Published:Updated:

``சாென்னது பாேலவே என்னைப் பிரிஞ்சு முதல்ல பாேயிட்டார் கலைஞர்!'' கருணாநிதியின் தோழன்

``நான் இப்போ எந்தத் தலைவர்களையும் போய்ப் பார்ப்பதில்லை. புடிக்கலைங்கிறது ஒண்ணு. இன்னொன்னு, எனக்கு இப்போ வயசு 120. கலைஞர் இறந்தப்ப எனக்கு வயசு 95’’ என்று சொல்லி நம்மை கலங்க வைத்தார்.

``சாென்னது பாேலவே என்னைப் பிரிஞ்சு முதல்ல பாேயிட்டார் கலைஞர்!'' கருணாநிதியின் தோழன்
``சாென்னது பாேலவே என்னைப் பிரிஞ்சு முதல்ல பாேயிட்டார் கலைஞர்!'' கருணாநிதியின் தோழன்

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அவருடைய மறைவின் வலி மெள்ள மெள்ள மக்கள் மனதிலிருந்து மறைந்து கொண்டிருக்கிறது. ஆனால், கலைஞர் கருணாநிதியின் மறைவால் உண்டாகும் அல்லலில் சரியாக உணவு உட்கொள்ள முடியாமலும், சரியாகத் தூங்கமுடியாமலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார் கவுண்டம்பட்டி முத்து. `யார் இந்த கவுண்டம்பட்டி முத்து?’ என்கிறீர்களா... "நான் அரசியல் கடலில் மூழ்கி எடுத்த முத்துகள், மதுரை முத்துவும் கவுண்டம்பட்டி முத்துவும். என் வெற்றிக் கிரீடத்தில் இந்த இரண்டு முத்துகளை மட்டும் எப்போதும் பதித்திருப்பேன்" என்று கலைஞரால் உச்சிமுகரப்பட்டவர்தான் கவுண்டம்பட்டி முத்து. இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், கருணாநிதி முதன்முறையாக எம்.எல்.ஏ-வாகச் சட்டமன்றத்தில் 1957-ல் அடியெடுத்து வைக்கக் காரணமாக இருந்த குளித்தலை தொகுதியில், கருணாநிதியின் வெற்றிக்கு அடித்தளமிட்டவர் இந்த முத்துதான்.

``கலைஞர் இறந்தது தெரிந்த நாளிலிருந்து, சரியாகத் தூங்குவதில்லை, சரியாகச் சாப்பிடுவதில்லை. இரவு 1 மணிவரை, கலைஞரோடு தனக்கிருந்த நட்பைப் பற்றியே பேசிக்கிட்டு இருக்கார். நிதானம் இல்லாமல் பேசுகிறார். மறதி அதிகமாயிட்டு. எங்களுக்கு கவலையா இருக்கு’’ என்று தந்தை மீதான கவலையை வெளிப்படுத்துகிறார் முத்துவின் மகன் அறிவழகன்.

கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதிக்குட்பட்டது கவுண்டம்பட்டி. அந்தத் தொகுதியில் நங்கவரம், மேலநங்கவரம், காவக்காரன்பட்டி, சூரியனூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள், இப்போது அவர்களுக்கு உரிமையாக வைத்திருக்கும் 33,412 ஏக்கர் நிலத்தை மீட்க போராட்டம் நடத்தினார் கருணாநிதி. 20,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து, அந்த நிலத்தை என்.ஆர். ராமநாதய்யர், என்.ஆர்.ரங்கநாதய்யர் என்ற இரண்டு பண்ணையார் சகோதர்கள் பிடுங்க முயன்றனர். காமராஜர் போட்ட 60-க்கு 40 என்ற சட்டத்தை மீறி, இருவரும் ஏழைகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கப் பார்த்தனர். 3 வருடங்களாக நடைபெற்ற போராட்டத்தை 1956-ல் தலைமையேற்று நடத்த கருணாநிதியை அனுப்பிவைத்தார் அண்ணா. `உழுதவனுக்கே நிலம் சொந்தம்’ என்று ஏர் பூட்டி உழுததோடு, `நாடு பாதி; நங்கவரம் பாதி’ என்று 10,000 விவசாயிகளோடு நிலத்திலேயே படுத்துப் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டத்தின் வீரியம் காரணமாக ஆறே நாள்களில் மாவட்ட நிர்வாகமும் இரண்டு பண்ணையாளர்களும் பணிந்தனர்.

விவசாயிகளுக்கு நிலம் சொந்தமானது. இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்காக அத்தனை விதத்திலும் கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்தவர் கவுண்டம்பட்டி முத்து. பின்னர், 1957-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் குளித்தலையில் போட்டியிட்ட கருணாநிதி 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல்முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். இதற்கு முத்துவின் உழைப்பே பிரதானமாக இருந்தது. இதைக் கருணாநிதியே பல முறை சொல்லியிருக்கிறார். குளித்தலையில் வென்ற கருணாநிதி, கவுண்டம்பட்டி முத்துவோடு அண்ணாவிடம் ஆசி வாங்கச் சென்றபோது, இரண்டு மாலைகளை வாங்கிவரச் சொல்லி, ஆளுக்கொரு மாலைகளைப் போட்டு `இந்த வெற்றித்தேரை இழுத்த இரண்டு குதிரைகள் நீங்கள்’ என்று புகழாரம் சூட்டினார். அண்ணா, கலைஞர் என்று யார் சொல்லியும் எம்.எல்.ஏ-வாகவோ, அமைச்சராகவோ ஆசைப்படாமல், ஒரு சொக்கத்தங்க தொண்டனாகக் கடைசிவரை காலத்தைக் கழித்து வந்துள்ளார் முத்து. கருணாநிதி இறந்த தகவலைக் கேள்விப்பட்டதும், நிதானம் இல்லாத நிலைக்குப் போய்விட்டார் என்கிறார்கள் அவரின் குடும்பத்தினர். கவுண்டம்பட்டியில் உள்ள வீட்டில் இருந்த முத்துவிடம் பேச்சுக் கொடுத்தோம்.

``எனக்கு டைபாய்டு காய்ச்சல் கடுமையா இருந்துச்சு. அப்போ அண்ணாதான், தமிழக முதலமைச்சர். நான் பிழைப்பேனாங்கிற அளவுக்குக் காய்ச்சல் பாதிப்பு இருந்துச்சு. குளித்தலை வந்த அண்ணாவிடம் என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. என்னைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறினார். நான் ஈனக்குரலில், `டாக்டர்களுக்கு இந்தக் காய்ச்சல் மட்டுப்படாமலா போயிரும். இதற்காக நீங்க அழலாமான்னு கேட்டேன். தொண்டனுக்காக கண்ணீர்விட்ட அந்த அரசியல் பண்பெல்லாம் அண்ணாவோட போயிருச்சு. கலைஞர் எனக்கு அண்ணன். அவரை நடிகர்களும் கட்சிப் புள்ளிகளும் சும்மாவா தலைவரா ஏத்துக்கிட்டாங்க. அவரிடம் இருந்த அபரிமிதமான எழுத்து, பேச்சுத் திறமைகள்தான் அவரைத் தலைவராக ஏத்துக்க வச்சுது. ஆனா, காத்துல பறக்குற கருக்காய்கூட தன்னை நெல் போல நினைச்சுக்கிற மாதிரிதான், இன்னைக்கு அரசியல்ல பலரும் தலைவரா மாறுறாங்க’’ என்று தெளிவாகப் பேசினார். `நன்றாகத்தானே பேசுகிறார்’ என்று நாம் நினைத்தோம். ஆனால், தொடர்ந்து பேசிய அவர், ``நான் இப்போ எந்தத் தலைவர்களையும் போய்ப் பார்ப்பதில்லை. புடிக்கலைங்கிறது ஒண்ணு. இன்னொன்னு, எனக்கு இப்போ வயசு 120. கலைஞர் இறந்தப்ப எனக்கு வயசு 95’’ என்று சொல்லி நம்மை கலங்க வைத்தார்.

சோகத்துடன் நம்மிடம் பேசிய முத்துவின் மகன் அறிவழகன், ``கலைஞர் இறந்த தகவலை அப்பாகிட்ட சொல்ல வேணாம்னுதான் முதல்ல நினச்சோம். ஆனா, மனசு கேக்காம கலைஞரை அடக்கம் பண்ணும்போது, சொல்லிட்டோம். உடனே பதற்றமான அப்பா, டி.வி-யில கருணாநிதியின் இறுதி நிகழ்ச்சியைப் பார்த்தார். அப்படியே பிரமைப் புடிச்சாப்ல ஆயிட்டார். கண்ணுல இருந்து தண்ணி `தரத்தரன்னு’ ஊத்துச்சு. அன்னைக்கு முழுக்க சாப்பிடல. அவருக்கு பிரஷர் அதிகமாகி, நிலைமை சீரியஸாயிடுச்சு. இரண்டு நாள் மருத்துவமனையில வெச்சுருந்து பின்னர் அழைச்சு வந்தோம். அதில் இருந்து சரியா சாப்பிடுறதில்லை. தூக்கம் இல்லை. கலைஞரைப் பத்தியே எந்நேரமும் பிதற்றிக்கிட்டு இருக்கார். கலைஞரை அப்படி தன்னோட உள்ளத்துல வச்சு கொண்டாடிட்டு இருந்தார். அவர் மறைந்ததை ஏத்துக்க முடியாமதான் இத்தனை பிரச்னைகளும். அவர் நல்லா இருந்தப்ப அடிக்கடி எங்ககிட்ட சொல்வார். கலைஞர்கிட்ட அடிக்கடி, `தி.மு.க-வை ராபின்சன் பூங்காவில் அண்ணா ஆரம்பிச்சப்ப அங்க இருந்தவர்களில் நான், நீங்க, அன்பழகன் அண்ணன்னு மூணு பேர் மட்டும்தான் இருக்கோம். இதுல, நான் முன்னாடிப் போய்ச் சேரணும். அதுக்கு நீங்க இரங்கற்பா சொல்லணும்’னு அடிக்கடி சொல்வாராம். ஆனா, கலைஞரோ, `நான்தான் முதல்ல போவேன். நீங்க ரெண்டு பேரும் எனக்கு இரங்கல் தெரிவிக்கணும்’னு சொன்னதும், `அப்படிச் சொல்லக்கூடாது’ன்னு ஓடோடி எங்கப்பா தடுப்பாராம். கலைஞர் விளையாட்டா சொன்னதுபோலவே, மூணு பேர்ல அவரே முதல்ல மறைந்து போனதுதான் எங்கப்பாவை இப்படிப் பாதிச்சுருச்சு. 

தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்கும் பாலமா எங்கப்பாதான் இருந்திருக்கிறார். காமராஜர் ஆட்சியில பக்கத்து ஊர்ல உள்ள பாரி சர்க்கரை ஆலையில் கூலி உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்காக ஊழியர்களுக்கு பிரச்னை ஏற்பட்டிருக்கு. அதை தீர்க்கச் சொல்லி அண்ணா, எங்கப்பா மூலம் காமராஜர்கிட்ட சொல்லச் சொல்லியிருக்கிறார். அதற்கு, காமராஜ் எங்கப்பாகிட்ட, `பாரி உலக அளவில் பெரிய கம்பெனி. அதை நான் நேரடியாகத் தலையிட்டு பிரச்னையைத் தீர்க்க முயன்றால், இந்திய அரசோட நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். அதனால், சென்னை பாரிமுனையில் போராட்டம் நடத்துங்கள். அதை இந்திரா காந்தியிடம் சுட்டிக்காட்டி, சர்க்கரை ஆலை ஊழியர்கள் பிரச்னையை தீர்க்குறேன்'னு ஐடியா சொல்லியிருக்கிறார். எங்கப்பாவும் அப்படி அண்ணா ஆலோசனையோடு போராட்டம் நடத்தியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, காமராஜர் சொன்னது போலவே இந்திரா காந்தியிடம் பேசி, பாரி சர்க்கரை ஆலை பிரச்னையைத் தீர்த்திருக்கிறார். 

அதேபோல், திருச்சியில் இருக்கும் பெல் கம்பெனியை ஆரம்பிப்பதற்கு முன்பு, ஆந்திராவில் உள்ளவங்க அங்கே கொண்டு போக முயன்றிருக்காங்க. காமராஜர் மறுபடியும், அதே போராட்ட ஐடியாவை எங்கப்பாகிட்ட சொன்னாராம். அதைத்தொடர்ந்து, கம்னியூஸ்ட் தோழர்கள், தி.மு.க-வினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைத் திரட்டி திருச்சியில் போராட்டம் நடத்தியிருக்கிறார். அதன் பிறகே, காமராஜரால் இந்திய அரசிடம் பேசி, திருச்சிக்கு பெல் தொழிற்சாலையைக் கொண்டு வர முடிந்திருக்கிறது. அதேபோல், அண்ணா முதலமைச்சராக ஆனபிறகு, அமெரிக்கா சென்று அங்குள்ள விவசாயத் தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொண்டு தமிழ்நாட்டில் செயல்படுத்த நினைத்திருக்கிறார். அதற்காக, எங்கப்பாவை அனுப்ப ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனா, அதைத் தடுத்த எங்கப்பா, நல்லுசாமியைக் காட்டி, `இவரை அனுப்புங்க’னு தனக்கு வந்த வாய்ப்பை மடைமாற்றிவிட்டிருக்கிறார். அப்படி எங்கப்பாவால் அமெரிக்கா போகும் வாய்ப்பை பெற்ற நல்லுசாமிதான், பின்னாளில் அமைச்சரானார். இப்படி, தன் அரசியல் தலைவர்களின் தொடர்பைப் பற்றி எங்ககிட்ட கதைகதையாகப் பேசுவார். மணிக்கணக்கில் அதை ஆச்சர்யமா கேட்போம். ஆனா, இப்போ தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கிறார். நாங்க அவரைப் பார்த்துநொறுங்கிக் கிடக்கிறோம்!’’ என்றார் வேதனையுடன்