Published:Updated:

கதவை சாத்திய தி.மு.க; பேரத்தைக் குறைத்த எடப்பாடி! - அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க நிலை என்ன?

``பல ஊர்களில் வேலை செய்வதற்கு ஆட்களே இல்லை என்ற நிலைதான் உள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்றால், தே.மு.தி.க என்ற கட்சியின் உள்கட்டமைப்பு சிதைந்திருந்தாலும், விஜயகாந்துக்கான நெகட்டிவ் வாக்குகள் என்பது இல்லை.’’

கதவை சாத்திய தி.மு.க; பேரத்தைக் குறைத்த எடப்பாடி! - அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க நிலை என்ன?
கதவை சாத்திய தி.மு.க; பேரத்தைக் குறைத்த எடப்பாடி! - அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க நிலை என்ன?

தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கான கதவுகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க-வில் கொடுக்கும் சீட்டுகளை வாங்கிக் கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் பிரேமலதா. `7 சீட்டுகளை எதிர்பார்த்திருந்த நிலையில், 4 அல்லது 5 சீட்டுகளை மட்டுமே தே.மு.தி.க-வுக்கு ஒதுக்குவார் எடப்பாடி பழனிசாமி’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

கன்னியாகுமரியில் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைப்பதற்காக வருகை தந்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதேவேளையில், அ.தி.மு.க-வுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை வேகப்படுத்தி வருகின்றனர் தே.மு.தி.க நிர்வாகிகள். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிய காலகட்டத்திலிருந்தே தே.மு.தி.க எந்தப் பக்கம் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. கடந்த பிப்ரவரி 19-ம் தேதி பா.ம.க-வுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டனர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும். அ.தி.மு.க-வுடன் பா.ம.க தரப்பில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது, `பா.ஜ.க-விடம் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்’ எனப் பேட்டி அளித்தார் தே.மு.தி.க துணைச் செயலாளர் சுதீஷ். அவரது பேட்டியை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிருப்தியுடன் கவனித்தனர்.

அதனால்தான் பா.ம.க-வுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான அன்று, தே.மு.தி.க வருவது குறித்த எந்த அக்கறையையும் எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தவில்லை. இதன் காரணமாக, விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கே நேரடியாகச் சென்றார் மத்திய அமைச்சரும் பா.ஜ.க தமிழகப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல். இந்தச் சந்திப்பிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து திருநாவுக்கரசர், ரஜினிகாந்த், ஸ்டாலின் என முக்கியப் பிரமுகர்கள் பலரும் விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றனர். `இந்தச் சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை’ என ஸ்டாலின் சொன்னாலும், `அரசியல் உட்பட அனைத்தும் பேசப்பட்டது’ என விளக்கம் கொடுத்தார் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா. 

`எங்களுடைய டிமாண்டை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி’ என்பதில் பிரேமலதா உறுதியாக இருந்தார். அதற்கேற்ப, ஒரே நேரத்தில் தி.மு.க தரப்பிலும் அ.தி.மு.க தரப்பிலும் பேச்சுவார்த்தையை நடத்தினர். தே.மு.தி.க-வின் இந்தச் செயல்பாடு அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. ஒரு கட்டத்தில், தொகுதிப் பங்கீடு, தேர்தல் செலவு ஆகியவற்றில் தே.மு.தி.க-வுடன் முரண்பட்டது தி.மு.க. `நிதி கொடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. உங்கள் கட்சியின் வலிமைக்கு ஏற்ப 4 இடங்களை ஒதுக்கலாம்’ என தி.மு.க தரப்பில் உறுதியாகக் கூறிவிட்டனர். இதை தே.மு.தி.க நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, தே.மு.தி.க-வுக்கான கதவுகளை அடைத்துவிட்டது தி.மு.க. அதேநேரம், அ.தி.மு.க-வுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் சமரச உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாகத் தே.மு.தி.க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தே.மு.தி.க நிர்வாகிகள், ``எங்களுடைய வலிமையைக் காட்டக்கூடிய தேர்தலாக இதைப் பார்க்கிறோம். அதனால் இரண்டு கட்சிகளுடனும் ஒரேநேரத்தில் பேச்சுவார்த்தையை நடத்தி வந்தோம். பா.ம.க-வைப் போல 7 இடங்களை ஒதுக்க வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகிகளுக்குத் தெரிவித்தோம். `அந்தளவுக்கு ஒதுக்க முடியாது. உங்கள் தேவைக்கேற்ப சீட்டுகளை ஒதுக்குகிறோம்’ என உறுதியாகக் கூறிவிட்டனர். மக்களவைத் தேர்தல் மட்டுமல்லாமல், உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த அணி தொடர வேண்டும் என்பதை விரும்புகிறோம். எனவே, கூட்டணிக்காகச் சில விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அ.தி.மு.க அணியில் 4 இடங்களா... 5 இடங்களா என்பதை இரண்டு கட்சிகளின் தலைவர்களும் விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்’’ என்கின்றனர் உறுதியாக. 

தே.மு.தி.க-வின் நிலைப்பாடு குறித்து அண்ணா அறிவாலய நிர்வாகிகளிடம் பேசினோம். ``தி.மு.க அணிக்குள் வருவதற்கு அவர்கள் வைத்த நிபந்தனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. `4 சீட் ப்ளஸ் ஒரு ராஜ்யசபா சீட்’ என்பதுதான் அவர்களுடைய வேண்டுகோளாக இருந்தது. `4 சீட்டுகளுக்கு மேல் எதுவும் கிடையாது’ என்பதுதான் எங்களின் பதிலாக இருந்தது. ஆனால், களத்தில் தே.மு.தி.க எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் பிரேமலதா கவலைப்படவில்லை. எங்கள் பக்கம் அவர்கள் உறுதியாக வருவது போன்ற தோற்றம் ஏற்பட்டதால், தே.மு.தி.க செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் ஆய்வு ஒன்றை நடத்தினோம். திருவண்ணாமலை, திண்டிவனம், ஆரணி, செய்யாறு, திருத்தணி, அரக்கோணம் எனப் பல பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் அந்தக் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பு சிதைந்துபோய் இருந்தது. பல ஊர்களில் வேலை செய்வதற்கு ஆட்களே இல்லை என்ற நிலைதான் உள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்றால், தே.மு.தி.க என்ற கட்சியின் உள்கட்டமைப்பு சிதைந்திருந்தாலும், விஜயகாந்த்துக்கான நெகட்டிவ் வாக்குகள் என்பது இல்லை. 

`தே.மு.தி.க-வுக்கு ஓட்டு போடுவீர்களா?’ என்ற கேள்விக்கும் அந்த மக்களிடம் இருந்து பதில் இல்லை. இவற்றையெல்லாம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். `விஜயகாந்த்தை சேர்த்துக்கொள்ளவிட்டாலும் அதனால் நஷ்டம் இல்லை. கூட்டணிக்குள் அவரைச் சேர்த்துக்கொள்ள நினைத்தால் 2 அல்லது 3 சீட்டுகளை ஒதுக்கலாம். அவரால் வெற்றி பெறுவோம் என்பதும் நிச்சயம் இல்லை’ எனத் தெரிவித்தோம். கள நிலவரம் இப்படியிருக்கும்போது, பிரேமலதா முன்வைத்த கோரிக்கைகளை தி.மு.க தலைமையால் ஜீரணிக்க முடியவில்லை. அதன் விளைவாக, அறிவாலயத்தின் கதவுகளையும் சாத்திவிட்டனர். தி.மு.க பக்கம் வாய்ப்பில்லாதபோது, அ.தி.மு.க-விலும் அவர்கள் பேரம் பேசும் வாய்ப்பை இழந்துவிட்டார்கள். இந்தத் தேர்தலின் மூலம் பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளின் உண்மை நிலைப்பாட்டை அவ்விரு கட்சிகளின் தொண்டர்களும் உணர்ந்துகொண்டார்கள்’’ என்றார் விரிவாக. 

தே.மு.தி.க வருகை குறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் பேசினோம். ``ஒரு மெகா அணியாக அ.தி.மு.க கூட்டணியைக் காட்ட விரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் பிரேமலதா முன்வைத்த டிமாண்டுகளை அவர் ஏற்றுக்கொண்டார். பா.ம.க-வுக்கு இணையாக 7 சீட்டுகளை சுதீஷ் கேட்டபோது, `உங்கள் கட்சியில் இருந்து போட்டியிடப்போகும் அந்த 7 பேர் யார் எனச் சொல்லுங்கள்?’ என முதல்வர் தரப்பில் எதிர்க்கேள்வி கேட்டனர். இதை சுதீஷ் எதிர்பார்க்கவில்லை. `அதைக் கேப்டன்தான் முடிவு செய்வார்’ எனக் கூறிவிட்டார். `தி.மு.க பக்கம் பேசினாலும், கடைசியில் அ.தி.மு.க பக்கம்தான் வருவார்கள்’ என எடப்பாடி பழனிசாமி உறுதியாக நம்பினார். தி.மு.க ஆப்ஷன் இல்லாததால், அ.தி.மு.க கொடுப்பதை வாங்கிக்கொள்ளும் நிலைக்குத் தே.மு.தி.க வந்துவிட்டது. `இப்படியொரு சூழல் உருவாகட்டும்' என்றுதான் முதல்வரும் காத்திருந்தார். இன்று மாலை அல்லது நாளைக்குள் தே.மு.தி.க இணைவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம்’’ என்கின்றனர் உறுதியாக. 

`விஜயகாந்த்துக்கு ராசியான எண் 5. அந்த அடிப்படையிலேயே தொகுதிப் பங்கீடுகள் அமையும்' என தே.மு.தி.க-வினர் செண்டிமென்ட்டாகப் பேசி வருவதுதான் ஹைலைட்.