Published:Updated:

`அபிநந்தனுக்காக ஒரு ட்வீட் கூட இல்லை!' - தமிழகத்தில் சில வார்த்தைகள் மட்டுமே உதிர்த்த மோடி

`அபிநந்தனுக்காக ஒரு ட்வீட் கூட இல்லை!' - தமிழகத்தில் சில வார்த்தைகள் மட்டுமே உதிர்த்த மோடி
`அபிநந்தனுக்காக ஒரு ட்வீட் கூட இல்லை!' - தமிழகத்தில் சில வார்த்தைகள் மட்டுமே உதிர்த்த மோடி

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், நாடு திரும்புவது குறித்து இந்திய பிரதமர் மோடி மூன்று நாள்களுக்குப் பிறகு இப்போது தான் பொது வெளியில் பேசி இருக்கிறார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில், இந்திய எல்லையைத் தாண்டி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள பாலாகோட் பகுதியிலுள்ள தீவிரவாத முகாமைக் குறி வைத்து, இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தானின் 2 விமானங்கள், காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் அத்துமீறி நுழைந்து, குண்டு வீசியதாகத் தகவல் வெளியானது. எல்லையில் பதற்றம் அதிகரித்தது. நேற்று முன்தினம் காலை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படையின் F16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. அதை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். வான்வழியில் பதில் தாக்குதல் நடத்தும் முயற்சியின்போது, இந்திய விமானப்படையின் MiG 21 ரக விமானம், பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்துள்ளது. அதில்  இருந்த அபிநந்தன் என்ற இந்திய விமானப்படையின் விங் கமாண்டர், பாகிஸ்தான் ராணுவத்துறையால் சிறை பிடிக்கப்பட்டார்.

அவரை விடுவிக்குமாறு, இந்தியா முறைப்படி வேண்டுகோள் விடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் இதற்கு ஆதரவு அளித்தன. ஜெனீவா ஒப்பந்தப்படி, அவரை விடுவிக்க வேண்டுமென்று, உலகளாவிய கோரிக்கை எழுந்தது. போரைத் தவிர்க்க வேண்டுமென்று, சமூகவலைதளங்களில் இருநாட்டு மக்களும் சமூக ஊடகங்களில் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர்.  இது, பெரிய அளவில் ‘ட்ரெண்ட்’ ஆனது.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைக்காட்சி வாயிலாக மக்களைச் சந்தித்துப் பேசினார். அதில், இந்தியாவைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். தீவிரவாதம் தொடர்பான ஆதாரங்களைக் கொடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.  ஆனால், அபிநந்தனை விடுவிப்பது தொடர்பாக எந்த அறிவிப்பையும் உடனடியாக வெளியிடவில்லை. 

அபிநந்தனை விடுவிக்க வேண்டுமென்ற குரல், தேசம் முழுவதும் ஓங்கி ஒலிக்கத் துவங்கிய நேரத்தில், 'தேசிய இளைஞர் தின விழாவில்' பிரதமர் மோடி உரையாற்றினார். டெல்லி இஸ்கான் கோயிலில் வழிபட்டு, சிறப்புரை நிகழ்த்தினார். டெல்லி மெட்ரோ ரயிலில் குழந்தைகளைக் கொஞ்சியபடி பயணம் செய்தார். அதன் பின்பு, அபிநந்தனை மீட்பது தொடர்பான  உயர்மட்டக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ச்சியாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் நடத்தி, மற்றவர்களுடைய கருத்துகளையும் உள் வாங்கினார். 

அபிநந்தனுக்கு என்ன ஆகுமோ என்று தேசமே பரபரத்துக் கிடந்த நிலையில், யாருமே எதிர்பாராத வகையில், ``நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிக்கிறோம்!’'  என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு, அடுத்த சில நிமிடங்களில் உலகம் முழுவதும் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், அகில இந்திய அளவிலான பா.ஜ.க பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் வீடியோ கான்பரன்சிங்கில் பேசிக்கொண்டிருந்தார். இம்ரான்கானின் அறிவிப்பை, பா.ஜ.க–வினரும் சேர்ந்து கொண்டாட வேண்டியதாயிற்று. இவ்விரு நிகழ்வுகளையும் ஒப்பிட்டு, பிரதமர் மோடியைக் குறித்து, சாதகமாகவும், பாதகமாகவும் `மீம்ஸ்’களும், `கமெண்ட்’களும் குவிந்தன.

இம்ரான் கான் அறிவித்தபடியே, வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளார் அபிநந்தன். அவர் அங்கே வரும் நாளில், அரசுத்திட்டங்களை அறிவிக்க கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறார் பிரதமர் மோடி. அங்கு நடக்கவிருந்த பா.ஜ.க கட்சி நிகழ்ச்சி மட்டுமே ரத்து செய்யப்பட்டிருந்தது. 

அமைதிக்கு அடையாளமாக, அபிநந்தனை பாகிஸ்தான் திரும்ப அனுப்பிய நிலையில், அதுபற்றி பிரதமர் மோடி ஒரு ட்வீட் கூட செய்யவில்லை. இதுவும் பலராலும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில், ‘அபிநந்தன் தமிழர் என்பதில் தேசமே பெருமைப்படுகிறது!’ என்று திருவாய் மலர்ந்துள்ளார் பிரதமர் மோடி.