Published:Updated:

``அபிநந்தனை அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது பாகிஸ்தான்!" - முன்னாள் கர்னல் முருகானந்தம்

"பாகிஸ்தான் ஒருபுறம் 'போர் வேண்டாம்’ எனச் சொல்லிக்கொண்டு, மற்றொருபுறம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றது!”

``அபிநந்தனை அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது பாகிஸ்தான்!" - முன்னாள் கர்னல் முருகானந்தம்
``அபிநந்தனை அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது பாகிஸ்தான்!" - முன்னாள் கர்னல் முருகானந்தம்

பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 44 பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரு நாடுகளுக்கு இடையே அமைதி நிலவுவதற்காக அபிநந்தனை ஒப்படைப்பதாக தெரிவித்தது. இதையடுத்து, அபிநந்தன் இந்தியாவிடம் இன்று ஒப்படைக்கப்பட இருக்கிறார். 

இந்தச் சூழலில் பாகிஸ்தான் பகுதியில் இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதல்கள் குறித்து முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் தியாகராஜனிடம் பேசினோம்.

“புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவ வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். இதற்காக 12 மிராஜ் விமானங்களைக் கொண்டு, மூன்று தீவிரவாதக் குழுக்கள் மீது தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளனர். இந்த ஒட்டுமொத்தத் தாக்குதல்களையும் 21 நிமிடங்களில் நடத்தி முடித்ததுதான், இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய சிறப்பாகும். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது 1,000 கிலோ எடையுள்ள வெடிமருந்துப் பொருள்கள் உபயோகப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் இந்த அதிரடித் தாக்குதலானது, நிச்சயம் தீவிரவாதிகளுக்குப் பேரிழப்பாக அமையும். இந்தத் தாக்குதலில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, பாகிஸ்தான் ராணுவமோ பொதுமக்களோ தாக்கப்படவில்லை என்பதுதான். எல்லையைத் தாண்டி நாம் நடத்திய இந்தத் தாக்குதல் முழுக்க முழுக்க தீவிரவாதத்துக்கு எதிராக நடத்தப்பட்டதுதான்.

எல்.ஓ.சி (Line Of Control) எனப்படும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி, நாம்  பாகிஸ்தானுக்குள் செல்லக் கூடாது, அதேபோல் அவர்களும் இந்திய எல்லைக்குள் வரக்கூடாது என்பதுதான் நடைமுறை. இந்த நிலையில் 1971-ம் ஆண்டுக்குப் பிறகு, இப்போதுதான் முதல் முறையாக இந்திய ராணுவம் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்றுள்ளது. இப்போதும்கூட தீவிரவாதத்தை அழிப்பதற்காகவே இந்திய விமானப் படை இத்தகைய தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. 

தீவிரவாதிகளை இயக்குவது பாகிஸ்தான் ராணுவமும் ஐ.எஸ்.ஐ-யும்தான். தாக்குதலில் பாதிப்படைந்த தீவிரவாத இயக்கங்களை மீண்டும் இந்தியா மீது தாக்குதல் நடத்த மூளைச் சலவைச் செய்வார்கள். ஆகையால்தான், இந்தியாவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் முக்கியப் பகுதியாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளுக்கு மூளைச் சலவைச் செய்து, பயிற்சி அளித்து வந்த ஆறு ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இடம் அழிக்கப்பட்டதுள்ளது. இது நிச்சயம் அந்த அமைப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

நாம் நடத்தி இருப்பது என்பது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கான பதிலடி நடவடிக்கையாகும். பாகிஸ்தானும் இந்தப் பிரச்னையை போர் அளவுக்கு எடுத்துச் செல்ல முனையாது. ஏனெனில், உலக நாடுகளின் ஆதரவை இந்தியா அதிகளவு பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்குப் பெரிய அளவிலான பொருளாதார பலமும் இல்லை. அதேபோல் ராணுவ பலமும் இல்லை ஆகையால், அவர்கள் போர் தொடங்கும் முடிவைக் கட்டாயம் எடுக்க மாட்டார்கள்.

இந்திய ராணுவம் நடத்திய பல போர் உத்திகளை உலக நாடுகள் இப்போதுதான் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கின்றன. இந்த மூன்று முகாம்களை அழித்ததால் தீவிரவாதத்தை முழுமையாக அழித்துவிட்டதாகக் கூற முடியாது. ஆனால், இதைத் தீவிரவாதத்துக்கு எதிரான ஒரு தொடக்கமாகப் பார்க்கலாம். இன்னும் சில வருடங்களில் தீவிரவாதத்தை அடியோடு அழிக்க முடியும்” என்றார்.

அபிநந்தன் கைது குறித்துப் பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் முருகானந்தம்...

“பாகிஸ்தான் என்னை நல்லமுறையில் நடத்துகிறது என அபிநந்தன் பேசுவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இவை எல்லாம் ஒரு யுக்திதான். பாகிஸ்தான் பற்றி நல்லெண்ணத்தை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவதற்காகத்தான் இதுபோன்ற நடைமுறையை அந்த நாட்டின் அரசு கடைப்பிடித்துள்ளது. ஆனால், அபிநந்தன் பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன்னால் அவர் தாக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாகிஸ்தான் ஒருபுறம் 'போர் வேண்டாம்’ எனச் சொல்லிக்கொண்டு, மற்றொருபுறம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றது” என்றார்.