Published:Updated:

`வரலாற்று அறிவை புதுப்பித்துக்கொள்ளுங்கள்!’- மோடியை கலாய்த்த காங்கிரஸ்

கலிலுல்லா.ச
`வரலாற்று அறிவை புதுப்பித்துக்கொள்ளுங்கள்!’- மோடியை கலாய்த்த காங்கிரஸ்
`வரலாற்று அறிவை புதுப்பித்துக்கொள்ளுங்கள்!’- மோடியை கலாய்த்த காங்கிரஸ்

தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியின் நேற்றைய பேச்சு பெரும் எதிர்ப்புகளுக்குள்ளாகியுள்ளது. `அரசியல் அறிவியலில் நீங்கள் இதை படிக்காமல் விட்டுவிட்டீர்கள் போல’ என காங்கிரஸ் சாடியுள்ளது.

பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தார்.  மதுரை முதல் ராமநாதபுரம் வரையிலான பணி முடிக்கப்பட்ட சாலை மற்றும் பணங்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான பணி முடிக்கப்பட்ட சாலைகளை திறந்துவைத்தார் மோடி. மேலும், குமரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மார்த்தாண்டம் மேம்பாலம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்களைத் திறந்து வைத்தார். மேலும், மதுரை முதல் செட்டிக்குளம் வரையும், செட்டிக்குளம் முதல் நத்தம் வரையிலான சாலை மற்றும் கன்னியாகுமரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா மற்றும் போக்குவரத்து மியூசியம் உள்ளிட்ட திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், `இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமனும், விமானப்படை விமானி அபிநந்தனும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

மேலும், இது அவரது பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அவரின் இந்தப் பேச்சு பல்வேறு தரப்பினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் பலர், முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா இல்லை, இந்திராகாந்திதான்  என்று சமூகவலைதளங்களில் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் காங்கிரஸ், பிரதமர் அலுவலகம் சார்பில் பதிவிடப்பட்டிருந்த ட்வீட்டை சுட்டிக்காட்டி, ``பிரதமர் மோடி தன்னுடைய வரலாற்று அறிவை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றதாக கூறிக்கொள்ளும் நீங்கள் இந்தப் பகுதியை மட்டும் விட்டுவிட்டீர்கள் போல!’ என்று சாடியுள்ளது. 


1975-ம் ஆண்டு மற்றும் 1980-ம் ஆண்டு ஜனவரி முதல் 1982-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை என இரண்டு முறை இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இந்திரா காந்தி பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.1983-ம் ஆண்டு பிரதமர் மோடி தனது குஜராத் பல்கலைகழகத்தில் `அரசியல் அறிவியலில்’ முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.