Published:Updated:

`பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தருவோம்!' அ.தி.மு.க எம்.பி

`பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தருவோம்!' அ.தி.மு.க எம்.பி
`பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தருவோம்!' அ.தி.மு.க எம்.பி

"கல்லூரி மாணவியை காதல் என்ற பெயரில் ஏமாற்றி, ஆபாசப் படமெடுத்து மிரட்டிய கொடூரக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆளுங்கட்சி செயல்படவில்லை. அவர்களுக்கு தூக்குத்தண்டனை பெற்றுத்தருவோம்" என்று பொள்ளாச்சி அ.தி.மு.க எம்.பி மகேந்திரன் தெரிவித்துள்ளார். 

``பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த சபரிராஜன், ஃபேஸ்புக் மூலம் என்னோடு நட்பானார். நாளடைவில் அது காதலானது.  ஒரு நாள் அவுட்டிங் போகலாம் என்று சொன்னார். நானும் நம்பி போனேன். தன்னுடைய நண்பர்கள் சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசுவையும் அழைத்துவந்தார். ஊஞ்சவேலம்பட்டிக்கு காரில் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென்று சபரிராஜனுடைய  நண்பர்கள் என்னை ஆபாசமாகத் தொட்டார்கள். நான் கதறினேன். ஆனாலும், விடாமல்  என் ஆடையைக் கலைத்து செல்போனில் படம்பிடித்துக்கொண்டு, என் கழுத்தில் இருந்த செயினையும் பறித்துக்கொண்டு, நடு வழியில் இறக்கிவிட்டுட்டு போய்விட்டார்கள். பின்பு, பணம் கேட்டு மிரட்டினார்கள்"  என்று பொள்ளாச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த இந்தப் பகீர் புகாரைத்  தொடர்ந்து, வெளிவரும்  தகவல்கள் அங்கு பெரும் பதைபதைப்பை  ஏற்படுத்திவருகிறது.

ஒரு கல்லூரிப் பெண்ணை மட்டுமல்ல, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்தக் கும்பலிடம் பலர் சிக்கியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. பணக்காரப் பெண்களையும், அழகான பெண்களையும் குறிவைத்தே இந்தக் கும்பல் இயங்கிவந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களின் செல்போனில் 200-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்ததாக, இந்தக் குற்றவாளிகளில் சிலர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களைக் காப்பாற்ற அ.தி.மு.க புள்ளிகள் முயல்வதாகவும் பரவிய தகவல் மேலும் அதிரவைத்தது. இது தொடர்பாக, பொள்ளாச்சி தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தினர்.

இந்நிலையில் நேற்று, பொள்ளாச்சி அ.தி.மு.க எம்.பி மகேந்திரன், கோவை எஸ்.பி பாண்டியராஜனிடம் ஒரு மனுவைக்  கொடுத்தார். அதன் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில்,  நான்கு குற்றவாளிகளில்  மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனைத்  தாக்கிய இன்னொரு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்,  நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதில், ஆளும் கட்சியின் அழுத்தம் இருப்பதாகத் தவறான தகவல் பரப்பப்படுகிறது. யார் தவறு செய்தாலும், இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஆளுங்கட்சியின்மீது தவறான புகார் பரப்பப்படுவதால், அதுகுறித்து எஸ்.பி-யிடன் மனு அளித்துள்ளேன்.

இந்த விவகாரத்தால், பொள்ளாச்சியில் தேவையில்லாத பீதி ஏற்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளியை விரைவில் கைது செய்ய வேண்டும். இந்தக் கொடூரமான குற்றவாளிகளுக்கு எந்த விதமான பாரபட்சமும் காட்டாமல், கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.  சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை பெற்றுத்தருவோம். இதேபோல, வேறு பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தைரியமாகப் புகார் கொடுக்கலாம்.  குற்றவாளிகள் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். எதிர்க்கட்சிகள் இதை வேண்டுமென்றே அரசியல் ஆக்குகின்றனர்" என்றார்.

இதுதொடர்பாகப் பேசிய கோவை எஸ்.பி பாண்டியராஜன், " தலைமறைவான திருநாவுக்கரசைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் விரைவில் கைதுசெய்யப்படுவார். பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியினரின்  அழுத்தம் எதுவும் இல்லை" என்றார்.