Published:Updated:

இரட்டை இலைத் தீர்ப்பு... என்ன சொல்கிறார்கள் ஓ.பி.எஸ்., தங்க தமிழ்ச்செல்வன்?

"சின்னத்தை மீட்க வேண்டும் என்றுதான் நாங்கள் போராடினோம். எங்கள் பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் சின்னம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி, உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் வழங்கினோம்."

இரட்டை இலைத் தீர்ப்பு... என்ன சொல்கிறார்கள் ஓ.பி.எஸ்., தங்க தமிழ்ச்செல்வன்?
இரட்டை இலைத் தீர்ப்பு... என்ன சொல்கிறார்கள் ஓ.பி.எஸ்., தங்க தமிழ்ச்செல்வன்?

நாடாளுமன்றத் தேர்தல் எப்போது என்பது குறித்த அறிவிப்பு அடுத்த ஒருவாரத்திற்குள் வெளியாகவிருக்கும் நிலையில், இரட்டைஇலைச் சின்னம் தொடர்பான தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு காலை முதலே தமிழகம் முழுவதும் தொற்றிக் கொண்டது. செய்திச் சேனல்களும், இன்று தீர்ப்பு, இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு என்பன போன்ற பிரேக்கிங் நியூஸ்களை வெளியிட்டுக் கொண்டே இருந்தன. என்றாலும், அதுதொடர்பான தீர்ப்பு, தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க-வுக்கு சாதகமாகவே வந்து, ஆட்சியாளர்களை நிம்மதியடைய வைத்துள்ளது. 

`எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு இரட்டை இலைச் சின்னத்தை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கிப் பிறப்பித்த உத்தரவு செல்லும்' என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க கொள்கைபரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் தெரிவித்த கருத்துகள் என்ன என்று பார்ப்போம்.

சாமான்ய தொண்டனுக்குக் கிடைத்த வெற்றி:

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக, டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் லெட்சுமிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ``இரட்டை இலைச் சின்னம் நமக்குக் கிடைத்தது, அ.தி.மு.க-வின் சாமான்ய தொண்டனுக்குக் கிடைத்த வெற்றி. நாடாளுமன்றத்  தேர்தலில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி பற்றி ஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான மெகா கூட்டணிதான் வெற்றிபெறும். மேலும் தேர்தல் பிரசாரத்தின்போது கொள்கை ரீதியாகவே பிரசாரத்தை முன்னெடுப்போம். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அணைப்பகுதியில் வளர்ந்த மரங்களை அகற்றுவதற்குக் கேரள அரசு அனுமதி தராமல் உள்ளது. மாநில அரசின் சாதனைகளைக் கூறி, தேர்தலில் வாக்குக் கேட்போம். தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தின் இரட்டை இலைச் சின்னத்திற்கான தீர்ப்பு கிடைத்துள்ளது. எனவே, அ.தி.மு.க விலிருந்து பிரிந்து சென்ற பொறுப்பாளர்கள் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும்” என அழைப்பு விடுத்தார். முன்னதாக, போடி ஒன்றிய அ.ம.மு.க செயலாளர் முருகவேல், அ.ம.மு.க எம்.ஜி.ஆர் மன்ற மாவட்டச் செயலாளர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர், பெரியகுளத்தில் ஓ.பி.எஸ் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர். 

நாங்கள் எதிர்பார்த்த தீர்ப்புதான்  

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அ.தி.மு.க நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஆண்டிப்பட்டி வந்திருந்த அ.ம.மு.க.-வைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், ``டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, நாங்கள் எதிர்பார்த்ததுதான்" என்றார். இது தொடர்பாக நம்மிடம் மேலும் பேசிய அவர், ``நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அதேநேரத்தில் மக்கள் மன்றத்தில் அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும். எங்களைப் பொறுத்தவரை எங்களுக்குச் சின்னம் முக்கியமில்லை. ஏற்கெனவே, நாங்கள் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்றோம். இரட்டை இலைச் சின்னத்துடன் போட்டியிட்ட அ.தி.மு.க டெபாசிட் இழக்கும் நிலை ஏற்பட்டது.

சின்னத்தை மீட்க வேண்டும் என்றுதான் நாங்கள் போராடினோம். எங்கள் பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் சின்னம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி, உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் வழங்கினோம். ஆனால், எங்கள் ஆவணங்களை உரிய முறையில் விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. என்றாலும் இந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் எந்தப் பலனும் கிடையாது. தேர்தலில் மக்கள் எங்களுக்கு அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பின்னர் முடிவு செய்வோம்” என்றார்.