Published:Updated:

`அண்ணா, பெரியாருக்கு ஒதுக்கி வைத்த இடம் அது!’ - தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் #VikatanInfographics

ர.முகமது இல்யாஸ்

பெரியாருக்கு என அண்ணா ஒதுக்கிவைத்திருந்த `தி.மு.க தலைவர்’ பதவி தற்போது உங்கள் கைவசம் இருக்கிறது. அதன் பொறுப்பை உணர்ந்தே தாங்கள் இருப்பதை, உங்கள் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

`அண்ணா, பெரியாருக்கு ஒதுக்கி வைத்த இடம் அது!’ - தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் #VikatanInfographics
`அண்ணா, பெரியாருக்கு ஒதுக்கி வைத்த இடம் அது!’ - தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் #VikatanInfographics

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, 

திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தலைவராகப் பொறுப்பேற்ற பின், நீங்கள் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. உங்கள் தந்தை கருணாநிதி இல்லாமல் நீங்கள் கொண்டாடும் முதல் பிறந்தநாளும் இதுதான். தந்தையை, தலைவரை இழந்த வருத்தத்தோடு, சமூகப் பணியின் சுமைகளும் உங்களுக்கு இந்தப் பிறந்தநாளில் கூடியிருக்கிறது. 

90-களில் பிறந்த எங்கள் தலைமுறைக்கு, கருணாநிதி - ஜெயலலிதா ஆகிய இரண்டு அரசியல்வாதிகள் பற்றி மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு இருந்தது. கொள்கைகளை அறியாத, தேர்தல்களை மட்டுமே பிரதானமாகப் பார்த்த எங்கள் தலைமுறைக்கு அரசியல் மீது ஒருவித ஒவ்வாமை இருந்தது. தற்போது சிலரிடையே, அது சற்றுத் தளர்ந்திருந்தாலும், தொடக்க கால திராவிட இயக்கங்களின் தொண்டர் படைகளைப்போல வீரியமாகவோ, கொள்கைப் பிடிப்புடனோ இல்லை. 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்தியாவின் ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்கும் அரசியல் நடவடிக்கை `எமர்ஜென்சி.’ இந்திரா காந்தி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட எமர்ஜென்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, அதன் நேரடிப் பாதிப்புகளை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள். மாநில முதல்வரின் மகன் என்ற பாரபட்சம் இல்லாமல் அன்றைய மத்திய அரசு, உங்கள் மீது அடக்குமுறையை நிகழ்த்தியது. 

தி.மு.க-வின் பொதுக்குழு உறுப்பினராக நீங்கள் தேர்வு செய்யப்பட்ட சில மாதங்களில் அன்றைய மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதுபோல, தி.மு.க தலைவராக இன்றைய மத்திய அரசுக்கு எதிராகத் தற்போது போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்.

தான் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் கருணாநிதி தோல்வியடைந்ததே இல்லை. உங்கள் அரசியல் பயணத்தின் முதல் சில தேர்தல்கள் உங்களுக்குத் தோல்வியை மட்டுமே அளித்தன. மு.க.ஸ்டாலின் என்ற பெயரில், `மு.க’ என்ற இனிஷியல் உங்களுக்குத் தேர்தலில் போட்டியிடப் பயன்பட்டிருக்கலாம்; எனினும் பிற்காலத்தில் நீங்கள் அரசியலில் படிப்படியாகப் பெற்ற வெற்றிகள் என்பது உங்கள் அபார உழைப்பின் பலன் மட்டுமே. அதனால்தான் கருணாநிதி, `ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்றார். `ஓய்வில்லாமல் உழைத்தவர்’ என்று தன் கல்லறையில் எழுதப்பட்டிருப்பவர், உங்களுக்கு அளித்த மாபெரும் அங்கீகாரம் அது.

தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதியின் வாழ்நாள் முழுவதும் `மாநில சுயாட்சி’ என்ற சொல் அரசியல் அரங்குகளில் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டு வந்தது. மாநில முதல்வர்களுக்குக் கொடியேற்றும் உரிமை, ராஜமன்னார் கமிட்டி எனத் தொடர்ந்து மாநில நலன்களுக்காகச் செயல்பட்டு வந்தவர் அவர். தற்போதைய இந்திய அரசியல் சூழலில், மேற்கு வங்காளம், டெல்லி, புதுச்சேரி என மத்திய அரசின் அதிகாரத்தின் கை ஓங்கும் சூழல்களில் கருணாநிதி விட்டுச்சென்ற பாரம்பர்யத்தை நீங்களும் தொடர்ந்திருக்கிறீர்கள். 

எங்களைப் போன்ற சாமானியர்களால் உருவாக்கப்பட்ட கட்சி தி.மு.க. கருணாநிதியின் ஆட்சிக்காலம் முதல் சாமானியர்களின் விமர்சனங்களுக்குத் தி.மு.க-வில் என்றும் இடம் இருந்தது. கருத்துச் சுதந்திரத்திற்கான வெளி, தற்போதைய தி.மு.கவி-னரிடம் குறைந்து வருவது வருத்தத்திற்குரியது.

திராவிட இயக்கங்கள் தோன்றிய காலம் தொட்டே சமூகநீதி, அதன் அடிநாதமாக இயங்கி வருகிறது. இட ஒதுக்கீடு, சமூகநீதி முதலானவை பற்றிய புரிதல் இல்லாதவர்களாகவே பெரும்பாலான இளைஞர்கள் இருக்கிறார்கள். தி.மு.க, தன் கட்சியின் ஆள் பலத்தைக் கூட்டங்களில் வெளிப்படுத்துவதைவிட, இளைஞர்களுக்குச் சமூகநீதி குறித்த அரசியல் விழிப்புஉணர்வைக் கொண்டுசென்றிருக்க வேண்டும்.  

திராவிட இயக்கங்கள் தோன்றிய காலத்தில் 'பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதோர்' என்ற அடிப்படையில் அதிகாரத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் சமூகநீதியைக் கோரின. இந்தப் பிரச்னை தற்போதும் முழுமையாகத் தீர்க்கப்படாமல், தொடர்ந்து வந்தாலும், காலத்தின் போக்கில் இந்தியா 'தலித் - தலித் அல்லாதோர்' என்ற விவாதத்திற்குள் தொண்ணூறுகளுக்குப் பிறகு நுழைந்துவிட்டது. இந்த விவாதத்தைக் கைப்பற்றத் தி.மு.க. தவறிவிட்டது. கட்சியின் உருவாக்கத்திலும், கொள்கைகளிலும் சமூகநீதிக்கான வழிகள் இருந்தும், கட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கான போதிய பிரநிதித்துவம் இல்லாமை, தேர்தலுக்காக சாதிச் சங்கத் தலைவர்களுடன் கூட்டணி, வாக்கு வங்கிக்காக சாதித்தலைவர்களுக்கு மரியாதை எனக் கட்சியின் போக்கு மாறிவருவது தி.மு.க-வின் மிகப்பெரிய பலவீனம்.

பெரியார் போன்ற மூத்தவர்களால் வழிநடத்தப்பட்டு, அண்ணா, கருணாநிதி எனும் அப்போதைய இளைஞர்களால் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சென்று சேர்ந்தது திராவிடக் கொள்கை. ரஃபேல் ஊழல், குட்கா ஊழல் என ஊழல் குற்றச்சாட்டுகளையும், சாதி ஆணவக் கொலைகள், நீட் தேர்வு குறித்த விழிப்புஉணர்வுகளையும் தி.மு.க ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்த்திருக்க முடியும். தெருமுனைக் கூட்டங்களினால் வளர்ந்த உங்கள் கட்சி, மற்ற கட்சிகளைப் போல அறிக்கைகள் மட்டுமே வெளியிடும் கட்சியாகச் சுருங்கியிருக்கக் கூடாது.

சென்னையின் மேயராக இருந்தவர் நீங்கள். சென்னையின் வளர்ச்சிக்குப் பின் உங்களுடைய அபரிமிதமான பங்களிப்பு இருக்கிறது. எனினும், சென்னையின் பூர்வகுடிகளும், சாதாரண அடித்தட்டு மக்களும் நகரத்தில் இருந்து நாள்தோறும் வெளியேற்றப்படுவதை அறிந்திருப்பீர்கள்.

கருணாநிதி மறைவின்போது, மெரினாவில் அவருக்கான உரிய இடத்தைப் பெற சட்டப் போராட்டத்தை நடத்தி, வெற்றிபெற்று, `மகன் தந்தைக்காற்றும் உதவி’ என்பதை நிறைவேற்றி மகிழ்ந்த நீங்கள், மக்கள் தங்கள் இடங்களைவிட்டு விரட்டப்படுவதன் வலியை உணர்ந்து குரல் கொடுக்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக, செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கும், தற்போது கட்சியின் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் இடையேயான மாற்றங்கள் மகிழ்ச்சியை அளிக்கின்றன. தமிழகத்துக்கு ஒரு தேர்ந்த தலைவர் உருவாகிக்கொண்டிருப்பதன் அறிகுறி உங்களிடம் தெரிகிறது. 

பெரியார் தன் தளபதியாக அண்ணாவை வைத்திருந்தார். அண்ணாவுக்குக் கருணாநிதி தளபதியாக இருந்தார். கருணாநிதியின் தளபதியாக நீங்கள் செயல்பட்டிருக்கிறீர்கள்; தொண்டர்களும் உங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும் மக்கள் உங்களை ஏற்பதையும் மறுப்பதையும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு செய்யும். 

பெரியாருக்கு என அண்ணா ஒதுக்கிவைத்திருந்த `தி.மு.க தலைவர்’ பதவி தற்போது உங்கள் கைவசம் இருக்கிறது. அதன் பொறுப்பை உணர்ந்தே தாங்கள் இருப்பதை, உங்கள் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. தேர்தல்கள் மட்டும் வெற்றியல்ல; மாறாத கொள்கைகளாலும், சமத்துவத்தினாலும் மக்கள் மனதில் இடம் பிடிப்பதே பெரியாரின் வெற்றி. அதை நீங்கள் வரும் காலத்தில் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறோம்.

பிறந்தநாள் வாழ்த்துகள் மு.க.ஸ்டாலின் அவர்களே!

இப்படிக்கு,

தமிழ்நாட்டில் வாழும் சாமானிய இளைஞன்.