் குறுக்கே நிகழ்ச்சிக்கான மேடையை அமைத்தனர். முதலமைச்சரின் வருகையையொட்டி எக்கச்சக்கமான பேனர்கள், கொடிகள், வளைவு அலங்காரங்கள் என ஈரோடு நகர் விழாக்கோலம் பூண்டது. முதல்வரின் நிகழ்ச்சி மாலை நடைபெற இருந்தபோதிலும், காலையிலிருந்தே பல சாலை வழிகள் அடைக்கப்பட்டன. நிகழ்ச்சி நடைபெறவிருந்த பகுதிக்கு அருகே இருந்த பள்ளிக்கூடங்களுக்கு அரைநாள் விடுமுறையும் அளிக்கப்பட்டது. முதலமைச்சர் வருகைக்காக நடைபெற்ற இந்த ஏற்பாடுகளைக் கண்டு பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

முதலமைச்சர் நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் பலமாகச் செய்யப்பட்டிருந்தபோதிலும், கூட்டத்தைக் கூட்டுவதில் ர.ர-க்கள் கோட்டை விட்டிருந்தனர். மேடைக்கு முதலமைச்சர் எடப்பாடி வந்த கொஞ்ச நேரத்திலேயே, கூட்டத்திற்கு அழைத்துவரப்பட்டவர்கள் கலையத் தொடங்கினர். இதனைக் கவனித்த எடப்பாடி பழனிசாமி, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான கே.வி.ராமலிங்கத்தை அழைத்து, கூட்டத்தைக் கட்டுப்படுத்தி உட்காரவைக்க உத்தரவிட்டார்.

பின்னர் மைக்பிடித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் அதிரடியான ஏதாவது ஒரு செய்தியோ, உற்சாகம் கொடுக்கும் பேச்சுகளோ இருக்கும் எனப் பத்திரிகையாளர்கள் உட்பட பலரும் நினைத்திருந்தனர். ஆனால் எடப்பாடியாரோ, அம்மா செய்த சாதனைகளில் ஆரம்பித்து, அவர் செய்த சாதனைகள் என ஒவ்வொன்றாக பட்டியலிட்டுப் பேசினார். இதுபோதாதென்று, ஈரோடு மாவட்டத்திற்கு என செய்த திட்டங்களைப் பட்டியலிட்டு, புள்ளி விவரங்களுடன் எடப்பாடியார் பேச, கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நடையைக்கட்டியது. நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளைப் பற்றிய விமர்சனமோ, தேர்தலைப் பற்றிய பிரச்சாரமோ எதுவுமே இல்லை. வெறும் காகிதத்தில் எழுதிக்கொடுத்த வசனங்களை, எந்தவித மாடுலேஷனிலும் ஏற்றி இறக்காமல், பார்த்து அப்படியே படித்தார். எடப்பாடியாரின் பேச்சால் மேடையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அதிகாரிகள் போன்றவர்களே நெளிய ஆரம்பித்தனர்.

‘புதிதாகத் திறக்கப்பட்ட மேம்பாலத்திற்கு டாக்டர் ஜெ.ஜெ.புரட்சித்தலைவி அம்மா எனப் பெயர் சூட்டப்படும்’ என்று எடப்பாடியார் சொன்னதற்கு மட்டும் கூட்டத்தில் கொஞ்சம் கைதட்டல். மற்றபடி, எடப்பாடியாரின் ஈரோடு வருகையில் எந்தவித சுவாரஸ்யமும் இல்லை. காலையில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, ஈரோடு வந்த எடப்பாடியார் டயர்ட் ஆனாரோ இல்லையோ, எடப்பாடியாரின் பேச்சு எல்லோரையும் டயர்ட் ஆக்கிவிட்டது.