
கூட்டணி குருமா... இந்தியாவுக்கு சரியாக வருமா?
வழக்கமாக தோழர்கள்தான் மூன்றாவது அணிக்கு முதல் கோஷம் எழுப்புவார்கள். ஆனால், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், மூன்றாம் அணிக்கு அவர்கள் முழுக்குப் போட்டுவிட்டார்கள். இப்போது அதில் மும்முரமாக இருக்கிறார், சந்திரசேகர ராவ். அன்னாருக்கு மாநில அரசியல் போரடித்துவிட்டதுபோல...
மே 23, தீர்ப்பு நாள்... பி.ஜே.பி, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் தலா 150 எனும் எண்ணிக்கைக்கு சற்றுக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பெறுவார்கள் என்பது பரவலான கணிப்பு. மாநிலக் கட்சிகள் கை ஓங்குமென்பது உறுதியாகிவிட்டதால், நாடாளும் மனப்பான்மையில் இருக்கிறார்கள் சந்திரசேகர ராவும் சந்திரபாபு நாயுடுவும். வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம்.

மாற்று அணி என்பதற்கு அட்டகாசமான உதாரணம், ஜனதா அரசு. ஏறக்குறைய இந்தியாவின் எல்லாப் புறத்தில் இருந்தும் ஆதரவு பெற்ற அரசாக இருந்தது, ஜனதா அரசு. காரணம், ஜனதாவைக் கட்டமைத்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். 1977 ஜனவரி 17 அன்று அவசர நிலையை விலக்கிக்கொள்கிறார் இந்திரா காந்தி. தேர்தலுக்குத் தேதி குறிக்கிறார். சண்டிகர் சிறையில் இருந்தபடி, ‘இந்திராவை வீழ்த்தி ஜனநாயகத்தை மீட்பேன்’ என்று சவால்விட்ட, ஜெ.பி வெளியே வந்தார்; களமிறங்கினார். கையில் பணமில்லை, நிலையான அமைப்பு இல்லை. ஆனாலும் நம்பிக்கை இழக்கவில்லை. கால்மூட்டுகள் தேய நடையாய் நடந்து, கட்சி அலுவலகங்களில் கிடையாய்க்கிடந்து ஜனதாவைக் கட்டி எழுப்புகிறார். ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், லோக் தளம், சோசலிஸ்ட் போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனதாவை முழுமைப்படுத்துகிறார்.
ஆனால், ஆரம்பத்திலேயே தகராறு. ராஜ் நாராயண், சரண்சிங், வாஜ்பாய் என ஆளுக்கொரு பக்கம் முறுக்கிக்கொண்டு நின்றார்கள். ஆனால், ஜெ.பி-க்கு இருந்த மக்கள் செல்வாக்கு, அதைச் சமாளித்தது. 1977-ம் ஆண்டு தேர்தலில், அப்போதைய இந்தியாவின் மாபெரும் அரசியல் சக்தியாக திகழ்ந்த இந்திரா காந்தி வீழ்த்தப்பட்டார். முடிவுகள் வெளியான இரவே, பிரதமர் பதவிக்குத் தொடங்கியது அடிதடி. சரண் சிங் சண்டை பிடிக்க, ஜெகஜீவன் ராம் முறுக்க... பதவிச் சண்டையில் பங்கேற்காத மொரார்ஜி தேசாயைப் பிரதமராக்கினார் ஜெ.பி.

ஜெ.பி ஆக்டிவாக இருக்கும்வரை ஜனதாவில் பிரச்னை இல்லை. ஆட்சியில் அமர்ந்ததுமே அவசரநிலைச் சட்டம் திருத்தினார்கள். இந்திரா காந்தி மீது விசாரணை நடத்த ஷா கமிஷன் அமைத்தார்கள். உண்மை யிலேயே, இந்தியாவில் இதுவரை அமைந்ததிலேயே ஆகச்சிறந்த அமைச் சரவை, ஜனதா அமைச்சரவை. வெளியுறவுக்கு வாஜ்பாய், தகவல் தொடர்புக்கு ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் என பக்காவாக அமைந்தது அந்த அமைச்சரவை. ஆனால், இந்தியாவின் வரலாற்றை மாற்றிய மைக்கக் கிடைத்த அளப்பரிய வாய்ப்பை, பதவி ஆசையாலும் சுய நலத்தாலும் தவறவிட்டார்கள், ஜனதாக்காரர்கள். இவ்வளவுக்கும் அத்தனை பேரும் அனுபவஸ்தர்கள். 1979 ஜூலை 19-ம் தேதி, தேசாய் அரசு கவிழ்ந்தது. இந்திய அரசியலில், இடியென இறங்கி, மின்னலென காணாமல் போனது ஜனதா. அவர்கள் முழு ஆட்சிக் காலத் தையும் முடித்திருந்தால், ஜெ.பி கனவு கண்ட முழுப் புரட்சியேகூட ஏற்பட்டிருக்கும். ஆனால், ஆசையால் வீழ்ந்தார்கள், சுயநலத்தால் சுருங்கி னார்கள். இப்போது சந்திரசேகர ராவும் சந்திரபாபு நாயுடுவும் மம்தாவும் மாயாவதியும் அதே பதவி ஆசையால், அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.
இந்திரா காந்தி காலத்தில், இளைஞர்களை ஒன்றிணைக்க ஜெ.பி என்றொருவர் இருந்தார். ஆனால், இப்போது அப்படி ஒருவர் இல்லை. இது, இந்திய மக்களின் துரதிர்ஷ்டம். மூன்றாம் அணி ஆட்சி அமைத்தால், மாநில நலன்கள் முன்னுக்கு வரும் அதிகாரப் பரவலாக்கம் செய்யப் படும் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். முதலில் அவர்கள் நிலைத்த ஆட்சியை வழங்குவார்களா என்பதுதான் முக்கியம். இதுவரை மூன்றாம் அணி அமைத்த எந்த அரசும் முழு ஆட்சிக்காலத்தை முடித்ததே இல்லை. ஒன்று, காங்கிரஸ் கலைக்கும், இல்லை என்றால் பி.ஜே.பி கலைக்கும். எப்படிக் கலைப்பார்கள் என்றால், மாற்று அணியில் இரண்டாம் இடத்திலோ, மூன்றாம் இடத்திலோ இருக்கும் தலைவருக்குப் பதவி ஆசையைத் தூண்டுவார்கள். அவர்களும் வீழ்வார்கள். இது வரலாறு!

1991-ம் ஆண்டு பொதுத் தேர்தலில், வெற்றிபெற்று பிரதமரானார் நரசிம்ம ராவ். அவர் இறங்கியதும் மீண்டும் ஆரம்பித்தது பிரச்னை. தேவகவுடா வந்தார், போனார். குஜ்ரால் வந்தார், போனார். இடையில், வாஜ்பாய் அரசு வேறு இரண்டுமுறை கவிழ்ந்தது. இந்தியப் பொருளாதாரம் தேங்கியது. பாதுகாப்பு கேள்விக்குறியானது. 1999-ல் மீண்டும் வாஜ்பாய் ஆட்சி வந்தபிறகுதான், இந்தியாவின் வளர்ச்சி நிலைகொண்டது. பொக்ரான் அணுகுண்டும், கார்கில் வெற்றியும் நிலையான அரசு இருந்ததாலேயே நமக்குச் சாத்தியமானது.
இப்போது மீண்டும் பிரச்னைக்கு அரங்கு அமைக்கிறார் சந்திரசேகர ராவ். அவரிடம், ‘அதென்ன, காங்கிரஸ் அணியில் இருக்கும் கட்சிகளாகத் தேடிப்பார்த்து சந்திக்கிறீர்கள். பி.ஜே.பி அணியில் இருக்கும் நிதிஷ்குமார், உத்தவ் தாக்கரே போன்றவர்கள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?’ என்று கேட்டால், அமைதியாகிவிடுகிறார். சந்திரசேகர ராவ் எப்போதுமே சந்தேகத்துக்கு உரியவர். ஏனென்றால், ஒரு கையால் ‘கை’யைப் பிடித்துக்கொண்டு, மறுகையால் ‘தாமரை’க்குத் தண்ணீர் வார்த்த வரலாறு கொண்டவர்.
இன்னொரு பக்கம் சந்திரபாபு நாயுடு. எப்போதுமே, ‘காற்று எந்தப் பக்கம் வீசுகிறது’ என்று காத்திருப்பவர். பி.ஜே.பி கூட்டணியில் இருந்து வெளியேறியதுமே, மூன்றாம் அணிக்குத்தான் அடிபோட்டார் நாயுடு. ஆனால், கள நிலவரம் அதற்குத் தோதாக இல்லை. உடனே, காங்கிரஸ் அணிக்கு வந்துவிட்டார். அப்போதும்கூட, ‘மாநில அளவில் கூட்டணி கிடையாது. தேசிய அளவில் மட்டுமே கூட்டணி’ என்று தெளிவாக அடித்தார். மோடியைத் தவிர எவர் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் இருக்கும் ராகுலும், ‘எதற்கும் இருக்கட்டும்’ என்று நாயுடுவை அணிக்குள் வைத்திருக்கிறார். ஆனால், நாயுடு எப்போது வேண்டுமானாலும் எப்படியும் மாறுவார்.
நம்பிக்கையளிப்பவர் நவீன் பட்நாயக் மட்டுமே. ஆனால், ‘இங்கேயே நான் இன்னும் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன’ என்று சொல்லி விட்டார், அவர். ‘என் மக்களுக்கு நன்மை செய்யும் அரசை நான் ஆதரிக்கிறேன்’ என்றும் அறிவித்து விட்டார்.
ஆக, சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் தெற்கிலிருந்தும் மம்தா கிழக்கிலிருந்தும், மாயாவதி வடக்கிலிருந்தும் பிரதமர் கனவில் மிதக்கி றார்கள். பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மம்தாவை காங்கிரஸும் மாயாவதியை பி.ஜே.பி-யும் களமிறக்கும் என்கிறார்கள். மே 23 இரவில் இருந்தே, அரங்கேற்றவேளை ஆரம்பித்துவிடும்.

மம்தாவோ, மாயாவதியோ, சந்திரசேகர ராவோ, சந்திரபாபு நாயுடுவோ பிரதமர் பதவிக்கு ஆசைப் படலாம். அதற்கு அவர்களுக்கு உரிமையிருக்கிறது, ஆனால், தகுதி இருக்கிறதா என்பதே கேள்வி. மம்தாவும் மாயாவதியும் தெற்குப் பக்கம் எட்டிப் பார்ப்பது இல்லை. சந்திரசேகர ராவ் வடக்குப் பக்கம் போவதில்லை. மாயாவதியாவது கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் தமிழகத்திலும் வேட்பாளர் களை நிறுத்திப் போட்டியிடுகிறார். மம்தா சுத்தம்! சந்திரசேகர ராவ் அதனினும் சுத்தம். இப்படிப்பட்டவர்களின் தேசியப் பார்வை எப்படியிருக்கும்? காவிரிப் பிரச்னையில், எந்தப் பக்கம் நிற்பார் மம்தா? அயோத்திப் பிரச்னையில் என்ன நிலைப்பாடு எடுப்பார் சந்திரசேகர ராவ்?
தேசியக் கட்சிகளுக்கு மாநிலப் பார்வை வேண்டும் என்று சொல்லும் மாநிலக் கட்சித் தலைவர்கள், தங்களுக்குத் தேசியப் பார்வை இருக்கவேண்டியது அவசியம் என்பதை மறந்துவிடுகிறார்கள். ‘மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சியை விமர்சிப்பது மட்டுமே தேசியப் பார்வை ஆகிவிடாது’ என்பதை மாநிலக் கட்சிகள் உணர வேண்டும். இன்னொரு சரண்சிங்காக, சந்திரசேகராக, தேவகவுடாவாக இருப்பதைத்தான் நால்வர் அணி விரும்புகிறதா... சில மாதங்கள் அந்தப் பதவியில் இருப்பதால் என்ன கிடைத்து விடப்போகிறது, ‘இவரும் இந்தியப் பிரதம ராக இருந்தார்’ என்கிற பெயரைத் தவிர?
உதிரிகள் ஒன்று சேர்ந்து உருவான அரசுகள் இதுவரையிலும் நீடித்து நிலைக்கவே இல்லை என்பதுதான், இதுபோன்ற கூட்டணிகளைப் பார்த்து பயம்கொள்ள வைக்கிறது.
அதேசமயம் நிலையான அரசு என்று சொல்லிக் கொண்டு காங்கிரஸும் பி.ஜே.பி-யும் அதிகார வெறியோடு ஆட்டி வைத்த சங்கதிகள், அதீத பயத்தை உண்டாக்குகின்றன.
இனி அதற்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டோம் என்றபடி, ‘கூட்டுறவே நாட்டுயர்வு’ என்பதை நூறு சதவிகிதம் இவர்கள் நிரூபிக்க முற்பட்டால், உண்மை யிலேயே கோயில் கட்டிக் கொண்டாடலாம்.
- சக்திவேல்